(இ - ள்.) (அப்படிப்பட்ட கடும்போரில் துரியோதனனது), துவசம் - கொடியை,பிளந்து-, தேர் ஊரும் துரகம் - இரதத்தைச் செலுத்துங் குதிரைகளை, பிளந்து-, சுடர்மணி பொன் கவசம் - விளங்குகிற இரத்தினங்களைப் பதித்ததும் பொன்னாலாகியதுமான கவசத்தை, பிளந்து -, மார்பு அகம்உம் - மார்பினிடத்தையும்,பிளந்து-, ஊடு உருவ - உள்ளே நுழைந்துசெல்லும்படி, கடோற்கசன்-, நவ சந்திரன்மா முனை வாளி - புதுமையான (பாதிச்) சந்திரன் வடிவமான பெரிய [சிறந்த]கூர்நுனியையுடைய அம்புகளை, தொடுத்தான்-; தொடுத்த நாழிகையின் -பிரயோகித்த மாத்திரத்தில், ஒருவர்க்கு அழியாதோன் - எவர்க்குந்தோலாதவனானதுரியோதனன், அவசம் பிறந்து - (தன்வசந்தப்பிப்) பரவசமாய் [மூர்ச்சித்து என்றபடி],தம்பியர் முன் - தம்பிமார்களெதிரில், விழுந்தான்-; (எ - று.) தம்பிமார் பலர் அருகிலிருந்தும் அவன் இப்படி பங்கப்படலாயிற்றென்ற இழிவுதோன்ற, 'தம்பியர்முன் விழுந்தான்' என்றார். சந்திரவாளி- அர்த்த சந்திரபாணம்;பிறைமுகவம்பு எனவும்படும். நவ - ஒன்பது, வாளி எனினும் அமையும். நாழிகையென்னுஞ் சிறப்புப்பெயர், இங்கே பொதுவாய்க் காலமாத்திரத்தை யுணர்த்திற்று.ந+வசம்=அவசம். அவசம் பிறந்து - தன்வசமில்லாமை யுண்டாய்; மெய்ம்மறந்து:வசம்-சுவாதீனம். கடோற்கசன் என்னும் வடமொழிக்கு - குடம்போலும் பெரியமயிர்முடியுடையவ னென்று காரணப்பொரு ளுரைப்பர்; கட உத்கசம் அன்எனப்பிரியும்: கடம் - குடம், உத் - அதிகம், கசம் - மயிர்முடி. (116) 8.-அப்போது அபிமன்யு துரியோதனனுடைய பாகனை மாய்த்தல். நாகந்துவசமெனவுயர்த்தோ னடுங்காமுன்னநண்ணலரை மாகந்தனிற்சென்றமர்கடந்து வருமைந்துடையோன்றிருமைந்தன் வேகம்படநின்றொருசமர வேலான்மீண்டுமவ்வேந்தன் பாகன்றனதுமருமத்திற் பாய்ந்தானவனுமாய்ந்தானே. |
(இ - ள் ) நாகம் துவசம் என உயர்த்தோன் - பாம்பைக் கொடியாக உயரத்தில் தூக்கியுள்ள துரியோதனன், நடுங்கா முன்னம் - (இவ்வாறு கடோற்கசனம்பினால்) சோர்தற்கு முன்னே, நண்ணலரை மாகந்தனில் சென்று அமர்கடந்து வரு மைந்து உடையோன் திரு மைந்தன் - (தேவர்களுக்குப்) பகைவர்களான நிவாதகவச காலகேயர்களைப் பெரிய ஆகாய மார்க்கத்திற் போய்ப்போரில்வென்றுவந்த வலிமையையுடைய அருச்சுனனது சிறந்த குமாரனான அபிமந்யு. வேகம் பட நின்று - விரைவாக (எதிரில் வந்து) நின்று, ஒரு சமரம் வேலால் - போருக்குரிய ஒரு வேலாயுதத்தால், மீண்டும்-, அ வேந்தன் பாகன் தனது மருமத்தில் பாய்ந்தான்- அத்துரியோதனராசனுடைய தேர்ப்பாகனது மார்பில் எறிந்தான்; (எறியவே), அவன்உம் மாய்ந்தான் - அந்தச்சாரதியும் இறந்தான்; (எ-று.) |