லாமை அருள் முதலிய குணங்களெல்லாம்நிறைந்து குற்றமொன்றும் இல்லாததனால் 'ஊனமிலான்' என்றும், க்ஷத்திரிய தருமமாகிய மானத்தைச் சிறிதும் பாராட்டாது சாந்த குணத்தையே மேற்கொண்டதனால் 'மானமிலாது' என்றும் கூறினன். "எல்லாம் வெகுண்டார்முன் தோன்றாக் கெடும்" ஆதலால், அதிக கோபாவேசங்கொண்ட வீமன் இங்ஙனம் தமையனை அலட்சியஞ்செய்து கூறினனென்க. (72) 13.-இதுவும் அடுத்தகவியும் தருமனைநோக்கிவீமன் கூறிய நிஷ்டூர வார்த்தை. விரிகுழற்பைந் தொடிநாணிவேத்தவையின் முறையிடு நாள் வெகுளே லென்று, மரபினுக்கு நமக்குமுல குள்ளளவுந் தீராதவசையேகண்டாய், எரிதழற் கானகமகன்று மின்னமும் வெம்பகை முடிக்க விளையாநின்றாய், அரவுயர்த்தோன் கொடுமையினு முரசுயர்த்தோயுனதருளுக் கஞ்சினேனே. |
இதுமுதல் நான்கு கவிகள் - ஒரு தொடர். (இ -ள்.) விரி குழல் - (துச்சாதனனாற் பிடித்திழுத்துக் குலைக்கப்பட்டு) விரிந்த கூந்தலையுடைய, பைந்தொடி - பசுமையான தொடியென்னுங் கைவளையலையுடையவளாகிய திரௌபதி, வேந்து அவையில் - இராஜ சபையிலே, நாணி - வெட்கங்கொண்டு, முறை இடு நாள் - கூவியரற்றிய காலத்திலே, வெகுளேல் என்று - (தம்பிமார்களாகிய எங்களைத் தனித்தனி) 'நீ கோபியாதே' என்று கூறி, நமக்கும் மரபினுக்கும் - நமக்கும் (நமது) குலத்துக்கும், உலகு உள்ளளவும் - உலகமுள்ளவரையிலும், தீராத வசையே கண்டாய் - நீங்காத பழிப்பையே உண்டாக்கினாய்; எரி தழல் கானகம் அகன்றும் - எரிகின்ற நெருப்பையுடைய வனத்தில் வாசஞ் செய்து கழிந்த பின்பும், இன்னமும் - அஜ்ஞாதவாசமும் தீர்ந்த பின்பும், வெம் பகை முடிக்க - கொடிய பகைவர்களான துரியோதனாதியர்களைக் கொல்லுதற்கு, இளையா நின்றாய் - பின்னிடைகிறாய்; முரசு உயர்த்தோய் - முரசக்கொடியை உயர நாட்டியவனான தருமனே! அரவு உயர்த்தோன் கொடுமையினும் - பாம்புக் கொடியை உயர நாட்டியவனான துரியோதனனது இரக்கமில்லாமைக்கு அஞ்சுதலினும் மிகுதியாக, உனது அருளுக்கு அஞ்சினேன் - உனது கருணைக்கு (யான்) பயப்படுகிறேன்; (எ - று.) அரவுயர்த்தோனது கொடுமையை உடனே தனது ஆற்றலால் அடக்குவது எளிதாயிருக்க, அங்ஙனஞ் செய்யாமைக்குக் காரணம் முரசுயர்த்தோனது அருளே யாதலால், அக்கொடுமையினும் இவ்வருளுக்குத் தான் மிக அஞ்சியதாக வீமன் கூறினன். இங்குத் தருமனது அருளினும் துரியோதனனது கொடுமையே மேலான தென்கிற பொருள்தோன்றுதலால், அகமலர்ச்சியணி தொனிக்கின்ற தென்னலாம்; ஒன்றன் குணங்குற்றங்களால் மற்றொன்றற்கு |