(இ-ள்.) குன்றுஏ. குடை கவித்த - கோவர்த்தனகிரியையே குடையாக எடுத்துப்பிடித்த, கோவலன் - பசுக்களைக் காத்தலில் வல்லவனான கண்ணபிரான்,- ஒன்றுஏ மொழியும் உரவோன் முதல் ஐவருக்குஉம் - ஒருவகையாகவே [சத்தியமாகவே] பேசும் வலிமையயுடைய தருமன் முதலிய பஞ்சபாண்டவர்க்கும்,- 'அன்றுஏ - முன்னொருநாளிலேயே, களத்தில்-போர்க்களத்தில், பலி ஊட்டிய- (தன்னைக் காளிக்குப்) பலியாக நிவேதனஞ்செய்த, ஆண்மை வீரன்- பராக்கிரமமுடைய வீரனான இராவான், இன்றுஏ இறந்தான்-இன்றைத்தினத்தில்தான் இறந்திட்டான்; இதற்கு-இதற்காக, உன்னி இரங்கலீர் - (நீங்கள்) சிந்தித்து வருந்த வேண்டா', என்று-, கூறினான் - உபசாரஞ்சொல்லியருளினான். கோவலன், ஐவருக்கும், இரங்கலீரென்று கூறினான் என்க. அன்றைக்கே தன்னைக் கொய்து பலிகொடுத்தவன் இதுவரையில் உயிர்வாழ்ந்திருந்ததற்கு மகிழவேண்டுவதேயொழிய, இன்றைக்கு இறந்ததற்கு வருந்தக்காரணமில்லை யென்றான். இரங்கலீர் -ஏவற்பன்மை எதிர்மறை. (282) 39.-சூரியோதய வருணனை. உன்னிக் களத்தி லுயிர்வீடு முரக மைந்தன் சென்னிக் கதிர்மா மணிசிந்திய சோதி யெல்லாம் தன்னிற் கவர்ந்தா னெனப்பண்டையிற் றாம மேனி மின்னிப் பரிதி குணபாற்றிசை மேவி னானே. |
(இ -ள்.) களத்தில் உயிர் வீடும் - போர்க்களத்திலே உயிர் விட்ட, உரகம் மைந்தன் - நாககன்னிகைகுமாரனான இராவானது, சென்னி-தலையிலுள்ள, கதிர் மாமணி - விளக்கத்தையுடைய சிறந்த மாணிக்கம், சிந்திய - வெளியிட்ட, சோதிஎல்லாம்-ஒளிகளையெல்லாம், உன்னி - எண்ணி [கருத்தோடு], தன்னில்கவர்ந்தான் என - தன்னிடத்துக் கவர்ந்துகொண்டவன்போல, பண்டையின்மேனி தாமம் மன்னி-முன்னையிருந்ததிலும்(தன்) உடம்பு ஒளி மிகப்பெற்று, பரிதி -சூரியன், குணபால் திசை மேவினான் - கிழக்குத்திக் கினிடத்தை அடைந்தான்;(எ-று.) முன் அஸ்தமித்தபொழுது இருந்த ஒளியினும் இப்பொழுது உதிக்கையில் இயல்பாக மிகுந்துள்ள சூரியனொளியை இராவானது தலைமாணிக்கத்தினின்று ஒளிகவர்ந்து மிகுந்ததாக உத்பிரேக்ஷித்தார், உன்னி - (ஆண்மையையே) கருதி என்று உரைத்து, 'உயிர் விடும்' என்பத்தோடு கூட்டலுமாம். வீடும்-விடும் என்பதன் நீட்டல், சிறந்தசாதிநாகத்தின் தலையில் மிகுந்த ஒளியையுடைய மாணிக்கம் உள்ள தென்றல், மரபு. (283) எட்டாம்போர்ச்சருக்கம் முற்றிற்று. ----------- |