பக்கம் எண் :

66பாரதம்வீட்டும பருவம்

வானையாதியானபூதபேதமாகிமாயையா
யேனைஞானரூபியாகியாவுமாயவெம்பிரான்.

     (இ - ள்.) வானை ஆதி ஆன - ஆகாயத்தை முதலாகவுடைய, பூதபேதம்
ஆகி - பூத வகைகளின்வடிவமாய், மாயை ஆய் - மாயையின் வடிவமாகி, ஏனை
ஞானரூபி ஆகி - (அம்மாயைக்கு) வேறான தத்துவஞான சொரூபியாய், யாஉம்
ஆய - (இன்னும் பிரபஞ்சத்து உள்ள) எல்லாப்பொருளுந் தானேயாய்நின்ற, எம்
பிரான் - நமக்கெல்லாந்தலைவனான கண்ணபிரான், (அப்பொழுது), சோனை மேகம்
என்ன வாளி தூவு திட்டத்துய்மனை - இடைவிடாப்பெருமழைபொழியுங்
காளமேகம்போல அம்புமழையைச்சொரிகிற திட்டத்துய்மனை (நோக்கி), நீ
சேனைநாதன் ஆகி செரு செய்க என்று செப்பினான்-'(இனி) நீ
சேனைத்தலைவனாய்ப் போர்செய்வாயாக' என்று சொல்லியருளினான்;

     திட்டத்துய்மனைச் சேனாபதியாக்கினது, இவன் துரோணனைக்
கொல்லும்வல்லமையுடையானாதலாலும், அத்துரோணனிடத்து வில் முதலிய
ஆயுதவித்தையனைத்தையுங் கற்றறிந்தவ னாதலாலும், பாண்டவர்க்கு அன்புள்ள
மைத்துன னாதலாலும், முன்னம் சுவேதனிருக்கையிலேயே சேனைத்தலைமையில்
இளவரசாக அமைக்கப் பட்டவனாதலாலும் என அறிக. தன்னையொழிந்த
நான்குபூதமும் தன்னிடத்தே அகன்று விரிதற்குக் காரணமான பெருமையையுடையது
ஆகாயமாதலால், அதனை முதலதாக்கி 'வானையாதியான பூதம்' என்றார்;
ஆகாயத்தினின்று வாயுவும், வாயுவினின்று அக்கினியும், அக்கினியிலிருந்து
சலமும்,சலத்திலிருந்து நிலமும் பிறந்ததென வேத மோதும். பூத பேதம் -
ஐம்பெரும்பூதங்கள். எம்பிரான் என்றது, எல்லாவுயிர்களையும் உளப்படுத்தி.
மாயையாகி -பிரபஞ்ச சிருஷ்டிக்குக் காரணமான பிரகிருதத்துவத்தின் வடிவமா
யென்றும்உரைக்கலாம்.                                        (79)

3.-இருவர் சேனையும் போர்க்களஞ்சேர்தல்,

ஐவர்சேனையிங்கெழுந்ததங்கெழுந்ததடலுடைத்
தெவ்வர்சேனைவெகுளியோடெழுந்திரண்டுசேனையும்
பவ்வமோரிரண்டெழுந்துபடர்வதென்னவெருவருங்
கவ்வையோடுவந்துவெங்களத்திடைக்கலந்தவே,.

     (இ - ள்.) இங்கு-இந்தப்பக்கத்தில், ஐவர் சேனை- பாண்டவர் சேனை,
எழுந்தது - (போருக்குப்) புறப்பட்டது; அங்கு- அந்தப்பக்கத்தில், அடல் உடை
தெவ்வர் சேனை - வலிமையையுடையபகைவர்களான துரியோதினாதியரது
சேனை,எழுந்தது- (போருக்குப்) புறப்பட்டது; (இவ்வாறு), இரண்டு சேனையும்-,
வெகுளியோடு எழுந்து - கோபத்தோடு புறப்பட்டு, பவ்வம் ஓர் இரண்டு எழுந்து
படர்வது என்ன - ஒப்பற்ற இரண்டுகடல்கள் கிளம்பி (ஒன்றன்மே லொன்று)
செல்வது போல, வெருவரும் கவ்வையோடு வந்து - (கேட்பவர்) அஞ்சத்தக்க
பேராரவாரத்துடனே வந்து, வெம் களத்திடை- கொடியபோர்க்களத்திலே, கலந்த -
சேர்ந்தன; (எ - று.)