பக்கம் எண் :

252பாரதம்வீட்டும பருவம்

சூரியன், சென்று-போய், மேலை திக்கின் எல்லை சேர்ந்தான் - மேற்குத்திக்கின்
இடத்தை யடைந்தான் [அஸ்தமித்தான்]; (அப்பொழுது), செக்கர் வானம் -
(அத்திசையில் காணப்படும்) செவ்வானம், அன்று வருணன் அன்பால் அழுத
செந்நீர் ஆறு ஆய் எங்கு உம் பரந்தது ஒக்கும்-அப்பொழுது அவ்வருணன்
(மகனிடத்து) அன்பினால் அழுத சிவந்த கண்ணீர் ஆறாகி எவ்விடத்தும்
பரவியதை யொக்கும்; (எ-று.)-மன்ற-தெளிவையுணர்த்துவதோர் இடைச்சொல்;
ஐயச்சொற்களும், உவமைச்சொற்களும், துணிபுச்சொற்களும் கூட்டிச்சொல்லுதலும்
தற்குறிப்பேற்றவணியின் இலக்கண மாதலால், 'மன்ற' என்ற துணிபுச் சொல்லைக்
கொடுத்தார்:  தற்குறிப்பேற்றவணி.

     வீடுமனது தந்தையானசந்தனு வருணனது அவதார மென்பது, முன்
கூறப்பட்டது. அதிகசோகத்தால் உடம்பிலுள்ள இரத்தமே கண்ணீராகப் பெருகிய
தென்பார், 'அன்பாலழுத செந்நீர்' என்றார்போலும். 'தங்கண், உள்ளநீரெல்லாமாறி
யுதிரநீரொழுக நின்றான்' என்றார் கம்பரும் கும்பகருணன் வதைப்படலத்து. இனி,
புதுநீர் வெள்ளம் செந்நிறமுடைத்தாயிருக்குந் தன்மைபற்றி அச்செம்மையை
வருணன் கண்ணற்புதிதாய்வருகிற நீர்ப்பெருக்குக்கு ஏற்றிக் கூறிய தெனினும்
அமையும்.                                                     (370) 

47.-இருசேனையும் பாசறைபுக, வீடுமனிறந்ததைச் சஞ்சயன்மூலமாகத்
துரியோதனன் தன்தந்தைக்குத் தெரிவித்தல்.

பாண்டுமன்னன்புதல்வர்படையும்பாடிபுக்க
தாண்டுபாடிபுக்கதரவத்துவசன்படையும்
மீண்டுமுதல்வன்பட்டதெந்தைக்குரைமினென்று
தாண்டுமான்றேர்மைந்தன்சஞ்சயனைவிடுத்தான்.

     (இ-ள்.) ஆண்டு-அப்பொழுது, பாண்டு மன்னன் புதல்வர் படைஉம்-
பாண்டவர்களது சேனையும், பாடி புக்கது-படைவீட்டை யடைந்தது; அரவம்
துவசன் படைஉம்-துரியோதனன்சேனையும், பாடி புக்கது-படைவீட்டை யடைந்தது;
(அப்பொழுது), தாண்டுமான் தேர் மைந்தன்-தாவிப் பாயுங்குதிரைகளைப்பூட்டிய
தேரையுடைய குமாரனான துரியோதனன், ஈண்டு முதல்வன் பட்டது எந்தைக்கு
உரைமின் என்று-இப்பொழுது நமதுகுலத்துப் பெரியவனான வீடுமன் அழிந்ததை
என்தந்தைக்கு [திருதராஷ்டிரனுக்கு]ச் சொல்லு மென்று, சஞ்சயனை விடுத்தான் -
சஞ்சயமுனிவனை அனுப்பினான்;  (எ-று.)

     ஸஞ்சயன்-வடசொல்; இவன் கவல்கணனென்பவனது குமாரன்; ஆதலால்,
இவனுக்குக் காவல்கணி யென்று ஒருபெயரும் வடமொழியில் வழங்கும்; இவன்,
திருதராஷ்டிரனுக்கு மிகவும் இஷ்டனான நண்பன்; இவன் அவனுக்குச்
சிலசமயங்களில் தேர் செலுத்துதலும் உண்டு. இவன் நாள்தோறும் பகலில் போரில்
நடக்கிறசெய்தியை அறிந்துபோய் இரவில் திருதராட்டிரனுக்குச் சொல்லிவந்தான். 
                                                           (371)