பக்கம் எண் :

முதற் போர்ச்சருக்கம்49

     ஒரு காலத்தில் பலபேரைப் புறங்காட்டியோடச் செய்து நிற்றற்கு, காற்று
இலவம்பஞ்சைச் சிதறச்செய்தல் உவமையெனக் காண்க. பனைக்கைக் கார்எனவே,
யானையாயிற்று. கார் - உவமையாகுபெயர். காலாள்-வேற்றுமைத்தொகை. அநிலம்-
வடசொல்.

55.-துரியோதனனுரைப்பச் சுவேதனை வீடுமனெதிர்த்தல்.

பட்டனவொழிந்துபலபடையுமிவனம்பிற்
கெட்டநிலைகண்டுரககேதனனுரைப்பத்
தொட்டவரிவில்லினொடுசூறையனிலம்போல்
விட்டபரிமாவிரதவீடுமனெதிர்ந்தான்.

     (இ - ள்.) இவன் அம்பின் - இந்தச்சுவேதனது பாணங்களால், பட்டன
ஒழிந்து- இறந்தசேனைகள்போக, பல படைஉம் - (இறவாத மற்றை)
அநேகஞ்சேனைகளும்,கெட்ட - தோற்றுஓடின, நிலை - நிலைமையை, கண்டு -
பார்த்து, உரக கேதனன் -பாம்புக்கொடியனான துரியோதனன், உரைப்ப -
சொல்ல,- சூறை அனிலம் போல்விட்ட பரி மா இரதம் வீடுமன் -
பெருஞ்சுழல்காற்றுப்போல மிகவிசையாகவிடப்படுகிற குதிரைகளைப்பூட்டிய
தேரையுடைய பீஷ்மன், தொட்ட வரிவில்லினொடு - (கையிற்) பிடித்த
கட்டமைந்தவில்லினுடனே, எதிர்ந்தான் -(சுவேதனெதிரில்) வந்தான்; (எ - று.)

     'இவனம்பின்' என்றது - மத்திமதீபம். சூறையனிலம்போல் எதிர்ந்தான்
எனினும்அமையும். விரதமெனப்பிரித்துரைக்கவும் இடமுண்டு.       (55)

56.-மூன்று கவிகள்-வீடுமன் சுவேதனோடு மும்மரமாகப் பொருது
இளைத்தமையைக் கூறும்

மத்திரனைவிட்டுமிசைவந்தமகிபதிமேல்
அத்திரமும்விட்டவனடற்சிலையறுத்தான்
சித்திரமெனும்படிதிகைத்தனன்விராடன்
புத்திரன்விடுங்கணைபொறாதுபுலிபோல்வான்.

     (இ - ள்.) (அப்பொழுது சுவேதன்), மத்திரனை விட்டு - சல்லியனை நீங்கி,
மிசைவந்த மகிபதிமேல் அத்திரம்உம் விட்டு - தன்மேல் எதிர்த்து வந்த
வீடுமராசன்மேல் அம்புகளையும் எறிந்து, அவன் அடல் சிலை அறுத்தான் -
அவ்வீடுமனது வலிமையையுடையவில்லை அறுத்துத்தள்ளினான்;  (தள்ளவே), புலி
போல்வான் - (பலபராக்கிரமங்களிற்) புலியை யொப்பவனாகிய வீடுமன், விராடன்
புத்திரன் விடும் கணை பொறாது - விராடகுமாரனான சுவேதன் விடுகிற
அம்புகளைப் பொறுக்கமாட்டாமல், சித்திரம் எனும்படி திகைத்தனன் -
எழுதுசித்திரமென்று சொல்லும்படி பிரமித்து நின்றான்; (எ - று.)

     சந்தனுவின் மூத்தகுமாரனான இவனே நிலவுலகத்துக்குஉரிய அரசனாதலின்,
மகிபதியென்றார். சித்திரம் - செயலறுதற்குஉவமை. 'அத்திரமும்விட்டு' என்ற
உம்மை- 'மத்திரனைவிட்டு' என்றதனை நோக்கிய இறந்தது தழுவிய எச்சம். (56)