என்றபடி சிறிதும் நிந்தனைக்கிடமில்லாததேபுகழெனச் சிறப்பித்துக் கூறப்படுவதாதலால், "வசையின்றி நிலைநின்றோங்கும் பேர்" என்றது. இனி, போர்முடித்தான் - யுத்தத்தை இல்லையாக்கினான்; கூந்தல் கார் முடித்தான் - கூந்தலாகிய மேகத்தைப் பாழாக்கினான்; கங்கைநீர் முடித்தான் - கங்கைநீரையொடுக்கினான்; பேர்முடித்தான் - கீர்த்தியை ஒழித்தான்; யார் முடித்தார் - யாவர் அழித்தார் எனப்பொருள் கொள்ளினும் அமையும். தான் முடியாவிடினும் முடிக்க வல்லவனாய் முடிக்கத் தொடங்குகிற வீமனையும் இவன் முடிக்க வொட்டாமற் செய்தற்கு, இவனுக்குத் தம்பியாகப் பிறந்த அவனது உடற்பிறப்பே காரணமாதலால், அதனை 'இவனுடனே' பிறப்பதே 'நான்' என வீமன் வெறுத்தான். (75) 16. | அணிந்துவருஞ் சமரிலெதிர்ந் தரவுயர்த்தோனுடனரச ருடல மெல்லாந், துணிந்திரண்டு படப்பொருது தொல்லையுலகரசாளத் துணிவதல்லால், தணிந்தறமுங் கிளையுறவுங் கொண்டாடித்தானின்னந் தனித்தூதேவிப், பணிந்திரந்து புவிபெற்றுண்டிருப்பதற்கேதுணிகின்றான் பட்டபாடே. |
(இ - ள்.) அணிந்து வரும் - (இருதிறத்துச் சேனைகளும்) ஒழுங்காக வகுக்கப்பட்டு நெருங்கி வருகிற, சமரில் - போர்க்களத்திலே, அரவு உயர்த்தோனுடன் எதிர்ந்து - பாம்புக்கொடியனான துரியோதனனுடன் எதிர்த்து, அரசர் உடலம் எல்லாம் துணிந்து இரண்டு பட - (துரியோதனனும் அவனுக்குத் துணையாக வருபவர்களுமான) அரசர்களது உடம்புகளெல்லாம் துணி பட்டு இரண்டாகும்படி, பொருது - போர்செய்து (பகை முடித்து), தொல்லை உலகு - (நமது) பழைய உரிமையாகிய இராச்சியத்தை, அரசு ஆள - அரசாட்சி செய்ய, துணிவது அல்லால் - நிச்சயிப்பதே யல்லாமல்,- தான் - இத்தருமன்தான், தணிந்து - சாந்தமாய், அறமும் கிளை உறவும் கொண்டாடி - தருமத்தையும் சுற்றத்தாரது உறவுமுறைமையையும் முக்கியமாகப் பாராட்டி, இன்னம் தனி தூது ஏவி - (உலூகனைத் தூதனுப்பிய) பின்பும் ஒரு தூதனைச் செலுத்தி, பணிந்து இரந்து - (பகைவனை) வணங்கி யாசித்து, புவி பெற்று - இராச்சியத்தை (அவன் கொடுக்கச் சிறிது) பெற்று, உண்டு இருப்பதற்கே - புசித்து உயிர் வாழ்ந்திருப்பதற்கே, துணிகின்றான் - நிச்சயிக்கிறான்; பட்ட பாடே-(எல்லா வருத்தங்களினும்) மிக்க வருத்தமாகும் இது! (எ- று.) - ஈற்று ஏகாரம் - தேற்றத்தோடு இரக்கம். போர்பொருது பகையையழித்து வென்று அரசுபெற்றுப் புகழோடு வாழ்தல் எளிதாயிருக்க, தாழ்ந்து இரந்து அரசுபெற்று மானமின்றி உயிர் வாழக் கருதுதல் மிக்க பழிப்புக்கு இடமாகுமென்பதாம். அணிந்து வரும் - நாளைக்குச் சமீபித்துவருகிற என்றுமாம். உடலம், அம் - சாரியை. 'தொல்லையுலகு' என்றது, பழமையான உலக முழுவதையும் என்றும் பொருள்படும். கிளை - கிளைபோன்ற உறவினர்க்கு உவமையாகுபெயர். (76) |