கடவுள் - தெய்வத்தன்மையுடைய, மாருதி -வாயுகுமாரனான அனுமானது, துணைவன் - தம்பியான வீமசேனன், - முனியும் - சஞ்சயமுனிவனும், அ பெரு முரசு உயர்த்தவனும் - பெரிய பேரிகையின் வடிவமெழுதிய கொடியை (வெற்றிக்கு அறிகுறியாக) உயர எடுத்த அத்தருமபுத்திரனும், புகன்றன - சொன்ன வார்த்தைகளை, முன்னி - ஆலோசித்து, இனி நாம் உரைப்பது கடன் என - இனிமேல் நாமும் - பேசுவது கடமையாமென்று நிச்சயித்து, துணை விழி சிவப்ப எழ - (தனது) இரண்டு கண்களிலும் செந்நிறம் மிகுதியாக உண்டாகும்படி, வெம் சினம் மூள - கொடிய கோபம் உண்டாகி வளராநிற்க, எழிலியின் தனிதம் உற்றன உருமின் - மேகத்தினது முழக்கத்தைப் பொருந்தினவான இடிகளைப்போல, இவை சாற்றுவான் - இந்த வார்த்தைகளைக் கூறுபவனானான்; (எ - று.)- அவற்றை, மேல் நான்கு கவிகளிற் காண்க. மருத்- வாயு; அவனது குமாரன் மாருதி: தத்திதாந்தநாமம். சிவபிரானது அம்சமாதலாலும், இராமபிரானது பூர்ண கருணைக்கு விஷயமானவனாதலாலும், இனிப் பிரமபட்டம் பெறுதற்கு உரியவனாதலாலும் அனுமான் 'கடவுள் மாருதி' எனப்பட்டான். தாய் வேறாயினும் வீமன் அனுமான் என்ற இருவரும் வாயுவின் மக்களாதலால், வீமனை 'மாருதி துணைவன்' என்றது. தினகரனைக் கனியென வவ்விய மாருதியினது துணைவனெனவே, வீமனும் தமையன்போலவே பல பராக்கிரம சௌரிய தைரிய வீரியங்களிற் சிறந்தவன் என்று குறிப்பித்தபடியாம். தனிதம் என்னும் இடியின் பெயர் - பின் 'உரும்' என வருதலால், முழக்க மாத்திரத்தை யுணர்த்திற்று. தினகரன் - (தனது சேர்க்கையாற் பகலையும் நீக்கத்தால் இரவையுந் தந்து) நாளைச் செய்பவன். (54) இது முதல் ஐந்து கவிகள் - ஒரு தொடர்;அவற்றுள், முதல் நான்கு கவிகள் - வீமன் வார்த்தை. 14. | எமக்குநீபிரமப்பெருங்குருவெங்களோடெதிராகுவார் தமக்குமொக்குமொருழையிலேயருள்சாரவோதுதறக்கதோ அமர்க்குநென்னலுலூகநாமனொடறுதியிட்டனனரவினஞ் சுமக்குமேதினியாளுவோர்வினைவேறுபட்டதுசொல்வரோ. |
(இ - ள்.) நீ -, எமக்கு -எங்களுக்கு, பிரமம் பெரு குரு - தத்துவப்பொருளை உபதேசிக்குஞ் சிறந்த ஆசிரியன்; எங்களோடு எதிர் ஆகுவார் தமக்கும் ஒக்கும் - (இத்தன்மை) எங்களுடன் பகைவர்களாயுள்ள துரியோதனாதியர்களுக்கும் ஒத்ததே; (அப்படியிருக்க), ஓர் உழையிலே அருள் சார ஓதுதல் தக்கதோ - ஒரு இடத்திலே [பட்சபாதமாகத் துரியோதனாதியர் பக்கலிலே] கருணைபொருந்த இங்ஙனம் பேசுதல் (உனக்குத்) தகுதியோ? [அன்றென்றபடி]; நென்னல் உலூகநாமனொடு அமர்க்கு அறுதி இட்டனன் - நேற்று உலூகனென்னும் பேருள்ள முனிவனோடு (துரியோதனன்) போர் செய்தற்குத் துணிந்து சொன்னான்; அரவு இனம் சுமக்கும் மேதினி ஆளுவோர் - பாம்பின் கூட்டத்தால் தாங்கப்படுகிற நிலவுலகத்தை அரசாளும் மன்னர்கள், |