பக்கம் எண் :

கிருட்டிணன் தூது சருக்கம் 73

கடவுள் வணக்கம்.

1.பேர்படைத்த விசயனுடன் மும்மைநெடும் பிறவியினும்
                                   பிரியானாகிச்,
சீர்படைத்த கேண்மையினாற் றேரூர்தற்கிசைந்தருளுஞ்
                               செங்கண் மாலைப்,
பார்படைத்த சுயோதனற்குப்படையெடேனமரிலெனப்
                               பணித்த கோவைக்,
கார்படைத்தநிறத்தோனைக் கைதொழுவார் பிறவாழிக்
                                 கரைகண் டாரே.

     (இ -ள்.) பேர் படைத்த - கீர்த்தியைப்பெற்ற, விசயனுடன் -
அருச்சுனனுடனே, மும்மை நெடும் பிறவியினும் - மூன்று சிறந்த
திருவவதாரங்களிலும், பிரியான் ஆகி - நீங்காதவனாயிருந்து, சீர் படைத்த
கேண்மையினால் - சிறப்புப் பொருந்திய நட்பினால், தேர் ஊர்தற்கு
இசைந்தருளும் - (அவ்வருச்சுனனுக்குச் சாரதியாய்த்) தேரைச் செலுத்துதற்கு
உடன்பட்டருளிய, செம் கண் மாலை - சிவந்த திருக்கண்களையுடைய
திருமாலின் திருவவதாரமானவனும், பார் படைத்த சுயோதனற்கு -
இராச்சியத்தைப் பெற்றுள்ள துரியோதனனுக்கு, அமரில் படை எடேன் என
பணித்த - போர்க்களத்தில் (எதிர்ப்பக்கத்தில்) ஆயுதத்தை யெடுத்துப் போர்
செய்யே னென்று வாக்குத்தத்தஞ்செய்த, கோவை - (யாவர்க்குந்) தலைவனும்,
கார் படைத்த நிறத்தோனை - மேகம்பெற்ற கரிய நிறத்தைத் தான்
உடையவனுமாகிய கண்ணபிரானை, கைதொழுவார் - கைகூப்பி வணங்குபவர்,
பிற ஆழி கரை கண்டாரே - பிறப்பாகிய கடலின் அக்கரையை அடைந்தவரே
யாவர்; (எ - று.)                                  

     இதுகாப்புச்செய்யுள்.  இதனால், தாம் எடுத்துக்கொண்ட சருக்கம்
இடையூறில்லாமல் இனிது முடியும்பொருட்டு உயர்ந்தோர் வழக்கத்தின்படியே
கவி கடவுள்வாழ்த்துக் கூறுகிறார்.  கடவுள் வணக்கம் இரண்டு வகைப்படும்;
வழிபடுகடவுள் வணக்கமென்றும், ஏற்புடைக்கடவுள் வணக்கமென்றும்;
வழிபடுகடவுள் வணக்கமாவது - தாம் தாம் குலதெய்வமாகக் கொண்டு
ஆராதிக்கின்ற கடவுளை வணங்குதல்; இதற்கு உதாரணம் -
வைஷ்ணவசமயத்தார் விஷ்ணுவையும், சைவமதத்தவர் சிவனையும், ஜைநர்
ஜிநனையும், பௌத்தர் புத்தனையும் வணங்குதல் போல்வன; ஏற்புடைக்கடவுள்
வணக்கமாவது - தாம் தாம் செய்ய எடுத்துக்கொண்ட காரியத்துக்குத்
தகுதியையுடைய கடவுளை வணங்குதல்; இதற்கு உதாரணம் - இராமாயணங்
கூறுபவர் இராமனையும், பாகவதஞ் சொல்பவர் கண்ணனையும்,
கந்தபுராணமுரைப்பவர் சுப்பிரமணியமூர்த்தியையும் வணங்குதல் போல்வன.
ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தவரான இந்நூலாசிரியராற் கூறப்பட்ட இவ்வாழ்த்து
தமக்கு வழிபடுகடவுளும், எடுத்துக்கொண்ட இதிகாசத்துக்கு
ஏற்புடைக்கடவுளுமாகிய திருமாலைப் பற்றியதென அறிக.  கண்ணபிரான்
இந்நூலுக்கு ஏற்புடைக்கடவுளென்பது இந்நூலாசிரியர் தற்சிறப்புப்பாயிரத்தில்
"முன்னுமாமறை முனிவருந்தேவரும் பிறரும், பன்னுமாமொழிப்பாரதப்
பெருமையும் பாரேன், மன்னுமாதவன் சரிதமுமிடையிடை வழங்கும்.
என்னுமாசையால் யானுமீதியம்புதற் கிசைந்தேன்" எனக் கூறிய