7.-சமாதானத்திற்கு வராத அவர்களைஅழிப்பது தகுதியென்று கண்ணன் கூறுதல். அரவுயர்த்தோனுடன் மறுசூதாடிநீர் வென்றவந்நாள வன்றான் சொன்ன, விரதமொழிதவிராமல் வெங்கானம் போய்மீண்டீர் வெய் யோனுங்கள், குருநிலத்திற்பாதியினிக் கொடாதிருந்தாலாங்கவனைக் கொன்றுபோரில், இருநிலத்தையாள வினித் துணிவதே கடனென்றானெம்பிரானே. |
(இ -ள்.) 'அரவு உயர்த்தோனுடன் - பாம்புக்கொடியை உயர எடுத்தவனான துரியோதனனுடனே, மறு சூது ஆடி - இரண்டாம் முறை சூதாட்டமாடி, நீர் வென்ற அந்நாள் - (அவ்வாட்டத்தில்) நீங்கள் சயித்த அக்காலத்தில், அவன்தான் சொன்ன - அத்துரியோதனன் கூறிய, விரதம் மொழி - கட்டளையாகிய வார்த்தை, தவிராமல் - தப்பாமல், வெம் கானம் போய் மீண்டீர் - கொடிய வனத்திற்கு(ப் பல வருஷகாலஞ்) சென்று திரும்பி வந்து விட்டீர்கள்; இனி - இப்பொழுது, வெய்யோன் - கொடுமையுடையவனான துரியோதனன், உங்கள் குரு நிலத்தில் பாதி - குருநாட்டில் உங்களுக்கு உரிய அரைப்பங்கை, கொடாது இருந்தால் - கொடாமலிருப்பானானால், ஆங்கு - அவ்விடத்தில், அவனை - அந்தத் துரியோதனனை, போரில் - யுத்தத்தில், கொன்று-, இரு நிலத்தை - இருதிறத்தாருடைய இராச்சியத்தையும் [பூமி முழுவதையும்], ஆள - அரசாளும்படி, துணிவதே - நிச்சயிப்பதே, இனி கடன் - இனிமேற் செய்தற்கு உரிய கடமையாம்,' என்றான் - என்று கூறினான், (யாவனெனில்),- எம்பிரான் - நமக்கெல்லாந் தலைவனாகிய கண்ணபிரான்; (எ - று.) 'மறுசூதாடிவென்ற' என்றது, முதலில் ஆடிய சூதாட்டங்களில் தோற்றுத் தாங்கள் அனைவரும் துரியோதனனுக்கு அடிமைப்பட்ட தன்மை நீங்குமாறு திரௌபதியின் வார்த்தைப்படி தருமபுத்திரன் மீண்டும் ஓராட்டமாடி அதில் வென்று அடிமையொழிந்ததை; 'அந்நாள் அவன்தான் சொன்னவிரதமொழி' என்றது - அதற்கு முன் அவன் "தந்தைதனருளாற் பெற்றீ ருரிமையுந் தம்பிமாரும், பைந்தொடிதானும் நீயும் பதிபெயர்ந்து உயர்ந்தவேயின், வெந்தழலனையகானின் வெளிப்படாதுறைமின் இன்றே, இந்தமாதரணிகை விட்டேகுமி னெழுமி னென்றான்" என்றதை, 'வெங்கானம் போய் மீண்டீர்' என்றதில் அஜ்ஞாதவாசமும் அடக்கப்பட்டது. 'விரதமாவது - இன்ன அறம் செய்வேனென்றும், இன்னபாவம் ஒழிவேனென்றும் தம் ஆற்றலுக்கு ஏற்ப வரைந்துகொள்வது' ஆதலின், இங்கே பன்னிரண்டு வருஷம் வனவாசமும் ஒரு வருஷம் அஜ்ஞாதவாசமும் செய்துதீர்வோ மென்று தருமன் உறுதிப்பாடு செய்துகொள்ளுதற்குக் காரணமாகத் துரியோதனன் சொன்னவார்த்தை, 'விரதமொழி' எனப்பட்டது. விரதம் - நியமமென்றபடி. இனி, மாஸம் - மாதம், ச்வாஸம் - சுவாதம் என்பனபோல, விரஸ மென்னும் வடமொழி விரதமெனத் திரிந்ததாகக் கொண்டு, இனிமையில்லாத பேச்சு எனவும் கொள்ளலாம். |