வுள்ளது; என் சிரத்தின் தாழ்வு தீர்ப்பாய் - எனதுதலை தாழ்ந்திருத்தலை நீக்குவாய்[தலைக்கு உயரஞ்செய்வாய்]', என்ன-என்று சொல்ல,-(உடனே அருச்சுனன்), மகிழ-(அவ்வீடுமன்) மகிழும்படி, உரத்தின் அம்பால்- வலிமையையுடைய (தனது)அம்புகளால், முடியை உயரும் வண்ணம் உயர்த்தான்- (அவ்வீடுமனது) சிரசைஉயர்ந்திருக்கும்படி தலையணை செய்தான்; (எ-று.) மீண்டும் மூன்று அம்புகளைத் தொடுத்து வீடுமன்தலையை அருச்சுனன் உயர்த்தினா னென முதனூல் கூறும். சுத்தவீரர்கள் போரிற்பட்டபுண்ணைப் பொருளாகக் கருதா ராதலாலும், வீடுமன் துன்பத்தையே இன்பமாக நினைக்கும் இயல்புடையவனாதலாலும், 'சரத்தின் சயனம் பஞ்சசயனங்களிலும் இனிது' என்றான். (367) 44.-வீடுமன் துரியோதனனுடைய கண்ணீரைத் துடைத்துக் கன்னனைச் சேனாபதியாக்கிப் பொரக் கூறுதல். சொரியுங்கண்ணீர்துடைத்துத்துரியோதனனைநோக்கி வரியுஞ்சாபக்கன்னன்மன்னர்க்குருமேறன்னான் தெரியுங்காலத்தவனைச்சேனைத்தலைவனாக்கிப் புரியும்போருநாளைப்புரிமினென்றுபுகன்றான். |
(இ-ள்.) (பின்புவீடுமன்), சொரியும் கண் நீர் துடைத்து - (துரியோதனனது) கண்களினின்று பெருகுகிற நீரைப் போக்கி [சமாதானப்படுத்தி], துரியோதனனை நோக்கி-, 'மன்னர்க்கு உரும் ஏறு அன்னான் - பகையரசர்களுக்குப் பேரிடியையொத்தவனும் [தவறாது அழிவுசெய்பவனும்], தெரியும் காலத்தவன் - ஆராய்கிறகாலத்தையுடையவனும் ஆகிய, வரியும் சாபம் கன்னனை - கட்டமைந்த வில்லையுடைய கர்ணனை, சேனை தலைவன் ஆக்கி - (இனிச்) சேனாபதியாகவைத்துக் கொண்டு, புரியும்போர்உம்-செய்யவேண்டிய யுத்தத்தையும், நாளை புரிமின் - நாளைமுதல் செய்யுங்கள்',என்று புகன்றான் - என்றுசொன்னான்; (எ-று.) ஒன்பதாநாளிரவில் துரியோதனாதியர் கூடிய பொழுது கர்ணன் சொன்னதை, துச்சாதனன் தமையன்சொற்படி வீடுமனிடம் தெரிவிக்க, அப்போது ''ஒருநாளுநீவிர் பொறுமின்களும்மை யுலகாளுவிக்கவருவோர், வருநாடொடங்கியமர்செய்து தெவ்வைமடிவிப்பர்...... வாழ்திர்'' என்று கூறியதற்கு ஏற்ப, வீடுமன் இங்ஙன் கூறுகின்றானென்க. தெரியுங்காலத்தவன் என்பதற்கு - தான்வந்து போர்செய்யும்பொருட்டு எனது அழிவு காலத்தை எதிர்நோக்கியிருப்பவ னென்றும், பகைவெல்லும் அரசர்க்கு அவசியம் அறியவேண்டிய காலநிலைமையை அறியுந்தன்மைய னென்றுங் கருத்துக் கொள்ளலாம். இது பரிகாசமாகக் கூறியதென்னலாம். வீடுமன் இவ்வார்த்தை சொல்லும்பொழுது பத்தாநாள் சூரியாஸ்தமனகாலம் சமீபத்தி லிருந்ததனால், 'நாளைப்புரிமின்' என்றான். (368) |