மிகவிரைவிலே போரில் தவறாமல்துரியோதனனைக் கொன்று அவனது அரசாட்சிச் செல்வ முழுவதையும் உனக்குக் கொடுத்திடு வேனென்பதாம். மண்ணுலகத்தை யிழந்த துன்பம் விண்ணுலகத்தையடைந்த இன்பத்தால் நீங்கும்படி என ஒரு சமத்காரந்தோன்ற, 'உனை வெறாதவண்ணம் வானாள' எனப்பட்டது. 'வெறாதவண்ணம்' என்றதனால், தனக்கு வீரசுவர்க்கம் கிடைத்ததற்குக் காரணமாகிய உன்னைப்பற்றி மகிழும் வண்ணம் என்றதாகவும் கொள்ளலாம். கொடியவனான துரியோதனனைக் கொல்வேன் என்ற பொருளை 'வானாள வானவர்கோன் தன்பதம் மற்று அவன் தனக்கே வழங்குவேன்' என வேறுவாய்பாட்டினாற் கூறியது, பிறிதின்நவிற்சியணி. துரியோதனனது இராச்சியத்தை வாங்கி உனக்குக்கொடுத்து, இந்திரலோகத்தை அவனுக்குக் கொடுப்பே னென்பதில், மாற்று நிலையணியென்னும் பரிவர்த்தநாலங்காரம் தோன்றுதலும் காண்க; அதன் வகை மூன்றனுள், சிறியதை வாங்கிக்கொண்டு பெரியதைக் கொடுப்பதாகக் கூறியது இது. கண் இலா - கண்ணோட்டமில்லாதவன்எனினுமாம். கண் இலா அருளிலி - தயைதாக்ஷிண்ய மில்லாதவன். "கண்என்னாம் கண்ணோட்டமில்லாத கண்" "கண்ணோட்டமில்லவர் கண்ணிலர்" என்பவாதலால் கண்ணோட்டமில்லாமையை கண்ணில்லாமை யெனத் தகும். கண்ணில்லாமையால் அது சென்றவழி நிகழ்வதாகிய கண்ணோட்டமும் இலனாயினனென்றவாறு. இலி -இ, பெயர்விகுதி: 'வில்லி' என்பதிற் போல. தரணி - (பொருள்களைத்) தரிப்பது பற்றி பூமியைக் குறிக்கும். அரசாட்சியை 'குடை' என்றும், 'சக்கரம்' என்றும், 'கோல்' என்றும் கூறுதல் மரபு. ஒரு குடை - இரண்டாவதில்லாமல் ஒன்றேயான அரசாட்சி; தனியரசாட்சி; ஏகாதிபத்தியம்; ஒப்பற்ற ஆட்சியுமாம். இன்றே என்ற ஏகாரம் - தேற்றத்தோடு விரைவையுங் காட்டும். மேல்நாள் - சூது பொருத நாளில், உரிமை அற - உரிய செல்வம் நம்மை விட்டு நீங்க என்றுமாம். உரிமை - உரிய பொருளுக்குப் பண்பாகுபெயர். தருமனது தம்பியராகிய வீமன் முதலியோரினும் துரியோதனன் மூத்தவனாதலால் அவன் 'பெருந்துணைவன்' எனப்பட்டனன்; அன்றி, 'பெருந்துணைவன்' என்பது இகழ்ச்சியுமாம். மிக்கவலியுடையா னென்பது பற்றியுமாம். வான் - ஆகாயத்திலுள்ள உலகத்துக்கு இடவாகுபெயர். கோன், ன் - சாரியை. (74) 15.-இதுவும், மேற்கவியும் - வீமன் கண்ணனைநோக்கிக் கூறியவை. போர்முடித்தானமர்பொருது புலம்புறுசொற்பாஞ்சாலி பூந்தண் கூந்தற், கார்முடித்தா னிளையோர்முன் கழறியவஞ்சின முடித்தான் கடவுட்கங்கை, நீர்முடித்தா னிரவொழித்த நீயறியவசையின்றி நிலைநின்றோங்கும், பேர்முடித்தா னிப்படியே யார் முடித்தாரிவனுடனே பிறப்பதேநான். |
|