(இ-ள்) பின் ஒரு பிறப்பின் - பின்பு ஒரு அவதாரத்திலே. யாம்ஏ - நாமிருவருமே, இராம லக்குமர் பேர் பெற்றோம் - ராமலஷ்மணரென்னும் பெயரை யடைந்தோம்; இ நெடு பிறப்பில் - இந்தப் பெரிய அவதாரத்திலே, நீஉம் யான்உம் ஆய் ஈண்டு நின்றோம் - அருச்சுனனாகிய நீயும் கிருஷ்ணனாகிய நானுமாய் இங்கு நின்றோம்; (ஆதலால்), நின்னிடை - உன்னிடத்திலுள்ள, மயக்குஉம் - திகைப்பையும்,இந்த நேயம்உம் - (உறவினரென்றும் நண்பினரென்றுங் கொண்ட) இந்தஅபிமானத்தையும், ஓழிக - நீங்குவாயாக, என்று - என்று அருளிச்செய்து, தன்நிலை அவற்கு காட்டி - தனது உண்மை நிலையான விசுவரூபத்தை அவ்வருச்சுனனுக்குக் காண்பித்தலுஞ் செய்து, தத்துவம் தெளிவித்தான் - உண்மையுணர்வை மனந்தெளியும்படி செய்தருளினான்;(எ-று,) தான் உபதேசித்த உண்மைப்பொருளை அருச்சுனனுக்குக் கட் புலனாக்கி அவனுடைய திகைப்பைத் தீரவொழித்தற்குக் கண்ணன் தன்னிலையை அவற்குக் காட்டியருளினான். ஒரு காலத்தில் தேவர்களெல்லோரும் இராவணன்முதலிய இராக்கதர்களின் உபத்திரவம் பொறுக்க மாட்டாமல் ஸ்ரீமகாவிஷ்ணுவைச்சரணமடைந்துவேண்ட, அவர் தசரதசக்கரவர்த்திதிருமகனாய் ஸ்ரீராமனாக லட்சுமணபரத சத்துருக்கன ரென்னும் தம்பிமார்மூவருடனே திருவவதரித்து அரக்கர்களனைவரையும் அழித்து நல்லோரைக் காத்தருளினார். இராமன் கண்ணனும், லஷ்மணன் அர்ச்சுனனு மாதலால், முதலடியில் 'இராமலக்குமப்பேர்பெற்றோம்' என்ற கிரமத்திற்குஏற்ப இரண்டாமடியில் 'யானும் நீயுமா யீண்டுநின்றோம்' என முறைப்படிவைக்காதது - எதிர்நிரனிறைப் பொருள்கோளின்பாற்படும்; [நன்-பொது. 63]: கீழ்க்கவியில் "நரனுநாரணணு மானோம்" என்றதையும் இதனோடு சேர்க்க. லஷ்மணன் ஆதிசேஷனது அவதாரமாதல் மாத்திரமேயன்றித் திருமாலினது அம்சமுமாதல்போல, அர்ச்சுனனும் இந்திரனது அவதாரமாதல் மாத்திரமேயன்றித் திருமாலினது அமிசமுமாவ னென அறிக. இராமலக்குமர் - வடசொற்றிரிபு. ராமனென்பதற்கு- தன்திறத்தில் யாவரும் மனங்களித்திருக்கப்பெற்றவ னென்பது பொருள்; சகலசற் குணங்களும் பொருந்தினவனென்பது கருத்து. லஷ்மணனென்பதற்கு - (உத்தமபுருஷ) லக்ஷணங்கள் பலவற்றையும் உடையவனென்றும், (பகவத்கைங்கரிய) லஷ்மியோடுகூடியவனென்றும் பொருளாம். இராமலக்குமர்+பேர்=இராமலக்குமப் பேர்;"சில விகாரமா முயர்திணை." மயக்கு - மயங்கு என்னும் முதனிலைதிரிந்த தொழிற்பெயர். மயக்காவது - பொருளல்லவற்றைப் பொருளென்று உணரும் விபரீதஞானம். (7) 8.-உபதேசத்தால் தெளிந்தஅருச்சுனன் ஸ்ரீகிருஷ்ணனைப் போற்றிச் செருச்செய்யச் செல்லுதல். ஆங்கவன் றெளிந்து தேறி யறம்பொருளின்ப முற்றிப் பாங்கினானின்னையெய்தும்பயனெனக்குரைத்தாயென்று பூங்கடிக்கமலநாறும்பொன்னடிபோற்றியான்செய் தீங்கெலாம்பொறுத்தியென்றுசெருச்செயுமாறுபூண்டான். |
|