என்னிதுவீரமென்று வீமனுடைய வீரத்தைக் கொண்டாடினன் கலிங்கராசனென்க, கடம் -யானைக்கன்னம்: வடசொல்: மதநீர்க்கு ஆகுபெயர். (96) 20.-கலிங்கராசன் ஏவ, பல அரசர் வீமனை வளைத்தல். களத்திடைமடிந்தனகலிங்கன்வேழமென் றுளத்தழல்கண்ணிணைசிவப்பவுந்திடத் தளத்தரணிபரெனுந்தானையானைகள் வளைத்தனமருத்தின்மாமடங்கறன்னையே. |
(இ - ள்.) 'வேழம் - (தனது) யானைகள், களத்திடை - போர்க் களத்திலே, மடிந்தன - (வீமனால்) அழிந்திட்டன,' என்று - என்ற காரணத்தால், உளத்து- மனத்தில்தோன்றிய, அழல் - கோபாக்கினியால், கண் இணை - (தனது) இரண்டுகண்களும். சிவப்பு - செந்நிறமடைய,- கலிங்கன் - கலிங்கராசன், உந்திட - தூண்டிச்செலுத்த,-(அப்பொழுது), தளம் தரணிபர் எனும் தானை யானைகள் - (அவன்) சேனையிலுள்ள அரசர்களாகிய யானைக்கூட்டங்கள், மருத்தின் மா மடங்கல்தன்னை - வாயுதேவனது பெரியசிங்கம்போன்ற புத்திரனான வீமனை, வளைத்தன - சூழ்ந்து கொண்டன; (எ - று.) அரசர்களிடத்து யானையின் தன்மையும், வீமனிடத்துச் சிங்கத்தின் தன்மையையும் ஏற்றிக் கூறியது - உருவகவணி. கலிங்கனது சேனையிலுள்ள யானைகள் அழிந்த பின்பும் அச்சேனை வீரர்களாகிய யானைகள் வீமனைச் சூழ்ந்தன வென ஒருவகைச் சாதுரியந் தோன்றக் கவி கூறினார். முன்நிற்க மாட்டாமல் எளிதில் அழிதற்கு உவமை. சீவக சிந்தாமணியில் "முழைமுகத்திடியரி வளைத்த வன்ன மள்ளரின்... மழைமுகத்த குஞ்சரம் வாரியுள் வளைத்தவே" என்றவிடத்து 'அரியை யானை வளைத்தல் - இல்பொருளுவமம்' என ஆசிரியர்நச்சினார்க்கினியர் உரைத்தவாற்றை இங்கே அறிக. தளம்-கூட்டமுமாம். யானைத்தானைகள்-யானைச்சேனைகள். மடங்கல்-உவமையாகுபெயர். (97) 21,-கலிங்கமன்னன் சேனையோடு பொருதழிய, வீடுமன் வீமன்மீது உடன்றுவருதல். கந்தடர்களிற்றுடன்கலிங்கபூபதி மைந்தருஞ்சேனையும்பொருதுமாய்ந்தபின் இந்திரனாற்சிறகிழந்தகுன்றுபோற் சிந்தைநொந்துடன்றனன்சேனைமன்னனே. |
(இ - ள்.) கந்து அடர் களிற்றுடன் - கட்டுத்தறியை முறிக்கும் இயல்புள்ள மதயானைகளோடு (வந்த), கலிங்க பூபதி - கலிங்க நாட்டரசன், மைந்தர்உம்-(தனது) மக்களோடும், சேனைஉம்- சேனைகளோடும், பொருது-(வீமனுடன்) போர்செய்து, மாய்ந்த பின் - அழிந்த பின்பு,- சேனை மன்னன் - சேனைத்தலைவனான வீடுமன், இந்திரனால் சிறகு இழந்த குன்றுபோல் சிந்தை நொந்து - தேவேந்திரனால் இறகுகளையிழந்திட்ட மலைபோல மனம் வருந்தி, உடன்றனன் - கோபித்து (வீமனை) எதிர்த்துப்போர் செய்தான்; (எ - று.) |