தற்குறிப்பேற்றவுவமையணி. வடிவுவமை. மரக்கலத்துக்கு யானை உவமைகூறப்படுதலை, "களிறுங் கந்தும் போல நளிகடற், கூம்புங்கலனுந் தோன்றும்," "பொருமால்களிறு போன்றோர் வங்கம்" என்ற முன்னோர் செய்யுட்களிலுங் காண்க. பம்பிமேலேறிதருபவனன் - பெருங்காற்று. கீழ்ப்பாட்டில் தம்பிக்குத் தமையனையும், இப்பாட்டில் மைந்தனுக்குத் தந்தையையும் உவமைகூறினார். 16. | வருகளிறொருகையால்வாங்கிவீசலிற் பொருபணைமண்ணுறப்புதையவீழ்ந்தன விரிதிரைநெடுங்கடல்விசும்புதூர்த்தநா ளிருநிலமிடந்திடுமேனம்போன்றவே. |
(இ - ள்.) வரு களிறு - (தன்மேல் எதிர்த்து) வருகிற யானைகளை, ஒரு கையால் வாங்கி வீசலின் - (வீமன்) ஒருகையால் எடுத்து எறிதலால், பொரு பணைமண் உற புதைய வீழ்ந்தன - போர்செய்யுங்கருவியான தந்தம் பூமியிலே நன்றாகப் புதையும்படி (கவிழ்ந்து கீழ்) விழுந்த அவ்யானைகள்,-விரி திரை நெடு கடல்(பொங்கி மேலெழுந்து) ஆகாயத்தை மறைத்தகாலத்தில், இரு நிலம் இடந்திடும் -பெரிய பூமியைக் (கோட்டாற்) குத்தியெடுத்த, ஏனம் - (திருமாலின் திருவவதாரமான)வராகமூர்த்தியை, போன்ற-(தனித்தனி) ஒத்தன; (எ-று.) வடிவுந் தொழிலும் நிறமும் பற்றிய உவமை. ஒருகாலத்திற் பூமியைப் பாயாகச்சுருட்டியெடுத்துக்கொண்டு கடலில் மூழ்கிப் போன இரணியாக்கனை, திருமால், தேவர் முனிவர் முதலியோரது வேண்டுகோளால், மகா வராகரூபமாகத் திருவவதரித்துக் கொன்று, பிரளய ஆபத்தையடைந்த பூமியைக் கோட்டாற் குத்தி யெடுத்துக் கொண்டுவந்து பழையபடி விரித்தருளின ரென்பது கதை. வீழ்ந்தன - பெயர் ; எழுவாய், இனி, வீழ்ந்தனவாகிய வரு களிறு என இயைத்தலுமாம். (93) 17. | கழலணிபொலங்கழற்காளைகைகளா லெழவெழமதகரியெடுத்துவீசலின் விழுவனவன்றிமேல்விசையிற்போவன பழையகற்சிறகுடன்பறப்பபோன்றவே. |
(இ - ள்.) கழல்-காலிலே, அணி - தரித்த, பொலம் கழல் - பொன்னாலாகிய வீரக்கழலையுடைய, காளை - சிறந்தவீரனான வீமன், கைகளால்-, மத கரி - மதயானைகளை, எடுத்து-, எழ எழ - மேலே மிகுதியாகச் செல்லும்படி, வீசலின் - எறிதலால், (அப்பொழுது), விழுவன அன்றி - (கீழே) விழுகிறயானைகள் ஒழிய, மேல் விசையின் போவன - மேலே [ஆகாயத்தில்] வேகத்தோடு செல்லும் யானைகள்,-பழைய சிறகுடன் பறப்ப கல் போன்ற - முன்னிருந்த (தமது) இறகுகளுடன் (ஆகாயத்திற்) பறப்பனவான மலைகளை யொத்தன; (எ - று.) |