பட்டுவிழவும், அமர் செய்தான் - போர்செய்தான்; (அப்பொழுது), சல்லியன்-, பாவியோடு இனி வில் எடுப்பது பாவம் என்று - இந்தப் பாவியோடு இனிமேல் வில்லெடுத்துப்போர்செய்வது நல்லதன்றென்று கருதி, எதிர் சென்று ஒரு பாரம் வேல்ஏவினான்-உத்தரனெதிரிற்போய் பரியதொருவேலாயுதத்தை (அவன்மேல்) எறிந்தான்;(எறிந்தமாத்திரத்தில்), இவன்உம்-உத்தரனும், வானகம் ஏறினான்- தேவலோகமடைந்தான்; (எ-று.) விற்போரில் உத்தரனை வெல்லமாட்டாமல் சல்லியன் உக்கிரமான வேலையெடுத்து வீச, அது பட்டவளவில் உத்தரன் இறந்தானென்பதாம். அமர்செய்தா னென்பதை அமர்செய்ய எனவும், ஏவினானென்பதை ஏவ எனவும் முற்றெச்சமாக்கின், ஒருவாக்கியமாம். நித்தியமாதலால் என்றும் அழியாத உயிரை 'வீழ' என்றது, அது உடம்பினின்று நீங்குதலை. பாவி - பாபீயென்னும் வடமொழித்திரிபு; தீவினையுடையானென்று பொருள்: இங்கே இது கொடியவனென்னுமாத்திரமாய் நின்றது; "அழுக்கா றென வொரு பாவி" என்ற குறளில், 'இருமையுங் கெடுத்தற்கொடுமைபற்றி, அழுக்காற்றினைப் பாவியென்றார்: கொடியானைப் பாவியென்னும் வழக்குண்மையின்' எனப் பரிமேலழக ருரைத்தவாறு அறிக. தன்னைப் பலவகையாலும் அழித்த கொடுமைபற்றி, உத்தரனைச் சல்லியன் பாவியென வெறுத்தனனென்க. பாவம் - பாபம்; இதுவும், இங்கே, நற்செய்கையன்று என்றமாத்திரமாய் நின்றது. போரிற் பின்வாங்காது பகைவராலிறந்தவர் வீரசுவர்க்கம்புகுவரென்பது நூற்றுணிபாதலால், 'வானகமேறினான்' என்றார். இறந்தானென்பதை 'வானகமேறினான்' என வேறொருவகையாற் கூறினதை, பரியாயவணியென்பர் தண்டியாசிரியர். கருதிய பொருளை வெளிப்படையாகக் கூறாது அப்பொருள்தோன்ற வேறு வகையாற்கூறுதல், இவ்வணியினிலக்கணமாம்; இதனைப் பிறிதினவிற்சியணி என்று கூறுதலும் உண்டு. (40) 41.-பாண்டவசேனை உத்தரனிறந்ததனாற் பெருங்கலக்க மடைய வீமன் போர்செய்ய வருதல். இன்றுபட்டனன்மச்சர்கோமகனென்றுதங்களினேரலார் ஒன்றுபட்டுமிகைத்தெழுந்தனரூழிவாயெழுமுததிபோல் அன்றுபட்டகலக்கமப்படியைவர்தம்படையமரின்மேல் வென்றுபட்டமணிந்தவாரணமென்னவந்தனன்வீமனே. |
(இ-ள்.) ' மச்சர் கோ மகன் - (பாண்டவர்களுக்கு அரிய அஞ்ஞாத வாசத்தில் பெரிய துணையாய்நின்ற) விராடராசனது புத்திரனான உத்தரன், இன்று பட்டனன் - இப்பொழுது இறந்தான்,' என்று - என்றகாரணத்தால், (மகிழ்ந்து), நேரலார் - பகைவர்கள் [துரியோதனன் பக்கத்தார்], தங்களில் ஒன்றுபட்டு - தங்களுக்குள் ஒன்றுசேர்ந்து, ஊழிவாய் எழும் உததிபோல் - கல்பரந்த காலத்திலே பொங்கியெழுகிற கடல்போல, மிகைத்து எழுந்தனர்-செருக்குக்கொண்டு கிளர்ந்தார்கள்; ஐவர்தம் படை - பாண்டவசேனை, அன்று பட்ட கலக்கம்- (விராடகுமாரன் இறந்தானென்று) |