ஒருவனுக்கு அங்கமாகுபவர் எனக்காரணப்பெயர். துணைவர் - துரியோதனாதியர். அரவம் - ரவமென்னும் வடசொல், ரகரத்துக்கு அகரம் மொழிமுதலாக முன்வரப் பெற்றது. இனி, அரவமென்பதை - அரா என்னுந் தமிழ்மொழியின் விகாரமாகிய அரவு என்பது அம் சாரியை பெற்ற தெனக்கொண்டு, அரவம் - ஆதிசேஷனால் சுமக்கப்பட்ட, அவனி - பூமி யென்னலுமாம். பூமியைச்சூழ்ந்த கடலை, பூமியாகிய பெண் உடுக்கும் ஆடையாகக் கூறுதல், கவிமரபு. அவநம் - காத்தல்; எனவே, அவநி - காரணப்பெயர். இங்கு, எலாம் என்ற பெயர் - பொருளின் பன்மை குறியாமல் ஒரு பொருளின் பலவிடங் குறித்தது. தாதை- தாத என்னும் வடசொல்லின் திரிபு. இரவு பகல் - உம்மைத்தொகைமேல் வந்த ஏழாம்வேற்றுமைத்தொகை. பலமூல சாகம் என்ற உம்மைத்தொகை - வடநூல் முடிபு. இனி, பல என்பதைத் தமிழாகக் கொண்டு அநேகமாகிய வேர்களையும் தழைகளையும் என்னவுமாம். இனிதுநன்று - ஒருபொருட்பன்மொழி. இங்கே, மிகுதி குறித்தது. இனி, இம்மைக்கு இனிது, மறுமைக்கு நன்று என்றதாகவும் கருத்துக் கொள்ளலாம். "நன்று பெரிதாகும்" என்ற தொல்காப்பியத்தால், நன்று என்பது - பெரிதென்னும் பொருளதாதலால், நன்று இனிது என இயைத்து, மிகவும் இனியது என்றுமாம். (68) 9.-'அது தகுதியன்று' என்று கண்ணன் கூறுதல். கோதிலா னிந்தமொழிகூறுதலு மாமாயன்கூறலுற்றான், மோதமருக்கிளைத்துநீர் மொய்த்தபெருங் கானகத்தே முடுகிச்சென்றால், பூதலத்தோரேசாரோ புகன்றபெரு வஞ்சினமும் பொய்த்திடாதோ, நீதியோவெனவுரைத்தா னாங்கதற்கு நிகழ்தருமனிகழ்த் தலுற்றான். |
(இ -ள்.) கோது இலான் - குற்றமில்லாதவனான தருமபுத்திரன், இந்த மொழி - இவ்வார்த்தையை, கூறுதலும் - சொன்னவளவிலே, மா மாயன் - மிக்க மாயையையுடையவனான கண்ணன், கூறல் உற்றான் - சொல்லத் தொடங்கினவனாய்,- நீர் - நீங்கள், மோது அமருக்கு இளைத்து - தாக்கிச் செய்யும் போருக்குப் பின்னிடைந்து, மொய்த்த பெரும் கான் அகத்தே - அடர்ந்த பெரிய காட்டினிடத்திலே, முடுகி சென்றால் - விரைந்து செல்வீர்களானால், பூதலத்தோர் ஏசாரோ - பூமியிலுள்ளவர் யாவரும் இகழ மாட்டார்களோ? புகன்ற பெரு வஞ்சினமும் பொய்த்திடாதோ - (திரௌபதியைத் துகிலுரிந்த காலத்தில் நீங்கள் சபையிற்) சொன்ன பெரிய சபதமும் பொய்யாகி விடாதோ? நீதியோ - (நீங்கள் அப்படிச்செய்வது) ராஜதருமமாகுமோ?' என - என்று, உரைத்தான் - கூறியருளினான்; ஆங்கு - அப்பொழுது, அதற்கு - அக்கண்ணன் வார்த்தைக்கு, (உத்தரத்தை), நிகழ் தருமன் - விளங்குகிற யுதிட்டிரன், நிகழ்த்தல் உற்றான் - கூறத்தொடங்கினான்; (எ - று.) - அதனை, அடுத்த இரண்டு கவிகளிற் காண்க. துரியோதனன் சகுனியைக்கொண்டு சூதாடி வென்று பாண்டவரை அடிமைப்படுத்தியபின் திரௌபதியைத் துச்சாதனனைக் கொண்டு கூந்தல் பிடித்து இழுத்துவந்து துகிலுரிந்தும், மடியின் |