பாயம் இறுதியிற் செய்யத்தக்கதாய்க்கடைசியில் வைக்கப்பட்டுக் கீழ்மையுடையதா மென்றும், சமாதானத்தால் இராச்சியம் பெறாவிட்டால் முடிவில் போர் இருக்கவேயிருக்கிறதென்றும் கூறியவாறாம். 'தமையன் தகப்பனோ டொத்தவன்' என்ற நியாயத்தால், தன்பிள்ளைகள் செய்த குற்றத்தைத் தந்தை பொறுத்துக் குணமாகப் பாவிப்பதுபோலத் தன்தம்பியர் செய்யுங் குற்றத்தைத் தமையன் பொறுத்துக் குணமாகக் கொள்ளவேண்டும் என்ற கருத்தாற் கூறியது, முதலிரண்டடி; பஞ்சபாண்டவரில் பிரதானனான தருமபுத்திரனுக்குத் துரியோதனாதியர் தம்பியராதல் உணர்க. வீமன்கருத்தின்படி தருமன் புகழை விரும்பாதவனல்லன், போரினாற் புகழ்பெறுதலையொழித்துப் பொறுமையாற்புகழ்பெறுங் கருத்தினன் என்பார், 'புகழேபூண்பான்' என்றார். உணர்வு அறியாமையின் - அறியவேண்டுவன அறியாமையால் என்க; இன் - ஐந்தனுருபு, ஏது. கிடந்ததே, ஏ - தேற்றம்; புகழே என்ற ஏகாரம் பிரிநிலையோடு, உயர்வுசிறப்பு. (78) 19.-இதுவும் அடுத்த கவியும் - வீமன் தருமனைநோக்கிச் சொல்வன. சூடுகின்ற துழாய்முடியோன் சுரருடனே முனிவர்களுஞ் சுருதிநான்குந், தேடுகின்ற பதஞ்சிவப்பத் திருநாடுபெறத் தூதுசெல்லவேண்டா, வாடுகின்ற மடப்பாவைதன் வரமுமென்வரமும்வழுவாவண்ணங், கோடுகின்ற மொழியவன்பா லெனைத்தூது விடுகவினிக்கொற்ற வேந்தே. |
இதுமுதல் மூன்றுகவிகள் - ஒருதொடர். (இ -ள்.) கொற்றம் வேந்தே - வெற்றியையுடைய அரசனே! - சூடுகின்ற துழாய் முடியோன் - தரிக்கின்ற திருத்துழாய் மாலையையுடைய திருமுடியையுடையவனான கண்ணபிரான், சுரருடனே முனிவர்களும் சுருதி நான்கும் தேடுகின்ற பதம் சிவப்ப - தேவர்களும் முனிவர்களும் நான்கு வேதங்களும் (இன்னமும் உண்மைகாணாமல்) தேடப்பெற்ற தனது திருவடிகள் (நடத்தலாற்) செந்நிறமடையும்படி, திரு நாடு பெற - செல்வம் மிக்க இராச்சியத்தை (நாம்) பெறுதற்காக, தூது செல்ல வேண்டா - தூதுபோக வேண்டுவதில்லை; வாடுகின்ற மடம் பாவைதன் வரமும் - வருந்துகிற இளம் பெண்ணான திரௌபதியினது சபதமும், என் வரமும் - எனது சபதமும், வழுவா வண்ணம் - தவறாதபடி, கோடுகின்ற மொழியவன்பால் - நீதிதவறிச் சொல்மாறுபடுகின்றவனான துரியோதனனிடத்து, இனி எனை தூது விடுக - இப்பொழுது என்னைத் தூதனுப்புவாயாக; கண்ணன் தூதுசென்றால் ஒருகால் சந்திநேர்ந்து முன்செய்த சபதங்கள் தவறிவிடக்கூடுமென்று, வீமன், அவை தவறாமல் நிறைவேறும்படி தன்னைத் தூதனுப்புமாறு வேண்டுகிறான்; தன்னைத் தூதனுப்பினால் தூது செல்லும்பொழுதே துரியோதனாதியர் நூற்றுவரையும் ஒழித்துப் பிரதிஜ்ஞைகளை நிறைவேற்றிவிடலாமென்ற கருத்து, மூன்றாமடியால் விளங்கும்; அன்றியும், |