பக்கம் எண் :

192பாரதம்வீட்டும பருவம்

முடையது, தந்தீ; வடசொல். ஜிதமென்னும், வடசொல்லின் விகாரமாகிய சித
மென்பது, எதுகைநோக்கி, சிந்தம் என விரித்தல்விகாரம்பெற்றது; இனி, சிந்தம்
என்பதற்கு-இடத்துக்குஏற்ப, கொடிச் சிலையில் எனப் பொருள்கொள்ளினும்
அமையும்.                                                (270)

27.-வீமன் சினத்தோடுவருவதுகண்டு துரியோதனன் பலரோடு
அவனெதிரே சீறிவருதல்.

சினத்தோடுதம்மேல்வருகின்றனன்செம்மலென்னா
இனத்தோடுசெல்லும்பிறைவாளெயிற்றேனமென்ன
மனத்தோடியைந்ததிருத்தம்பியரோடுமன்னர்
சனத்தோடும்வந்தானெதிர்சீறித்தரணிவேந்தன்.

     (இ-ள்.) 'சினத்தோடு-கோபத்தோடு, செம்மல்-சிறந்தவீரனான வீமன்,
நம்மேல்வருகின்றனன்-நம்மேல் (எதிர்த்து) வருகின்றான்,'என்னா-என்று அறிந்து,
- தரணிவேந்தன்-நிலவுலகத்துக்கு அரசனான துரியோதனன்,-எதிர் சீறி-
எதிரிற்கோபித்து,மணத்தோடு இயைந்த திருதம்பியரோடுஉம் - (தன்)  மனத்தோ
டொத்தசிறந்ததம்பிமார்களோடும், மன்னர் சனத்தோடுஉம்-(மற்றும்) அரசர்
கூட்டத்தோடும்,இனத்தோடு செல்லும் பிறை வாள் எயிறு ஏனம் என்ன-(தன்)
கூட்டத்தோடுவருகிறபிறைச்சந்திரன்போலும் ஒள்ளிய கோரப்பற்களையுடைய
பன்றிப்போல,வந்தான்- வீமனோடு போர்செய்ய) வந்தான்; (எ-று.)

    கீழ்க்கவியில் வீமனது பலபராக்கிரமங்கள் விளங்க அவனுக்கு யானையையும்
சிங்கத்தையும் உவமைகூறியவர், இங்கே துரியோதனனது இழிவுதோன்ற இவனுக்குப்
பன்றியை உவமைகூறினார்.                                        (271)

28.-அரசர்பலரும் வீமனை வளைத்துக்கொண்டு
கிளைத்துப் போர்விளைத்தல்.

திளைத்தாரரசர்திகிரிக்கிரியென்னவோடி
வளைத்தார்கனகவரைபோல்வருமன்னன்றன்னை
யுளைத்தாரனைவோர்களுமோரொருபாணமேவித்
துளைத்தார்கிளைத்தார்விளைத்தாரமர்தூண்டுதேரார்.

     (இ-ள்.) அரசர் அனைவோர்கள்உம்-(துரியோதனனும் அவன்தம்பிமார்களும்
முதலிய) அரசர்கள் எல்லோரும், தூண்டு தேர் செலுத்தின தேரையுடையவர்களாய்,
ஓடி - விரைந்துசென்று, திளைத்தார் - இடைவிடாது நெருங்கியவர்களாய்,-கனகம்
வரை போல் வரும் மன்னன்தன்னை-பொன்மயமான மேருமலையே (ஓங்கிச்
செந்நிறமுடையவனாய்) வருகிற வீமராசனை, திகிரி என்ன-(உலகத்தை
வளைந்துள்ள)  சக்கரவாளகிரிபோல, வளைத்தார்-சூழ்ந்தவர்களாய், உளைத்தார்-
ஆராவாரஞ்செய்து, ஓர் பாணம் ஏவி-(ஒவ்வொருத்தரும்) ஒவ்வொருஅம்பைச்
செலுத்தி) துளைத்தார்-(அவ்வீமனுடம்பைத்) துளைசெய்து, கிளைத்தார் -
ஊக்கங்கொண்டு, அமர் விளைத்தார்-போர்செய்தார்கள்;(எ -று.)

     அனைவோர்-ரகர வீற்று அயல் அகரம் ஓவாயிற்று.               (272)