வேறொருகையினால், சுடர் வாளினை எடுத்தான்-ஒளியையுடைய வாளாயுதத்தை யெடுத்தான்; (எ - று.) முதலில் வலக்கையால் வாளைஎடுத்துவந்தவன் அவ்வலக்கை வீடுமனால் அறுக்கப்பட்டவளவில் இடக்கையால் வாளை யேந்தினன் என்பதாம். அப்பொழுதும் வில்லையேந்தாமல் வாளையே யேந்தினான், வீடுமனது பழிப்புக்கு இடங்கொடாமைப்பொருட் டென்க. வலக்கை யற்றவர் இடக்கைவில்லில் எயிற்றுப்படை தொடுத்தல்கூடுதலைக் கீழ் இச்சருக்கத்து இருபத்தெட்டாங்கவியிற் காண்க. (67) 68. | எடுத்தவடி வாளினொடு மெண்ணில்பல பாணந் தொடுத்துவரு வீடுமனை மாமுடி துணிப்பான் அடுத்துவரு போதவ னழன்றொரு சரத்தால் நடுத்தகை யுறாமலவ னல்லுயிர் கவர்ந்தான். |
(இ-ள்.) எண் இல் பல பாணம் தொடுத்து வரு வீடுமனை - அளவில்லாத அநேகம் அம்புகளை எய்துவருகிற பீஷ்மனை, மாமுடி துணிப்பான் - பெரியதலையையறுக்கும்பொருட்டு, எடுத்த வடி வாளினொடு உம் - (ஒருகையில்) ஏந்திய கூரிய வாளாயுதத்துடனே, அடுத்து வரு போது - (சுவேதன்) நெருங்கிவரும்பொழுது, அவன் - அந்தவீடுமன், அழன்று - கோபித்து, ஒரு சரத்தால் - ஒப்பற்ற அம்பினால், நடு தகை உறாமல் - இடையிலே தடைப்படாமல், அவன் நல் உயிர் கவர்ந்தான் - அச்சுவேதனது நல்லஉயிரை (உடம்பினின்று) வலியவாங்கினான் [அவனைக்கொன்றான் என்றபடி], (எ -று.) இப்பாட்டில், நடுத்தகையுறாமல் என்றது, சிறந்தகுணமாகிய நடுவுநிலைமை தன்பக்கல் பொருந்தாபடி என்றபொருளையும் உணர்த்தும்; தான்கூறியபடி வில்லைவிட்டு வேறுபடைக்கலமேந்திய வீரனோடு தானும் அப்படைக்கலத்தையே ஏந்தாது விற் கொண்டு போர்விளைத்தது, உத்தமவீரனான் வீடுமனுக்கு நடுவு நிலைமை தவறுதலாம்; நடுவு நிலைமை - பக்ஷபாதமில்லாததன்மை. தகை - தடையென்னும் பொருளில், முதனிலைத்தொழிற்பெயர்; மற்றொருபொருளில், தகை - தகுதி, சற்குணம்; இது - தொழிலடியாப் பிறந்ததாயினும் பொருளாற் பண்புப்பெயர். வீடுமனை மாமுடிதுணிப்பான் - இரண்டுசெயப்படுபொருள்வந்த வினை; இது வடமொழி நடை; இதனை வடநூலார் த்விகர்மகர்த்தரிப்ரயோகமென்பர். இனி, தமிழ்நடையாக, வீடுமனை முடியிலே துணிக்கும்பொருட்டு என்றாவது, உருபுமயக்கமாய் வீடுமனதுமுடியைத் துணிக்க வென்றாவது கொள்ளலாம். வீடுமனைப்போல வஞ்சனைகருதாமல் நீதியாக மானத்தைப் பாதுகாத்து வாட்போர்செய்து இறந்ததுபற்றி, சுவேதனுயிர் நல்லுயிரெனப்பட்டது, அப்பொழுது உபயோகித்தது, பிரமாஸ்திரம்: "சென்று திசைவணங்கத் தெய்வப் படை நினைந்து, துன்று நெடுஞ்சிலைநாண் தோளலைப்ப - மன்றுலகில், மன்னுயிரைத் தான் படைத்தான் மந்திரத்தால் மற்றவன்ற, னின்னுயிரைப் போக்கினானெய்து" என்பது, வெண்பாப்பாரதம். பி - ம்: போதவனுமற்றொரு. (68) |