கடையினார், மூளவெதிர்முட்டியெதிர்சேனையு நிலத்துதிரமோது பொழுதத்துவெகுளா, வாளபிமன்வெற்றிவரிவார்சிலைகுனித்துவயவாளிக டொடுத்துவரவே. |
(இ - ள்.) வளைத்த சிலை வீடுமன் - வளைத்த வில்லையுடைய பீஷ்மன், அதிர்த்த குரல் வீமனொடு - உரத்தகுரலையுடைய வீமனுடனே, மீளஉம் உருத்து -மறுபடியும் கோபித்துவர,-இருவர்உம் - (வீடுமன் வீமன் என்னும்) இரண்டுபேரும், காளம் முகிலுக்கு நேர் முகில் மலைவது ஒக்க - கார்காலத்துக் கரிய மேகத்துக்கு எதிரில் மற்றொருமேகம் போர்செய்வதுபோல, எரி காலும் நயனம் கடையினார்- நெருப்பையுமிழுங் கடைக்கண்ணையுடையவர்களாய், மூள - கோபம்மூள, எதிர் முட்டி - எதிரில்தாக்கி, எதிர்சேனைஉம் நிலத்து உதிர - (தன்தன்) எதிர்ப்பக்கத்துள்ள சேனையும் தரையிலே பொடியாய்ச் சிந்தும்படி, மோது பொழுதத்து-தாக்கிப் போர்செய்யும் பொழுது, வாள் அபிமன் - ஆயுதப்பயிற்சியில்வல்ல அபிமந்யு, வெகுளா-கோபங்கொண்டு, வெற்றி வரி வார் சிலை குனித்து - சயத்தைத்தருகிற கட்டமைந்த நீண்ட வில்லை வளைத்து, வய வாளிகள் தொடுத்து வர-வலிய அம்புகளைப் பிரயோகித்துவர,-(எ - று.)- 'நகுவோன்ஒத்தனன்' என மேற்கவியில் முடியும். உருத்து - உருக்க. கடையினார் - குறிப்புமுற்றெச்சம். இடைவிடாது ஆயுதமழைபொழிதலின், முகில்உவமை. இவர்களை முகில் என்றதற்கேற்ப ஆர்த்தகுரலை இடிமுழக்கமாகவும், எரிகாலுதலை மின்னலொளியாகவும், கைவில்லைஇந்திரவில்லாகவுங் கருதுக. (102) 26. | வார்சிலையைவட்டவடிவாம்வகைவணக்கியெதிர்மாறு படவுற்றுவருவோ, ரோரொருவர்நெற்றிதொறுமோரொருவடிக்கணைகளூ டுருவவிட்டு நகுவோன், மேருவைவளைத்துநெடுவாசுகிபிணித்துமழைமேகநிகர் மெய்க் கணைதொடர, வாரழலின்முப்புரமுநீறெழநகைத்தவரவாபரண னொத்தனனரோ. |
(இ - ள்.) வார் சிலையை - நீண்ட வில்லை, வட்டம் வடிவு ஆம் வகை- வளைந்தவடிவமாகும்படி, வணக்கி - வளைத்து, எதிர் மாறு பட உற்று வருவோர் ஓர் ஒருவர் நெற்றிதொறும்உம்-(தனக்கு) எதிரிலே பகைமைபொருந்த நெருங்கி வருகிறவீரர் ஒவ்வொருவரது நெற்றியிலும், ஓர் ஒரு வடி கணைகள் ஊடுருவ விட்டு -ஒவ்வொரு கூரிய அம்பைத் துளைத்துச்செல்லும்படி பிரயோகித்து, நகுவோன் -(அவர்களை நோக்கி இகழ்ந்து) சிரிப்பவனான அவ்வபிமன்,-மேருவை வளைத்து -மகாமேருகிரியை (வில்லாக) வணக்கி, நெடு வாசுகி பிணித்து - நீண்ட வாசுகியென்னும் பெரும்பாம்பை (நாணியாக)க் கட்டி, மழை மேகம் நிகர் மெய் கணை தொடா - மழைபொழியுங் காளமேகத்தையொத்த திருமேனிநிறத்தையுடைய (திருமாலாகிய) அம்பைத் தொடுத்து, ஆர் அழலின் முப்புரம்உம் நீறு எழ நகைத்த -மிக்க தீயால் திரிபுரமுழுவதுஞ் சாம்பராய்ச்சிதறும்படி புன்சிரிப்புச் செய்த,அரவுஆபரணன் - சர்ப்பங்களை ஆபரணமாகவுடைய சிவபிரானை, ஒத்தனன்-போன்றனன்; (எ-று.) |