பக்கம் எண் :

64பாரதம்உத்தியோக பருவம்

மாட்டாமல் பின்தொடர்ந்து சென்றுஅன்போடு 'மைந்தா!' என்று
அழைத்தவளவில், அரணியத்திலுள்ள மரம் முதலியன எல்லாம் 'ஏன்'? என்று
விடை தந்தன என்ற வரலாற்றால், 'சராசரங்களனைத்துமாகிய சுகன்'
என்றதென அறிக.   இதனால் வேதவியாசபகவானினும் மேம்பட்ட
ஞானமுடையவன் சுகமுனியென்பதும், சுகமுனிவன் பகவானது அம்சமாதலால்
சராசரங்களெல்லாம் அவனது சொரூபமாமென்பதும் அறிக; இனி
எல்லாப்பொருள்களிலும் உள்ளும் புறம்பும் நிறைந்துள்ள இறைவனை
ஒற்றுமையுறப் பாவனை செய்தலால், சுகன் சராசரங்களனைத்துமாவன்
என்றலும் ஒன்று.  இந்தச் சுகனே பாகவத புராண சரித்திரத்தைப் பரீட்சித்து
மகாராசனுக்குக் கூறுபவன்.

     பராசரன் - வியாச முனிவரது தந்தை;வசிஷ்டமகாமுனிவரது புத்திரனான
சக்தி முனியின் மைந்தன்; தத்துவ ஞானத்தில் மிகச் சிறந்தவன்;
எல்லாப்புராணங்களுள்ளுஞ் சிறந்த ஸ்ரீவிஷ்ணுபுராணத்தை மைத்திரேய
முனிவனுக்கு அருளிச்செய்தவன்; அன்றியும், ஸ்மிருதிகளெல்லாவற்றினும்
கலியுகத்திற்குச் சிறந்ததெனப்படுகிறதொரு ஸ்மிருதியை இயற்றினவன்.  வியாசர்
மூலமாக உற்பவித்த குலமாதலால், திருதராட்டிரன் பாண்டு இவர்களது குலம்
'பராசரன் குலம்' எனப்பட்டது.  சரம் - சஞ்சரிப்பவை, அசரம் -
சஞ்சரியாதவை.  எழுவகைப் பிறப்பினுள், தேவர், மக்கள், விலங்கு, பறவை,
ஊர்வன, நீர்வாழ்வன இவ்வாறும் சரமும், ஸ்தாவரம் - அசரமுமாம்.  சரம்,
ஜங்கமம் இயங்குதிணைப்பொருள், இயங்கியற்பொருள் என்பனவும், அசரம்,
ஸ்தாவரம், நிலைத்திணைப்பொருள், நிலையியற்பொருள் என்பனவும் - ஒரு
பொருளன.  நிராசர் என்றது - முற்றத்துறந்த முனிவர்களை.       (50)

10.

பாரிலாசையுநின்னிராசபதத்திலாசையுமன்னுவெம்
போரிலாசையுநேயமங்கையர்போகமன்பொடுபுதிதுணுஞ்
சீரிலாசையும்விட்டுநன்னெறிசேரவுன்னுதிநீயெனத்
தூரிலாசையறத்துறந்தருள்சுருதிமாமுனிசொல்லவே.

     (இ - ள்.) பாரில் ஆசையும் -பூமியினிடத்திலுள்ள ஆசையையும், நின்
இராசபதத்தில் ஆசையும் - உனது இராச்சியாதிகாரத்திலுள்ள ஆசையையும்,
மன்னு வெம் போரில் ஆசையும் - பொருந்தின கொடிய யுத்தஞ்செய்தலிலுள்ள
ஆசையையும், நேயம் மங்கையர் போகம் அன்பொடு புதிது உணும் சீரில்
ஆசையும் - அன்புள்ள மாதர்களது கலவியின்பத்தை அன்புடனே புதிது
புதிதாக அனுபவிக்கும் பெருமையில் உண்டாகும் ஆசையையும், விட்டு -
(முழுவதுந்) துறந்து, நீ -, நல்நெறி சேர - எல்லா (வழிகளிலுஞ்) சிறந்த முக்தி
மார்க்கத்தை அடைவதற்கு, உன்னுதி - மனத்தில் நினைத்திடுவாய், என -
என்று, தூர் இல் ஆசை அற துறந்தருள் சுருதி மாமுனி - அடங்குதலில்லாத
ஆசையை முழுவதும் ஒழித்தருளிய வேதம் வல்ல பெரிய சஞ்சய முனிவன்,
சொல்ல - (தருமனைநோக்கிச்) சொன்னவளவில்-(எ - று.)- 'எனக்கனன்றிவை
பேசினான்' என மேல் பன்னிரண்டாம் கவியோடு குளகமாய் முடியும்.