(இ - ள்.) உடைகின்றமை-(இங்ஙனம் தன்சேனை) அழிகின்றதை, கண்டு- பார்த்து, உரகம் துவசன்-பாம்புக்கொடியனான துரியோதனன், குடைஉம் கொடிஉம் குளிர் மா முரசுஉம் படைஉம் சில தம்பியர்உம் பலர்உம் புடைகொண்டு வர- வெண்கொற்றக்குடையும் துவசமும் அச்சத்தைத்தருகிற பெரியபேரிகைகளும் சேனைகளும் சில தம்பிமார்களும் வேறுபலரும் பக்கத்திற்சூழ்ந்துவர, அவன் மேல்போனான்-அவ்வீமன்மீது (போருக்குச்) சென்றான்; (எ-று.)-இனி, குளிர் மா முரசு-ஒலிக்கிற சிறந்தபேரிகை யெனவுமாம். (156) 18.-துரியோதனன் வீமனுடைய வில்லும் கவசமும் அழியக் கணை தொடுத்தல். வீமற்கெதிர்நின்றவன்வில்லறவுஞ் சேமக்கவசஞ்சிதைவுற்றிடவும் நாமக்கணையேவினனாயகனா மாமுத்தமதிக்குடைமன்னவனே. |
(இ - ள்.) நாயகன் ஆம்-(குருநாட்டுக்குத்) தலைவனாகிய, மா முத்தம் மதி குடை மன்னவன் - சிறந்த [பெரிய] முத்துக்களினாலாகிய பூர்ணசந்திரன்போன்ற வெண்கொற்றக்குடையையுடைய துரியோதனராசன், வீமற்கு எதிர் நின்று-(போய்) வீமசேனனுக்கு எதிரிலே நின்று, அவன் வில் அறஉம்-அவனது வில் துணிபடவும், சேமம் கவசம் சிதைவுற்றிடஉம் -(உடம்புக்குப்) பாதுகாப்பாகவுள்ள (அவனது) கவசம்அழிவடையவும், நாமம் கணை ஏவினன்-அச்சத்தைத்தருகிற அம்புகளைச் செலுத்தினான்; (எ - று.) சேமம்-க்ஷேமம் என்னும் வடமொழித்திரிபு. நாம் - அச்சப் பொருளுணர்த்துவதோர் உரிச்சொல்: அம்-சாரியை. (157) 19.-வீமன் துரியோதனன்மீது கடுமையாகக் கணைதொடுத்தல். ஆறம்பினிலற்றரவத்துவச
நூறம்பகன்மார்பினுழைந்தனபின்
வேறம்புதொடுத்திலன்வீமனவன்
மாறம்புதொடுத்தனன்மற்றிவன்மேல்.
|
(இ - ள்.) (அப்பொழுது வீமன்விட்ட), ஆறு அம்பினில்-ஆறு பாணங்களால், அரவம் துவசம்-(துரியோதனனது) பாம்புக்கொடி, அற்று - அறுபட, நூறு அம்பு- (அவ்வீமனது) நூறுபாணம், அகல் மார்பில் நுழைந்தன-(துரியோதனனது) பரந்த மார்பிலே புதைந்து ஊடுருவின; பின்-அதன்பின், வீமன்-, வேறு அம்பு தொடுத்திலன்-வேறுபாணன் தொடுத்தானில்லை; அவன் - அத்துரியோதனன், மற்று-பின்பு, இவன்மேல்-இவ்வீமன்மேல், மாறு அம்பு தொடுத்தனன்- எதிரம்புகளைப்பிரயோகித்தான்; (எ - று.) அரவத்துவசன் மார்பில் நூறம்பு நுழைந்த அப்பொழுதில் வீமன் வேறம்புதொடுக்காமை, தழிஞ்சியென்னும் புறப்பொருள் திணையின் பாற்படும்; அது-சாய்ந்தார்மேற் படராமை. (158) |