(இ - ள்.) இவை சொன்ன வீரனை -(என்று) இத்தன்மையான வார்த்தைகளைச் சொன்ன வீரனாகிய வீமனை, நேமியான் - சக்கராயுதமுடைய கண்ணபிரான், நிற்க என்று நிறுத்தி - (இவ்வளவோடு) பேச்சொழிவாயென்று சொல்லிப் பேசாது நிறுத்திவிட்டு, 'இவர்கள் - இந்தப் பாண்டவர்களுக்கு, இ பூமி ஆளுதல் - இந்த நிலவுலகத்தை அரசாளுதலும், அவர்களுக்கு - அத்துரியோதனாதியர்களுக்கு, அமர் உலகம் ஏறுதல் - (இவர்களாற் போரிற் கொல்லப்பட்டுத்) தேவலோகத்து வீரசுவர்க்கத்திற்சென்று சேர்தலும், புரிதவம் - செய்யுந்தவமாம்; (ஆதலால், அவற்றைத் தடுத்திடுதற்கு), யாம் யாதும் உரைத்தும் பயன் என் - நாம் எந்தத் தருமத்தை உபதேசித்தாலும் பிரயோசனம் என்ன? [ஒன்றும் பயன்படாது]; (ஆகையால்), நீ எழுந்தருள் - நீ புறப்பட்டுச் செல்வாய்,' என்ன - என்று, உள் காமியாத முனிக்கு - மனத்தில் (யாதொரு பொருளையும்) விரும்புதலில்லாத சஞ்சயமுனிக்கு, நல் உரை கட்டுரைத்தனன் - நல்ல வார்த்தைகளை ஒழுங்காகக் கூறியருளினான்; (எ-று.) கண்ணன் முக்காலமும் உணர்ந்த முழுமுதற்கடவுளாதலால், 'இவர்கள் இப் பூமியாளுதல் அவர்களுக்கமருலக மேறுதல் புரிதவம்' என முடிவை முன்னமே கூறினான். திருதராட்டிரனது வேண்டுகோளால் தருமனிடம் வந்து இவ்வாறு கூறினது மாத்திரமே யொழியச் சஞ்சயனுக்குத் தனக்காகத் துரியோதனாதியரிடம் விருப்பும் பாண்டவரிடம் வெறுப்பும் இல்லையென்பார், 'உட்காமியாத முனி' என்றார். இங்கே, காமம் வெகுளி மயக்கம் முதலிய மற்றைக் குற்றங்களுக்கும் உபலட்சணம். அமரருலகம் என்பது, அமருலகமென விகாரப்பட்டது; "அன்றேயாள்வாரமருலகே" என்றார் திருமங்கைமன்னனும். நரகம் போலன்றித் தேவருலகம் மேலுள்ளதாதலால், ஏறுதல் என வேண்டிற்று. யாம் என்ற முன்னிலையுளப்பாட்டுத் தன்மைப்பன்மையால், தன்னையும் சஞ்சயனோடு சேர்த்து அவனைச் சாந்தப்படுத்தியவாறு. உள் என்னும் உள்ளிடத்தின் பெயர் அங்குள்ள மனத்திற்கு இடவாகுபெயர். (59) சஞ்சயமுனிவன் திரும்பிச்சென்று திருதராட்டிரனுடன் செய்திகூறுதல். 19. | இருந்தபேரவைவிட்டுமற்றவரிதயமிப்படியெனநினைந் தருந்தவக்கடன்மீளவத்தினபுரியடைந்தவனிபனுடன் பரிந்தறன்றருகாளைசொற்றதும்வீமனின்றுபகர்ந்ததுங் குருந்தொசித்தருண்முகிலுரைத்ததுமுண்மையாம்வகைகூறினான். |
(இ - ள்.) அரு தவம் கடல் -(பிறராற் செய்தற்கு) அருமையான தவத்துக்குக் கடல்போன்ற சஞ்சய முனிவன், அவர் இதயம் இப்படி என நினைந்து - பாண்டவர்களது உள்ளக்கருத்து இத்தன்மையதென்று ஆலோசித்துக்கொண்டு, இருந்த பேர் அவை விட்டு - (தான்) சென்றிருந்த பெரிய சபையை நீங்கி, மற்று - பின்பு, மீள அத்தினபுரி அடைந்து - மறுபடி அத்தினாபுரியைச் சேர்ந்து, அறன் |