பக்கம் எண் :

முதற் போர்ச்சருக்கம்35

36.-வீடுமற்கெதிராக அருச்சுனன் போர்தொடங்கலும் இருவர்சேனையும்
வளைதல்.

விசையன்வெஞ்சிலைவீடுமற்கெதிரமர்தொடங்கலும்வெருவவெண்
டிசையுமொன்றவளைந்துகொண்டனவிருவர்தம்பொருசேனையு
மிசையெழுந்துகளாலிமைத்தனர்மேலைநாகரும்வெங்கழுத்
தசையநின்றுசுமந்திளைத்தனர்கீழைநாகருமடையவே. 

     (இ-ள்.) விசையன் - அருச்சுனன், வெம் சிலை வீடுமற்கு எதிர் - (பகைவர்க்குக்)
கொடிய விற்போரில் வல்ல பீஷ்மனுக்கு எதிரிலே, அமர் தொடங்கலும் - போரைச்
செய்யத்தொடங்கின வளவில், இருவர்தம் பொரு சேனைஉம்-போர்செய்யவல்ல
இரண்டு திறத்தாரது சேனைகளும், எண் திசைஉம்வெருவ - எட்டுத்திக்குக்களும்
அஞ்சும்படி, ஒன்ற வளைந்துகொண்டன - ஒன்றாக ஒருங்குசூழ்ந்துகொண்டன;
(அப்பொழுது), மிசை எழும் துகளால் - மேலெழுந்த புழுதி படுதலால்,
மேலைநாகர்உம் - மேலுலகத்துள்ள தேவர்களும். இமைத்தனர் - (தமது
இமையாக்கண்களை) இமை மூடினார்கள்; கீழைநாகர்உம் அடைய- கீழுலகத்துள்ள
சர்ப்பசாதியார் எல்லோரும், நின்று சுமந்து வெம் கழுத்து அசைய இளைத்தனர்-
(அந்த மிக்கபாரத்தை) நிலைநின்று சுமந்து வெவ்விய (தமது) கழுத்துக்கள் வருந்த
இளைப்படைந்தார்கள் ; (எ - று,)

     விசையன் - எதுகைநோக்கிய இடைப்போலி. என்திசை - ஆகு பெயர்.
அடையவென்பதை மேலைநாகர்க்குங் கூட்டுக. மேலை, கீழை என்பவற்றில், ஐ-
சாரியை கம்-இன்பம், அதன் எதிர்மறை-அகம்; அது, துக்கம்; அது இல்லாதது -
நாகம்; சுவர்க்கலோகம் எனக் காரணங் காண்க. சேனைமிகுதியைவிளக்குந்
தொடர்புயர்வுநவிற்சியணி இதனிற் காண்க.                       (36)

37.-வீடுமனுக்கும் அருச்சுனனுக்கும் துணையாகச் சிலமன்னவர் வருதல்.

உகவைதன்னொடுவீடுமற்குறுதவியாகமகீபனுஞ்
சகுனிசல்லியனவரையும்பலதம்பிமாரையுமேவினான்
மிகுகொடுஞ்சினவீமன்விந்தரனபிமனாதியர்விசயனுக்
கிகனெடும்படையரசனேவலினுதவியாம்வகையெய்தினார்.

     (இ - ள்.) மகீபன்உம் - துரியோதனராசனும், உகவைதன்னொடு-(போரில்)
உற்சாகத்துடனே, சகுனி சல்லியன் அவரைஉம் - சகுனியும் சல்லியனும்
ஆகியவர்களையும், பல தம்பிமாரைஉம் - (தனது) தம்பியர்
தொண்ணூற்றொன்பதின்மருள் அநேகம்பேரையும், வீடுமற்கு உறும் உதவி ஆக -
பீஷ்மனுக்குமிக்க துணையாம்படி, ஏவினான்- கட்டளையிட்டனுப்பினான்; மிகுகொடு
சினம்-மிக்க பயங்கரமான கோபத்தையுடைய, வீமன் விந்தரன் அபிமன் ஆதியர் -
பீமசேனனும் விந்தரனும் அபிமந்யுவும் முதலியவர்கள், இகல்நெடு படை அரசன்
ஏவலின்-வலிய பெரிய சேனையையுடைய யுதிட்டிரராசனது கட்டளையினால்,
விசயனுக்கு உதவி ஆம் வகை எய்தினார்- அருச்சுனனுக்குத் துணையாம்படி
வந்தடைந்தார்கள்; (எ - று.)