பக்கம் எண் :

104பாரதம்வீட்டும பருவம்

துரியோதனனுக்கு - நான்காமுருபு, முறைப்பொருளது. ஒட்டியர், குச்சரர் -
வடசொற்சிதைவுகள்.                                        (132)

வேறு

24.-அருச்சுனன் கடும்போர்செய்தல்கண்டு ஸ்ரீக்ருஷ்ணன் உவந்திருக்க,
வீடுமன்முதலியோர் துரியோதனனைக் காத்தவண்ணம் பாசறைசேர்தல்.

பார்த்த னம்பினான் மேவ லார்படைப் பரவை சாயவே
                                விரவுகோவியர்
தூர்த்த னன்புடன் கண்டு வந்துதன் றொக்க சேனையின்
                              பக்க மெய்தினான்
சேர்த்த வெம்பனைக் கொடிம கீபனும் வில்வினோதனுஞ்
                             செல்வ மைந்தனுங்
காத்து நின்றுதங் காவ லன்றனைக் கொண்டு பாசறை கடிதி
                                    னெய்தினார்.

     (இ - ள்) (இவ்வாறு), பார்த்தன் அம்பினால் - அருச்சுனனது பாணங்களால்,
மேவலார் படை பரவை - பகைவர்களது சேனாசமுத்திரம், சாயஏ - அழிந்திடவே,-
விரவு கோவியர் தூர்த்தன்-(தன்னோடு) கலந்த கோபஸ்திரீகள் பலரிடத்திலும்
அன்புள்ளவனான கண்ணபிரான், கண்டு -     (அதனை) நோக்கி, அன்புடன்
உவந்து - அன்போடு மகிழ்ந்து, தொக்க தன் சேனையின் பக்கம் எய்தினான்-
(கூட்டமாகத்) திரண்டுள்ள தன் சேனையின் பக்கத்தை யடைந்தான்; சேர்த்த வெம்
பனை கொடி மகீபன்உம்-கட்டிய கொடிய பனைமரத்தின் வடிவமெழுதிய
கொடியையுடைய அரசனான வீடுமனும், வில்வினோதன்உம்-வில்வித்தையையே
பொழுதுபோக்கும் விளையாட்டாகவுடைய துரோணாசாரியனும், செல்வம்
மைந்தன்உம்-(அவனது) செல்வப்பிள்ளையான அசுவத்தாமனும், தம் காவலன்
தனைகாத்து நின்று - தங்கள் அரசனான துரியோதனனை (அருச்சுனனம்பால்
அழிவடையாதபடி சூழ்ந்து) நின்று பாதுகாத்துக் கொண்டு, கொண்டு பாசறை
கடிதின்எய்தினார்- (அவனை) அழைத்துக்கொண்டு (தமது) படைவீட்டுக்கு
விரைவிற் சென்றுசேர்ந்தார்கள்; (எ - று.)

     'பார்த்தனம்பினால் மேவலார் படைப்பரவைசாயவே' என்றது- கண்ணன்
தொழிலும் வீடுமன்முதலியோர்தொழிலுமாகிய இரண்டுக்குங் காரணம். பார்த்தன்
என்னும் வடமொழிப்பெயர்க்கு-பிருதையினது மகனென்று காரணப்பொருள்;
தத்திதாந்தநாமம். பிருதை யென்பது-குந்தியின் இயற்பெயர்: பார்த்தனென்பது,
இங்குஅருச்சுனனுக்கு சிறப்பாக வழங்கிற்று; தாய்க்கு இளைய மகனிடத்தில் அன்பு
மிகுதியென்ற பொது நியாயம், இதற்குக் காரணமாகலாம். தூர்த்தன்-வடசொல்;
இதற்கு-வஞ்சகனான காமுக னென்று பொருள்: கண்ணன் ஆயர்மங்கையர்பலரிடத்து
இங்ஙனம் ஒருங்கு காதலுடையனாதலை "கருமலர்க் கூந்த லொருத்திதன்னைக்
கடைக்கணித் தாங்கே யொருத்தி தன்பான், மருவி மனம் வைத்து மற்றொருத்திக்
குரைத்து ஒருபேதைக்குப் பொய் குறித்துப், புரிகுழன் மங்கை யொருத்தி தன்னைப்
புணர்தியவளுக்கும் மெய்யனல்லை, மருதிறுத்தா யுன் வளர்த்தி யூடே
வளர்கின்றாதாலுன்றன் மாயை தானே" என்ற பெருமாள் திருமொழிப்பாசுரத்தாலு
மறிக. பக்கம் -பக்ஷம்: வடசொல். ' வில்வினோ தனும்' என்றவிடத்து
'திறல்துரோணனும்' என்றும்பாடம்.