எண்ணமோ? மீள சென்று - மறுபடியும் போய்,பைவர் ஆய் - துன்பமனுபவிப்பவராய், அருங் கானில் - (வசித்தற்கு) அருமையான காட்டிலே, பயின்று திரிதர - பொருந்திச் சஞ்சரிக்க, நினைவோ - எண்ணமோ? பகைத்த போரில் - (ஒருவரோடொருவர்) பகைத்துச் செய்கிற யுத்தத்தில், உய்வர் ஆர் என - (நமக்கு எதிரிற்) பிழைப்பவர் யார்?' என்றுகருதி, விரைவின் - விரைவாக, உருத்து எழுந்து - கோபங்கொண்டு புறப்பட்டு, பொர - போர்செய்தற்கு, நினைவோ - எண்ணமோ? ஐவர் ஆம் அவனிபர்க்கும் - ஐந்து அரசர்களுக்கும், உண்மை ஆக நினைவு ஏது - மெய்ம்மையாக எண்ணம் யாது?' என்று -, அமரர் கோமான் - தேவர்கட்குத் தலைவனான கண்ணபிரான், அருள்புரிந்தான் - கருணையோடு வினவியருளினான்; 'போரின்றிச் சமாதானத்திலேஇராச்சியங் கிடைப்பதானால் மாத்திரம் அதனைப்பெற்றுக்கொண்டு வாழப் பிரியமா? அல்லது, முன்பு பன்னிரண்டு வருஷம் வாசஞ்செய்து பழகியுள்ள கொடிய வனத்திற்கே மீளவுஞ்சென்று ஆயுளுள்ளவளவும் அங்குச் செல்வமின்றி வறுமைத்துன்பத்துடனே வசிக்கப் பிரியமா? அன்றி, மானத்தையும் வீரத்தையுமே முக்கியமாகக் கொண்டு துணிவாகச் சென்று துரியோதனாதியரை யெதிர்த்துப் போர்செய்து வென்று இராச்சியத்தைப் பெறப் பிரியமா? உங்கட்குத் தனித்தனியுள்ள உத்தேசத்தைச் சொல்லுங்கள்' என்று கண்ணபிரான் பஞ்சபாண்டவரை நோக்கி வினாவியருளினான் என்பதாம். மூன்றாம் வாக்கியத்தில் 'பொர' என வருதலால், முதல் வாக்கியத்தில் 'பெற' என்றது சமாதானத்தா லென்றதாயிற்று. கழனியை 'செய்' என்பது - பன்றிநாட்டார் வழங்குந் திசைச்சொல்; செய் - கழனியாதலை 'நன்செய்', 'புன்செய்' என்ற விடங்களிலும் காண்க. வரால் என்னாது 'வராலினம்' என்றதனால், வாளை கயல் மலங்கு முதலிய மற்றும் பலசாதிகள் கொள்ளப்படும். "செய்வராலினமுகளும்" என்றதனால் நிலவளத்துக்குக் காரணமான நீர்வளத்தின் மிகுதி கூறியவாறு. திருநாடு - செல்வம் நிரம்பிய நாடுமாம். ஓகாரம் மூன்றும் - ஐயவினா. பைவு -பை என்னும் பகுதியடியாப்பிறந்த தொழிற்பெயர்; வருந்துதலென்று பொருள்; (இது - தல் விகுதி பெற்று, பைதல் எனவும் நிற்கும்.) அதனையுடையவர் - பைவர். 'உய்வரார்' என்றது, எவரும் நமக்குமுன் எதிர்ப்பவர் பிழையாரென்ற துணிவை விளக்கும். ஐவராம் அவனிபர் - பஞ்சபாண்டவர்க்குத் தொகைக் குறிப்பு; இது - இங்கே, முன்னிலையிற் படர்க்கை வந்த இடவழுவமைதி. அரசர்களான உங்களைந்து பேர்க்கும் என்க. அவநிபர் என்ற சொல் - பூமியைக் காப்பவரென்று பொருள்படும். அவநி - பூமி. அமரர் - (அமிருதமுண்டதனால்) மரணமில்லாதவர்; அமரர்கோமான் - தேவாதிதேவன். (65) சமாதானத்திற் காரியத்தை முடிக்கவேண்டுமென்று தருமன் கண்ணனை நோக்கிக் கூறுதல். 6. | வயிரமெனுங் கடுநெருப்பை மிகமூட்டி வளர்க்கினுயர் வரைக்காடென்னச், செயிரமரில் வெகுளிபொரச் சேரவிருதிறத்தேமுஞ் |
|