இதுவும், மேற்கவியும் - குளகம். (இ-ள்.) ஆகம்எங்கும் தங்கும் - (தன்) உடம்பு முழுவதிலும் பொருந்திய, அம்பின் - அம்புகளாகிய, அணை மேல்-படுக்கையின் மேல் வீழ்வான் - விழுபவனாகிய வீடுமன, 'மாகம் சூழும் பரிதி - வானத்தை வலம் வருகிற சூரியன், வடபால் எய்தும் அளவுஉம் - வடபுறத்தை அடையுமளவும் [உத்தராயணம் வருமளவும்], நாகம் காணேன் - மேலுலகத்தை அடையமாட்டேன்', என்ன - என்று எண்ணி உயிரை ஓடா வண்ணம் யோகம் கொண்டு நிறுவி - தன் உயிரை (உடம்பைவிட்டு) நீங்காதபடி யோகவலிமையால் நிறுத்தி, ஞானத்தோடே வைக- நல்லறிவோடு தங்க,-(எ-று.)-''எவரும்,...அன்னான்பாதஞ் சென்னிமேற்கொண்டழுதார்'' என வருங்கவியோடு முடியும். ஆடிமாசம்முதல் மார்கழிமாசம்வரையிலும் தக்ஷிணாயமாகிய ஆறு மாசம் தேவர்களுக்கு இரவு: தைமாசம் முதல் ஆனிமாசம் வரையிலும் உத்தராயணமாகிய ஆறுமாசம் அவர்களுக்குப் பகல்; ஆக, மனிதமானத்தால் ஒரு வருஷம் தேவமானத்தால் ஒருநாளாம்: தேவர்களுக்கு இரவாகிய தக்ஷிணாயநத்தில் இறந்தவர்களுக்கு நற்கதியில்லை யென்றும், உயர்கதிபெறுபவர் உத்தராயணத்திலே இறப்பரென்றும் நூற்கொள்கை யாதலால் வீடுமன், தக்ஷிணாயநத்தில் உயிர்விடாமல் உத்தராயணத்தை எதிர்நோக்கி உயிர்த்திருப்பவனானான். சூரியன் வடபுறமாக ஒதுங்கிச் சஞ்சரிக்குங்காலம் உத்தராயணம்; தென்புறமாகச் சஞ்சரிக்குங் காலம் தக்ஷிணாயநம். யோகமாவது-இயமம் முதலிய எட்டு இலக்கணங்களோடு நின்று செய்யுந் தவம். யோகம் வல்லார்க்கு வேண்டின பொழுது உயிரைவிடும் உறுதிநிலைகைகூடுதலால், 'யோகங்கொண்டே உயிரை நிறுவி' என்றார். வேண்டியபொழுதுஉயிர் விடும்படி வீடுமனுக்குத் தந்தையால் வரம் கொடுக்கப்பட்டிருந்ததென்றும்நூல்கள் கூறும்: மேல் 43-ஆம்பாட்டில் "வரத்தின் பயனுலுயிரைநிறுத்தும்மன்னன்'' என்று இந்நூலாசிரியருங் கூறுவர். பி.ம்: இரவி. இதுமுதற் பதினாறுகவிகள்-எல்லாச்சீரும் மாச்சீராகிய கழிநெடிலடி நான்குகொண்ட அறுசீராசிரியவிருத்தங்கள். (362) 39.-தருமன் முதலானாரும் துரியோதனன் முதலானாரும் வீடுமன்பாதத்தைச் சென்னியிற்கொண்டுஅழுதல். இங்குந்தருமன்முதலாவுள்ளமன்னரெவரும் அங்குந்துரியோதனனையாதியானவரசர் பொங்குங்கடலாலுலகம்பொன்றுமன்றுபோலச் சிங்கமன்னான்பாதஞ்சென்னிமேற்கொண்டழுதார். |
(இ-ள்.) இங்குஉம்-இந்தப்பக்கத்திலும், தருமன் முதல் ஆ உள்ள மன்னர் எவர்உம்-யுதிட்டிரன் முதலாகவுள்ள அரசர்களெல்லோரும், அங்குஉம்- எதிர்ப்பக்கத்திலும், துரியோதனனை |