இப்பொழுதும்நாங்கள் நாட்டிற்பற்று ஒழியும்படி உன்னுடன் கூறியனுப்பியது சிறிதும் அறநெறியன்று என்றான். இனித் தன்மக்களுக்கு என்னால் நேரும் அபாயத்தைக் கருதாது தன்மக்கள் இராச்சியம் பெறும் உபாயத்தையே கருதுதலால், பிடர்க்கணே மதியான கண்ணிலியெனப்பட்டான். சத்துருகாதிநியென்னும் வீமனது கதையின் பெயருக்குப் பகைவரைக் கொல்வதென்பது பொருளாதலால், அக்கருத்துத்தோன்ற, அடற்கடுங்கதை யெனப்பட்டது. ஆக என்னுஞ் சொல் இரண்டும் - விகற்பப்பொருளன. இது - இடைச்சொல்லின்பாற்படும். (56) 16. | உவந்துநீமொழிதவமருந்தவமல்லவொன்னலருடலுகுஞ் சிவந்தசோரியின்மூழ்கிமாழ்குசிரங்கள்போய்நடமாடுமக் கவந்தகானகமேவியூடுறுதீயவெவ்வினைகளைவதே தவந்தனிற்றலையானவீடுறுதவமெமக்கிதுசாலுமே. |
(இ - ள்.) நீ உவந்து மொழி தவம் -நீ மனமகிழ்ந்து உபதேசித்த தவவொழுக்கங்கள், அரு தவம் அல்ல - (எங்களுக்கு) அருமையான (சிறந்த) தவமல்ல; ஒன்னலர் - பகைவர்களது, உடல் - (அடிபட்ட) உடம்பினின்று, உகும் - பெருகுகிற, சிவந்த சோரியில் - செந்நிறமுடைய இரத்தத்திலே, மூழ்கி - நீராடி,-மாழ்கு சிரங்கள் போய் நடம் ஆடும் - அழிகிற தலைகள் நீங்கிக் கூத்தாடுகிற, கவந்தம் - உடற்குறைகளாகிய, அ கானகம் - அந்தப் போர்க்களமாகிய காட்டில், மேவி - பொருந்திநின்று, ஊடு உறு தீய வெவ்வினை களைவதே - இடையிலே நேர்ந்த மிகவுங்கொடிய (பகைவர்களாகிய) செய்கைகளை நீக்குவதே, தவந்தனில் தலை ஆன வீடு உறு தவம் - (நீ சொல்லுந்) தவத்தினுஞ் சிறந்ததான வினைநீங்குதல் பெறுதற்குரிய தவமாகும்; எமக்கு இது சாலுமே - எங்களுக்கு இத்தவமே அமையும்; (எ-று.) "நீமொழிதவம் அருந்தவமல்ல: ஒன்னலர்வினை களைவதே தலையான தவம்" என்று தவத்தினில் அத்தன்மையை மறுத்துப் பகைவெல்வதில் அத்தன்மையையேற்றிக் கூறியது அபநுதியணியாம்: இந்தவணி உருவகவணியை அங்கமாகப் பெற்றுவந்தது. பகைவினை களைவதே தவம் என்பதற்கேற்ப, மூழ்குதலும், கானகமேவுதலும், வினைகளைதலும், வீடுறுதலும் கூறப்பட்டன. முனிவர்க்கே சிறந்தது, அவ்வினை களைந்து வீடுறுந்தவம்; அரசராகிய எங்களுக்கோ, இவ்வினை களைந்து வீடுறு தவமே மிகச்சிறந்தது என்றான். நீராடுதலும், வனவாசஞ்செய்தலும் தவத்திற்கு உறுப்பாவதுபோல, இரத்த வெள்ளத்தில் ஆழ்தலும், தலையற்ற உடற்குறைகளினிடையே இருத்தலும், போர் வெற்றிக்கு உறுப்பாமென்க. கோபாவேசத்தோடு விரைந்து போர்செய்து நின்ற வீரர்களது உடல்கள் பகைவரால் தலையறுபட்டபின்பும் சிறிது நேரம் கீழ்விழாது நின்றவாறே பதைபதைத்துக் கைகால்கள் துடிப்பனவற்றை, 'மாழ்குசிரங்கள் போய் நடமாடு மக்கவந்த கானகம்' என்றார். சேனையில் மிகப்பலவுயிர் இறந்த பொழுது ஒரு கவந்தம் எழுந்து நின்று ஆடுமென்பதை இங்குக் குறித்ததாகவுங் கொள்ளலாம், |