னான வீடுமன் வில்லைவளைத்துப் போர்செய்த பராக்கிரமம், விசயனுக்குஉம் இசையும்ஓ - அருச்சுனனுக்கும் பொருந்துமோ? [பொருந்தாது]; ( எ - று.) வில்லின்திறத்தில் அனைவரினும் பேர்பெற்ற அருச்சுனனும் செய்யமுடியாத விற்போரை வயோவிருத்தனான வீடுமன் அப்பொழுது செய்தன னென்பதாம். காற்றினால் மேலெழுப்பப்பட்ட புழுதிகள் மீண்டும் பூமியிலே அடங்குதல்போல, மிகவிசையாக மேல் வந்த வீரர்கள் வீடுமனிடம் தோற்று வந்தவழியே மீண்டன ரென்பது, முதலடியின் கருத்து. வருத்தன் - வடசொல்; கிழவன். (340) வேறு. 17.-சோழராசனும் கிருபன் முதலியோரும் வீடுமனுக்கு உதவியாக வருதல். வெம்புயவி சாலவடை மேருவொரி ரண்டுடைய வீடுமனை நீடுமுனைவாய் அம்புதமெ ழுந்துபொழி கின்றவழி யோடிவரு மனிலமென வந்த ணுகினார் செம்பியனு மாகிருப னுஞ்செறிது ரோணனொடு சேயொடுசெ யத்தி ரதனுந் தம்பியரு மாமனுஞ்ச யிந்தரொடு வெய்யபக தத்தனொடு சல்லி யனுமே. |
(இ-ள்.) (அப்பொழுது), நீடு முனைவாய் - பெரிய அப்போர்க்களத்திலே, செம்பியன்உம் - சோழனும், மா - சிறந்த, கிருபன்உம் - கிருபாசாரியனும் செறி - வலிமைமிகுந்த, துரோணனொடு-துரோணாசாரியனும் சேயொடு-அவன்மகனான அசுவத்தாமனும், செயத்திரதன்உம் - சைந்தவனும், தம்பியர்உம்-(துரியோதனன்) தம்பிமார்களும், மாமன்உம் - (அவர்கள்) மாமனான சகுனியும், சயிந்தரொடு - சிந்துதேசத்தரசர்களும், வெய்ய- கொடிய, பகதத்தனொடு - பகதத்தனும், சல்லியனும் -, (என்னும் இவர்கள்), - அம்புதம் எழுந்து பொழிகின்ற வழி ஓடி வரும் அணிலம் என - மேகம் வானத்திலெழும்பி மழைபொழிகிற இடத்திலே (அதற்கு உதவியாக) ஓடி வருகிற காற்றுபோல, வெம் புயம் விசாலம் வட மேரு ஓர் இரண்டு உடைய வீடுமனை - வலிய தோள்களாகிய பெரியவடதிசையிலுள்ள மேருமலைகளிரண்டையுடைய பீஷ்மனை, வந்து அணுகினார் - வந்து சேர்ந்தார்கள்; (எ - று.) மழையோடு பல திசைக்காற்றுங் சேர்ந்து உலகத்தைவருத்தத் தொடங்கினாற்போல, வீடுமனோடு பல அரசர்கள் கூட எதிர்ச் சேனையை அழிக்கத் தொடங்கினரென்பதாம். மேரு இரண்டு - இல்பொருளுவமை. மேரு எவ்விடத்திலுள்ள தென்றால், நமக்கு வடக்கிலுள்ள தென வேண்டுதலின், அதனை 'வடமேரு' என விளங்கக் கூறினார். அம்புதம் - நீரைக்கொடுப்பது; வடசொல். முன்னே சயத்திரதன் என வந்ததனால், பின்னே சயிந்தர் என்றது, அவன் ஒழிந்த சிந்துநாட்டரசர்களை : சயிந்தர் = ஸைந்தவர். இதுமுதல் இருபத்தொருகவிகள் - பெரும்பாலும் முதலைந்து சீரும் விளங்காய்ச்சீர்களும், ஆறாவது தேமாச்சீரும், ஏழாவது புளிமாச்சீரும் ஆகிய கழிநெடிலடி நான்கு கொண்ட எழுசீராசிரிய விருத்தங்கள். (341) |