வொருவி, வாமனூனெறி வழுவறத்தழுவினரொழுக, லேமவெண்குடை யிறைவமற்றி யாவதுமரிதே" என்ற சீவகசிந்தாமணியையும் இங்கே அறிக. மற்று- வினைமாற்று: மாயை செய் பெருமயக்கு - அவித்தை எனப்படும்; அது - திரிபுணர்வு, விபரீத ஞானம். ஞானமாவது - பிறப்பு வீடுகளையும் அவற்றின் காரணங்களையும் விபரீத ஐயங்களால் அன்றி உண்மையாக அறியும் மெய்யுணர்வு. வீடு - (எல்லாப்பற்றுக்களையும்) விட்டு அடையுமிடமெனக் காரணப்பெயர்; முக்தி - (உயிர்கள் மீண்டு வாராது சென்று சேரத்தக்க) வீடாகவுள்ளது என்றும் கருத்துக் கொள்ளலாம். இஃது என்பதில், ஆய்தம் உயிர்போலொலித்தது. 'உமக்கு' என்ற பாடத்துக்கு - வீமனாதியோரையும் உட்படுத்திய தென்க. பலித்த - முற்று. மயக்கு - மயங்கு என்னும் முதனிலை திரிந்த தொழிற்பெயர். அறிவு பின்பற்றும் ஆறு என எடுத்து, ஞானத்தையனுசரிக்கும் வழியெனலுமாம். (48) 8. | திகந்தவெல்லையுறப்பெரும்புவிசெல்லநேமிசெலுத்தநும் அகந்தையோடரசாளவெண்ணிலவ்வரவகேதனனுங்களோ டுகந்துவாழவொருப்படானினியுற்றதாயமுமுரிமையும் இகந்துமாதவமுயறலேகடனீறிலாவுலகெய்தவே. |
(இ -ள்.) திக் அந்தம் எல்லை உற - திக்குக்களின் முடிவான இடமளவும் பொருந்தவும், பெரு புவி செல்ல - பெரிய பூலோகம் முழுதிலும் பரவவும், நேமி செலுத்த - (ஆஜ்ஞா) சக்கரத்தைச் செலுத்தும்படி, அரசு ஆள - (நீங்கள்) இராச்சியத்தை ஆளுதற்கு, நும் அகந்தையோடு - உங்களது செருக்குடனே, எண்ணில் - நினைத்தால், அ அரவ கேதனன் - பாம்புக்கொடியையுடைய அத்துரியோதனன், உங்களோடு உகந்து வாழ ஒருப்படான் - உங்களுடன் மகிழ்ச்சியாய்க் கலந்து வாழ்வதற்கு உடன்படமாட்டான்; (ஆதலால்), இனி - இனிமேல், உற்ற தாயமும் உரிமையும் இகந்து - (உங்களுக்குப்) பொருந்தியுள்ள இராச்சியபாகத்தையும் அதன் அரசாட்சியுரிமையையும் விட்டு, ஈறு இலா உலகு எய்த மாதவம் முயறலே - அழிதலில்லாத முத்தியுலகத்தைப் பெறும் பொருட்டுப் பெரிய தவத்தைச் செய்வதுவே, கடன் - (உங்களுக்குக்) கடமையாம்; (எ - று.) நீர்,நிலையில்லாத அரசாட்சியை விரும்பி ஆளக் கருதினால் துரியோதனனோ உங்களுடன்கூடி வாழ உடன்படான்; செருக்குக் கொண்டு போர் புரிதலோ தகுதியன்று; ஆதலால் அக்கருத்தை விட்டு நிலையான பெருநாடு பெறும்படி வனத்திற் சென்று தவமியற்றுதலே தகுதியென்கிறான். எல்லா வுலகங்களும் அழியும் பிரளய காலத்திலும் நித்தியமான முத்தியுலகத்துக்கு அழிவு இல்லை யாதலாலும், அந்தமிலின்பத்தை யுடைமையாலும், பரமபதத்தை 'ஈறிலாவுலகு' என்றது. 'நேமி செலுத்தும் நும் அகந்தையோ டமராட எண்ணல்' என்ற பாடத்துக்கு - ஆஜ்ஞாசக்கரத்தைச் செலுத்தவேண்டுமெனக் கருதும் உமது செருக்குடனே போர்செய்ய |