பக்கம் எண் :

இரண்டாம் போர்ச்சருக்கம்75

பறப்ப - வினையாலணையும்பெயர். முன்னொருகாலத்தில் மலைகளெல்லாம்
பறவைகள்போல இறகுடையனவாயிருந்த அவற்றால் உலகமெல்லாம் பறந்து திரிந்து
பலவிடங்களின்மேலும் உட்கார்ந்து அவ்விடங்களையெல்லாம் பிராணிகளுடனே
அழித்துவர, அதனை முனிவர் முதலியோரா லறிந்த தேவேந்திரன் சினந்து சென்று
தனது வச்சிராயுதத்தால் அவற்றின் சிறகுகளை அறுத்துத் தள்ளி விட்டா னென்பது
கதை. பி - ம். பழையதம்.                                       (94)

18.புகலுறுகலிங்கர்கோன்போரில்வென்னிட
விகலுடனெடுத்தெடுத்திவனெறிந்தபோ
தகல்வெளிமுகடுறவதிர்ந்துமேலெழு
முகபடமுகில்கள்வான்முகில்கள்போன்றவே.

     (இ - ள்.) புகல் உறு - (சிறப்பித்துச்) சொல்லத்தக்க, கலிங்கர் கோன் -
கலிங்கதேசத்தார்க்கரசன், போரில் வென் இட - போரில் புறங்கொடுக்கும்படி,
இவன்-இவ்வீமன், இகலுடன் எடுத்து எடுத்து - வலிமையோடு தூக்கித்தூக்கி,
எறிந்தபோது - (மதயானைகளை ஒன்றன்மேல் ஒன்றை) வீசியபொழுது,-அகல்
வெளிமுகடு உற -  பரந்த ஆகாயவெளியிலே பொருந்த, அதிர்ந்து மேல் எழும்-
இடித்துக் கொண்டு மேற்கிளம்புகிற, முகபடம் முகில்கள் - முகபடாதத்தைக்
கொண்ட அவ் யானைகள், வான் முகில்கள்-ஆகாயத்திற் சஞ்சரிக்கிற மேகங்களை,
போன்ற-ஒத்தன; (எ - று.)

     புகல் என்னும் வினைப்பகுதியின்மேல், உறு - துணைவினை; இனி புகலுறு -
(போர்க்களத்தினுட்) புகுதலையடைந்த என்றுங் கொள்ளலாம். இவ்வுரைக்கு, புகல் -
புகு என்னும் பகுதியின் மேற் பிறந்த தொழிற் பெயர். முகபடமுகில்கள் -
அடையடுத்த உவமவாகுபெயர். வென்- முதுகு. பி-ம்: முகில்கள் வான்முகில்களை
முகப்பபோன்றவே.

19.-முன்னணி சிதையவே, கலிங்கராசன் வில்லோடு பொரவருதல்.

வென்னிடுகடகரிவீரன்வீமன்முன்
முன்னணிகலங்குறமுறிந்தவாறுகண்டு
என்னிதுவெனமொழிந்தேறுதேரொடுந்
தன்னொருசிலையொடுந்தானுந்தோன்றினான்.

     (இ - ள்) (இவ்வாறு), வீமன் முன் - வீமசேனனெதிரிலே, வெண் இடு கட
கரி- புறங்கொடுத்த மதயானைகள், முன் அணி - (தனது) முற்படையிலே, கலங்குற
முறிந்த ஆறு - கலக்கமுண்டாக அழிந்த விதத்தை, கண்டு-பார்த்து, வீரன்-வீரனான
கலிங்கராசன், என் இது என மொழிந்து - இது என்னவீரமென்று சொல்லிக்கொண்டு,
ஏறு தேரோடுஉம்-(தான்) ஏறிய தேருடனும், தன் ஒரு சிலையொடுஉம்-தனது
ஒப்பற்ற வில்லுடனும், தான்உம் தோன்றினான் - தானும் எதிர்த்து வந்தான்; (எ-று,)