வேறு. 33.-கடோற்கசன் மாயவேடங்கொண்டு பகதத்தனோடு போர்தொடங்குதல். ஆய போதி லாயிர நூறு மதமாவு மேய தீய காலனை யொக்கு மேலாளுஞ் சாய கம்முஞ் சாபமும் யாவுந் தானேயா மாய வேடங் கொண்டவ னோடு மலைவுற்றான். |
(இ-ள்.) (பார்த்த கடோற்கசன்,)-ஆய போதில் - அப்படியான அச்சமயத்தில்.- ஆயிரம் நூறு மதம் மாஉம் - லஷம்மதயானைகளும், மேய - (அத்தொகையாகப்) பொருந்திய, தீய - கொடிய, காலனை ஒக்கும் - யமனையொத்த, மேல் ஆள்உம் - (அந்தயானைகளின்) மேலுள்ள வீரர்களும், சாபம்உம் - (அவர்களது) விற்களும், சாயகம்உம் - (அவ்விற்களால் எய்யப்படும்) அம்புகளும், (ஆகிய), யாஉம் - எல்லாம், தான்ஏ ஆம் - தானே யாகிய, மாயம் வேடம் - மாயாவடிவத்தை, கொண்டு - எடுத்துக் கொண்டு, அவனோடு மலைவுற்றான் - அந்தப்பகதத்தனோடு போர் செய்யத் தொடங்கினான்; (எ -று.) அரக்கனாதலால், மாயாரூபங்கொண்டான், சாயகம்மும் - விரித்தல், தானேயாஎன்று எடுத்து - தானேயாக என்றுமாம். (172) இதுமுதல் இச்சருக்கம் முடியுமளவும் பத்துக்கவிகள் - பெரும்பாலும் மூன்றாஞ்சீர்விளச்சீரும், ஐந்தாவது மாங்காய்ச் சீரும், மற்றைமூன்றும் மாச்சீர்களு மாகிய நெடிலடிநான்குகொண்ட கலிநிலைத்துறைகள். 34 - கடோற்கசன் மாயையால் எங்கும் தானும் வேழமுமேயாகிப் பகதத்தன்மீது போதல். சங்கமூதத்தார்முரசார்ப்பமுழவார்ப்பப் பொங்கும்பூழியாழிவறக்கும்படிபோதச் சிங்கங்குன்றிற்செல்வதுபோலச்சிலையோடு மெங்குந்தானும்வேமுமாகியெதிர்சென்றான். |
(இ-ள்.) சங்கம் - சங்குகள், ஊத - ஊதப்பட்டு முழங்கவும், தார் - சேனைக்குஉரிய, முரசு - பேரிகைகள், ஆர்ப்ப - ஆரவாரிக்கவும், முழவு - (மற்றைப்)பறைகள், ஆர்ப்ப - ஒலிக்கவும், பொங்கும் பூழி - மேற்கிளம்புந் தூளிகள்,ஆழி வறக்கும்படி போத - கடல்களும் நீர்வற்றும்படி பரவவும், (கடோற்கசன்),சிங்கம் குன்றில் செல்வது போல,- ஒருசிங்கம் ஒருமலையின்மேல் ஏறிப்போவதுபோல, சிலையோடுஉம் - (தன்கை) வில்லுடனே, எங்குஉம் தான்உம் வேழம்உம் ஆகி - (மாயையால்) எவ்விடத்திலும் தானும் (தன்) யானையுமாய், எதிர் சென்றான் - பகதத்தனெதிரிற் போனான்; (எ-று.) சிங்கம் - பராக்கிரமசாலியான கடோற்கசனுக்கும், மலை - வலியபெரிய யானைக்கும் உவமை.மிகுதியாகக் கிளம்பின புழுதிகள் |