பக்கம் எண் :

மூன்றாம் போர்ச்சருக்கம்103

22.வாயுவடிக்கணைவாசவன்வைக்கணைவாருணமெய்க்கணைசெந்
தீயின்வடிக்கணைதேவர்சுடர்க்கணைசேரவிடுத்தமையால்
ஆயமுனைப்படுதேரணிபட்டனவாளணிபட்டனவெங்
காய்கரிபட்டனபாய்பரிபட்டனகாவலர்பட்டனரே.

     (இ - ள்.) வாயு வடி கணை - வாயுவைத்தெய்வமாகவுடைய கூரிய
அம்பையும் [வாயவ்யாஸ்திரத்தையும்], வாசவன் வைகணை - இந்திரனைத்
தெய்வமாகவுடைய கூரிய அம்பையும் [ஐந்திராஸ்திரத்தையும்], வாருணம் மெய்
கணை-வருணனைத்தெய்வமாகவுடைய உண்மையான [தவறுதலில்லாத] அம்பையும்
[வாருணாஸ்திரத்தையும்], செம் தீயின் வடி கணை - சிவந்த அக்கினியைத்
தெய்வமாகவுடைய கூரியஅம்பையும் [ஆக்நேயாஸ்திரத்தையும்], தேவர் சுடர்
கணை- (மற்றும் பல) தேவர்களுக்குஉரிய ஒளியையுடைய அஸ்திரங்களையும்,
சேர -ஒருசேர, விடுத்தமையால் - (அருச்சுனன்) பிரயோகித்ததனால்.-ஆயம் -
கூட்டமான,முனைபடு - போர்க்களத்தில்  எதிர்ப்பட்ட, தேர் அணி -
தேர்வரிசைகள், பட்டன-அழிந்தன: ஆள் அணி -  காலாள்வரிசைகள், பட்டன-;
வெம் காய் கரி - கொடியசீறுகிற யானைகள், பட்டன; பாய் பரி -
பாய்ந்துசெல்லுந்தன்மையனவானகுதிரைகள், பட்டன-;  காவலர் -
(இந்நால்வகைச்சேனைக்கும்)அரசராகவுள்ளவர்களும், பட்டனர் -
அழிந்தார்கள்;(எ- று.)

     வாருணம் - தத்திதாந்தநாமம். ஆய எனப் பிரித்தால், ஆகிய
எனப்பொருள்படும். பி-ம்:- ஆயுமுனைப்படு.                     (131)

23.-அருச்சுனன் கடுமையாகப்பொரவே பகையரசர்        
அஞ்சியொளித்தமை.

நாடியொ ளித்தனர் சூழ்புனன் மத்திர நாடன்மு தற்பலருங்
கூடியொ ளித்தனர் மாரத ரிற்றிறல் கூரும்வ யப்படையோர்
ஓடியொ ளித்தன ராடம ரிற்றுரி யோதன னுக்கிளையோர்
வாடியொ ளித்தனர் மாகத ரொட்டியர் மாளவர் குச்சரரே.

     (இ - ள்.) (இன்னும் அப்பொழுது), ஆடு அமரில் - (அருச்சுனன்) செய்த
போரில், புனல் சூழ் மத்திரநாடன் முதல் பலர்உம்-நீர்சூழ்ந்த மத்திரதேசத்தரசனான
சல்லியன் முதலிய பல சமரதவீரர்களும், நாடி ஒளித்தனர் - (எதிர்த்தற்கு அஞ்சி)
இடந்தேடி யொளித்துக்கொண்டார்கள்;  மா ரதரில் திறல் கூரும் வய படையோர் -
மகாரதவீரர்களில் வலிமைமிகுந்த வெற்றியைத்தரும் ஆயுத்ததையுடைய
சோமதத்தன்முதலியோர், கூடி ஒளித்தனர் - ஒருங்குகூடி மறைந்தார்கள்;
துரியோதனனுக்கு இளையோர் - (அர்த்தரதவீரரான) துரியோதனனது தம்பிமார்,
ஓடிஒளித்தனர்-; மாகதர் - மகததேசத்தாரும், ஒட்டியர்- ஓட்ரசேதத்தாரும்,
மாளவர்-மாளவதேசத்தாரும், குச்சரர் - கூர்ச்சரதேசத்தாரும் ஆகிய அரசவீரர்கள்,
வாடிஒளித்தனர் - வாட்டமுற்று ஒளித்தார்கள்;  (எ - று.)