பக்கம் எண் :

68பாரதம்உத்தியோக பருவம்

வினைவேறுபட்டது சொல்வரோ - (மனம் ஒன்றாயிருக்கத்) தொழில் வேறுபட்ட
வார்த்தையைச் சொல்வார்களோ? [சொல்லமாட்டார்கள் என்றபடி.] (எ - று.)

    "மனம்வேறு சொல்வேறு மன்னுதொழில்வேறு, வினைவேறு பட்டவர்பால்
மேவும் - மனமே, மனமொன்று சொல்லொன்று வான்பொருளுமொன்றே,
கனமொன்று மேலவர் தங்கண்" என்றபடி திரிகரணங்களும் ஒத்திராமல்
மனத்திலொன்றும் காரியத்திலொன்றும் சொல்லிலொன்றுமாக இருத்தல்
அதமரியற்கையாம்.  எப்பொழுதும் யாரிடத்தும் நடுவுநிலைமை தவறுதல்
சிறிதுந் தகாதாதலால், ஒருழையிலே 'அருள்சாரவோதுதல் தக்கதோ' என்றான்
- பிரமம் - வேதமும் ஒழுக்கமும் மந்திரமும் தவமும் ஞானமும் கடவுளுமாம்.
பிரமகுரு - இரண்டாம்வேற்றுமையுருபும் பயனுமுடன் தொக்கதொகை:
உவமைத்தொகையாய், பரம்பொருளோடொத்த குரு என்றுமாம்.  அரவினம்
என்றது - அஷ்ட மகா நாகங்களை:  அவை - அநந்தன், கார்க்கோடகன்,
குளிகன், சங்கபாலன், தக்ஷகன், பதுமன், மகாபதுமன், வாசுகி என்பன.
ஆயிரந் தலைகளையுடைய சர்ப்பராசனான ஆதிசேஷன் கீழிருந்து
அத்தலைகளால் பூமியைத் தாங்காநிற்க, இந்த எட்டுப்பாம்பும் எட்டுத்திக்கிலு
மிருந்து பூமியை உடன் தாங்கும்:  இவ்வஷ்ட நாகங்கள் காசியப
முனிவனுக்கும் அவன் மனைவிமார் பலருள் கத்துரு என்பவளுக்கும்
பிறந்தவை.    (55)

15.

இடக்கணாகவலக்கணாகவிரண்டுமொக்குமெனாமலே
பிடர்க்கணேமதியானகண்ணிலிபெற்றியல்லனபேசினான்
கடற்பெரும்படைகூடிநாளையணிந்தவெய்யகளத்தினா
னடற்கடுங்கதையாலடித்திடுமதிசயந்தனையையகேள்.

     (இ - ள்.) பிடர்க்கணே மதி ஆன கண்இலி - பின்னிடத்திலே
புத்தியுள்ள பிறவிக்குருடனான திருதராட்டிரன், இடக்கண் ஆக வலக்கண் ஆக
இரண்டும் ஒக்கும் எனாமலே - இடக்கண்ணேயாயினும் வலக்கண்ணேயாயினும்
இவ்விரண்டுகண்களும் (ஒன்றோடொன்று வேறுபாடின்றித் தமக்குள்) சமமாம்
என்று நினையாமலே, பெற்றி அல்லன பேசினான் - (தனக்குப்)
பெருமையல்லாத வார்த்தைகளைச் சொன்னான்.  (அது நிற்க).  நாளை -
நாளைக்கு, கடல்பெருபடைகூடி அணிந்த வெய்யகளத்தில் - கடல்போன்ற
பெரிய சேனைகள் சேர்ந்து முறையே வகுக்கப்பட்டு நின்ற கொடிய
யுத்தகளத்திலே, நான்-, அடல் கடு கதையால் அடித்திடும் - வெற்றியையுடைய
கொடுமையான கதாயுதத்தால் (பகைவர்களை) அடிக்கப்போகிற, அதிசயந்தனை
- வியப்பை, ஐய - ஐயனே! கேள் - கேட்பாயாக; (எ - று.)

    திருதராட்டிரன் தன் புத்திரர் இன்பமும் நாங்கள் துன்பமும் அடையுமாறு
எங்களை நாட்டையிழந்து காட்டில் வசிக்கக்கருதி, முன்பு "உன்னுணர்வு
உனக்கேயுள்ளது உன் பெருந்துணைவரான கொன்னுனை வேலோர்
வென்றுகொண்டன கொடுத்தலொல்லார், பின்னுறவுரிமையாவும் பெறுதி
நின்பெருமைக்கேற்ப, முன்னுளோர் பலருஞ்செய்த முறைமையே முன்னுக'
என்று கூறியதல்லாமல்