லொரும், கொலையுண்டார் - (இவர்களாற்) கொல்லப்பட்டார்கள்; வென்றார் - (இவ்வாறு கடோற்கசனது பொய்ச்சேனையார் பகதத்தனது மெய்ச்சேனையாரைச்) சயித்துவிட்டார்கள்; (எ-று.) - அன்றோ - தேற்றம்; இதில் - வியப்புந்தோன்றும். (175) 37.-சூரியாஸ்தமன வருணனை. ஆனதானதாகவமெங்குமானைப்போர் போனபோனமைந்தர்பிழைப்பீர்போமென்றென் றூனமெய்தாதவ்விறைபோனானுயிரோடும் போனகண்டகாய்கதிரோனும்புறமிட்டான். |
(இ-ள்.) 'ஆகவம் எங்கும் - போர்க்களம் முழுவதிலும், ஆனை போர் - யானைச்சண்டை, ஆனது ஆனது - மிகுதியாகஉண்டாயிற்று; போன போன மைந்தர் - ஓடிப்போன வீரர்களெல்லோரும், பிழைப்பீர் - உயிர்வாழ்வீர்கள்; (ஆதலால்), போம் - (தப்பி) ஓடிப்போங்கள்,' என்று என்று-என்று பலமுறைச்சொல்லி, அ இறை - அந்த (ப் பகதத்த)ராசன், ஊனம் எய்தாது - அழிவையடையாமல், உயிரோடுஉம் போனான் - உயிரோடும் (புறங்கொடுத்துச்) சென்றான்; போன கண்ட - (அப்படிச்) சென்றதைப் பார்த்த, காய் கதிரோன்உம் - சுடுகிற கிரணங்களையுடைய சூரியனும், புறம்இட்டான் - (தானும் கடோற்கசனது யானைச்சேனைக்கு அஞ்சிப்) புறங்கொடுப்பவன்போல மறைந்துசென்றான்; (எ-று.) தற்குறிப்பேற்றவணி மைந்தர் பிழைப்பீர். இடவழுவமைதி. போன= போனது:விகாரம். (176) 38.-அப்போது இருதிறத்தாரும் பாசறை சேர்தல். பூந்தண்மாலைப்பஞ்சவரானைப்போர்வென்று சேர்ந்தசேர்ந்தமன்னவரோடுந்திறலோடுந் தாந்தம்பாடி வீடுபுகுந்தார்தரையாளும் வேந்தனோடும்பாசறைபுக்கான்வீடும்மன். |
(இ-ள்.) பூ - பூக்களாலமைந்த, தண் - (தேனினாற்) குளிர்ந்த, மாலை - வெற்றிமாலையை யணிந்த, பஞ்சவர் - பஞ்ச பாண்டவர்கள், ஆனை போர் வென்று - அந்த யானைப்போரில் சயித்து, சேர்ந்த சேர்ந்த மன்னவரோடுஉம் - (தங்களோடு மிகுதியாக வந்து சேர்ந்த அரசர்களுடனும், திறலோடுஉம் - வெற்றியுடனும், தாம் தம் பாடிவீடு புகுந்தார்-தாங்கள் தங்களது படைவீட்டை யடைந்தார்கள்; வீடும்மன்-வீடுமன், தரை ஆளும் வேந்தனோடுஉம் - பூமியை ஆளுகிற துரியோதனராசனுடனே, பாசறை புக்கான்-(தன்)படைவீட்டை யடைந்தான்; (எ-று.) ஈற்று அடியால், துரியோதனாதியர் சேனையிலுள்ள மற்றையரசர்கள் பலரும்பாண்டவர்சேனைக்குத் தோற்றுச் சிதறினரென்பது தொனிக்கும். வீடும்மன் - விரித்தல். (177) |