பக்கம் எண் :

ஐந்தாம் போர்ச்சருக்கம்135

     வெள்ளம் - ஓர்பெருந்தொகையுமாம். வரசங்கம் - திருமாலின்
பரஞ்சசன்னியமும், அருச்சுனனது தேவதத்தமும், மற்றும் பல வலம்புரிச்சங்குகளும்;
இது வடமொழித்தொடர். 'வரிசங்கம்' என்றபாடத்துக்கு-கோடுகளையுடைய சங்கு
என்க. காளம் - காகளம் எனவும்படும். முரசு முதலிய மூன்றும் - அடிக்கப்படும்
வாச்சியவகைகள். மூன்றாமடியிலுள்ள சிந்து என்னுஞ் சொற்களில், ஈற்றது - ஸிந்து
என்னும் வடசொல்; மற்றவை - தமிழ் வினைப்பகுதி: சொற்பின்வரு
நிலையணி.                                              
(183)

3-துரியோதனன் சேனைவந்து சேர்ந்தபின்
இருதிறச்சேனையும் பொர எதிருறுதல்.

விருதாயிரங்கோடிமுரசாயிரங்கோடிமேன்மேலெழப்
பொருதானையுடன்வந்தணைந்தார்புறந்தந்தபூபாலருங்
கருதாவரக்கன்கொடுந்தானையிறைவன்கடுந்தானையென்
றிருதானையும்போலவெதிருற்றவிருமன்னரிருதானையும்.

     (இ-ள்.) ஆயிரம் கோடி விருது - மிகப்பலவான பிருதுகளும், ஆயிரம்
கோடிமுரசு - மிகப்பலவான பேரிகைவாத்தியங்களும், மேல் மேல் எழ -
மி்குதியாகஒலிக்க, புறம் தந்த பூபாலர்உம்-(முந்தினநாளில் தோற்று)
முதுகுகொடுத்த(துரியோதனன்சேனை) அரசர்களும், பொரு தானையுடன்
போர்செய்யுஞ்சேனைகளுடனே, வந்து அணைந்தார் - (போர்க்களத்துக்கு)
வந்துசேர்ந்தார்கள்:(இவ்வாறு வந்த) இரு மன்னர் இரு தானைஉம் - (தருமன்
துரியோதனன் என்னும்)இரண்டு அரசர்களது இரண்டு சேனைகளும்,- கருதா
அரக்கன் கொடுதானை.(பிறரைப் பொருளாக) மதியாத இராவணனது கொடிய
இராக்கதசேனையும்,இறைவன் கடு தானை- (யாவர்க்குந்) தலைவனான
இராமபிரானது பயங்கரமானவானரசேனையும், என்ற இரு தானைஉம் போல -
என்ற இரண்டு சேனைகளும்போல, எதிர் உற்ற- எதிரிலே நெருங்கின;(எ-று.)

     அசுராமிசமாய்த் தீயொழுக்கமுடைய துரியோதனாதியரது முடிவில்
தோல்வியடைவதான சேனைக்கு இராவணனது சேனையும், தேவாமிசமாய்
நல்லொழுக்கமுடைய பாண்டவரது முடிவில் வெற்றிபெறுஞ் சேனைக்கு
இராமனதுசேனையும் உவமையாம்-கீழ்த் தருமன்சேனையை முன்னும், (செ-2)
துரியோதனன் சேனையைப் பின்னும் கூறிய முறைமைக்கு மாறுபடக் கூறியது -
எதிர்நிரனிறைப்பொருள்கோள். கருதா அரக்கன் - (தனக்குவருந்தீங்கைத்
தானாகவும் பிறர்சொல்லவும்) எண்ணாத இராக்கதனுமாம். என்ற என்பதன் ஈறு
தொக்கது. விருது-அரசரது வீரம் கல்வி வெற்றி முதலியவற்றைத் துதிபாடகர்
முதலியோர் எடுத்துக்கூறிப் புகழ்வது: வெற்றிக்கு அறிகுறியான கொடியெனினுமாம்.
பூபாலர் - பூமியைக் காப்பவர்; வடசொல்.                        (184)