பொழுது ஆலோசனைச்சபையில் எல்லா அரசர்களையும் நோக்கிக்) கூறியருளினான்; (எ - று.) - ஆல் - ஈற்றசை; ஆதலால் என்பதன் விகாரமெனினும் அமையும். வல்-சூதாடுகருவி;இங்கே இலக்கணையாய் ஆட்டத்தைக் குறித்தது. அவன் - சேய்மைச்சுட்டு. வேந்து - அரசத்தன்மை; இங்கே வேந்தனுக்குப் பண்பாகுபெயர்; அரசு அமைச்சு தூது என்பனவும் இங்ஙனமேநிற்கும். நீதி - நல்வழியடைவிப்பதென்று காரணப்பொருள். ஸு யோதநன் என்னும் பெயர்க்கு நல்ல [வெற்றியைத் தருகிற] போரையுடையவனென்று பொருள் [சு - நன்மை, யோதநம் - யுத்தம்]. என்று சொன்னான் என்றும், கல்லினால் விலக்கிய என்றும் இயையும். கல் - மலைக்கு இலக்கணை. முகில் என்னுஞ்சொல் இரண்டனுள், முன்னது மழைக்கு முதலாகுபெயரும், பின்னது கண்ணனுக்கு உவமவாகுபெயருமாம். முகில் என்பது - சொல்லால் பால்பகா அஃறிணையாயினும், பொருளால் உயர்திணையாண்பாலாதலால் சொன்னான் என்பதைக் கொண்டது. திருவாய்ப்பாடியில் ஆயர்களெல்லாருங் கூடி மழையின்பொருட்டாக இந்திரனை யாராதித்தற்கென்று சமைத்த சோற்றைக் கண்ணன் அவனுக்கிடாதபடி விலக்கிக் கோவர்த்தன மலைக்கு இடச்சொல்லி, தானே ஒருதேவதாரூபமாய் அமுது செய்தருள, அவ்விந்திரன் கோபத்தோடு புஷ்கலா வர்த்தகம் முதலிய மேகங்களை ஏவிக் கண்ணன் விரும்பி மேய்க்கிற கன்றுகளுக்கும் பசுக்களுக்கும் கண்ணனுக்கு இஷ்டரான இடையருக்கும் இடைச்சியருக்குந் தீங்கு தரும்படி கல்மழையை ஏழுநாள் இடைவிடாது, பெய்வித்தபொழுது கண்ணன் கோவர்த்தனமென்னும் மலையையெடுத்துக் குடையாகப் பிடித்து மழையைத் தடுத்து எல்லாவுயிர்களையும் இடையூறு சிறிதுமின்றிக் காத்தருளின னென்பது - இதிற்குறித்த கதை. கரியமாமுகில் சொன்னான் என்பதற்கு - "சேயோன் வீழ்வுவிழைவோடு சிறந்தபின்னர் மாயோனுமாயாக்குரு மைந்தரு மன்னர்யாரும், போயோதை வீதி யுபலாவி. புகுந்து தங்கள், ஆரோதனத்துக்குறு நீர்மைக ளாயலுற்றார்" எனக் கீழ்க் கதைத் தொடர்ச்சியை யுணர்க. பாண்டவ சகாயனான கண்ணன் இங்ஙனம் முதலிற்சொன்னது, அங்குள்ள மற்றையோரது கருத்து வெளியாதற்பொருட்டென்க. 'கன்முகில் கல்லினால் விலக்கிய முகில்' என ஒரு சாதுரியந்தோன்றக் கவி கூறினார். கண்ணனுக்கு முகில் உவமை - கருமைக்கு மாத்திரமேயன்றிக் கைம்மாறு கருதாது கருணை மழை பொழிதற்கும் தண்மையுடைமைக்குமாம். (2) துரியோதனனிடத்தினின்று இராச்சியத்தைமீட்டல் தகாதென்று பலராமன் கூறுதல். 3. | உரியவம்புவியுதிட்டிரன்றனையவணுற்றவர் பலர்காணப் பரியவன்பெருஞ்சூதினால்வென்றுபல்லாண்டடிப்படவாண்டான் திரியவன்புடன்வாங்குதற்கெண்ணுமித்தீமதிகொடிதென்று கரியவன்புகல்கட்டுரைகேட்டபின்காமபாலனுஞ்சொன்னான். |
|