மங்கைபாகனுதவிய, வுரனுடையதண்டினாலிவ்வபிமனையுயிர்கவர்த லின்றுசாலவுறுதியே. |
(இ-ள்.) 'அரன் முடி அணிந்த தாமம் இதுஎன - சிவபிரான் திருமுடியில் தரித்த மாலை இதுவென்று, அடி கொடு கடந்து போகவெருவுவர் - (வீமனும் அபிமனும் தமது) கால்களால் (அதனைத்) தாண்டிச்செல்ல அஞ்சுவார்கள்; (அச்சமயத்தில்) பரவைநிகர் நம்பதாதி-கடல்போன்ற நமது சேனையிலுள்ள, அவனிபர் பலருடன்- அரசர்கள் அநேகருடனே, வளைந்து கோலி-இடைவிடாமற் சூழ்ந்து, அமரிடை- போரில், வரம் உற வணங்கு நாளில் மங்கைபாகன் அருள் செய்து மனம் மகிழ உதவிய உரன் உடைய தண்டினால்-வரம்பெறும்படி வணங்கியகாலத்தில் சிவபிரான் கருணைசெய்து மனம்மகிழ (உனக்கு)க்கொடுத்த வலிமையுள்ள கதாயுதத்தால், இஅபிமனை உயிர் கவர்தல்-இந்தஅபிமந்யுவைக் கொல்லுதல், இன்று சால உறுதிஏ-இப்பொழுது மிகநன்மைதரும் உபாயமாம்;' (எ -று.) மங்கைபாகன் - உமாதேவியை (இட)ப்பக்கத்தி லுடையவன், எப்பொழுதும் மங்கைப்பருவத்தையே உடைமையால், உமாதேவி 'மங்கை' எனப்பட்டாள். உறுதி- காரியவாகுபெயர். ஏ தேற்றம். 49.-சயத்திரதனும் துரியோதனன் கூறிய உபாயத்தைச்செய்ய உடன் பட்டு, சிவபெருமானருளிய கொன்றைமாலையை யெறிதல். எனவிவன்மொழிந்தபோ திலவனிவனிணையடி வணங்கியாது நினைவினி, யுனதுநினைவெஞ்சிடாம லபிமனையுயிர்கவர்வ னென்று தேறவுரைசெய்து, கனகதருமன்றன் மாலையெனவொளிர்கடியிதழி யந்தண்மாலை பரமனை, மனனுறவுணர்ந்து, நாவினிகழ்தரு மறையொடுவளைந்து விழவெறியவே. |
(இ-ள்.) என -என்று, இவன் -துரியோதனன்-மொழிந்த போதில்- சொன்னபொழுதிலே,-அவன்-சயத்திரதன், இவன் இணை அடி வணங்கி- துரியோதனனது, உபயபாதத்தை நமஸ்கரித்து, 'யாது நினைவு-(வேறு)என்ன எண்ணம்உள்ளது? (ஒருசிந்தையும் பட வேண்டுவதில்லை); இனி-இப்பொழுதே, உனதுநினைவு எஞ்சிடாமல்-உன்கருத்துக்குக் குறையுண்டாகாதபடி, அபிமனை உயிர்கவர்வன்-அபிமந்யுவைக் கொல்வேன்,' என்று-, தேற -(துரியோதனன்) மனந்தெளியும்படி, உரைசெய்து-சொல்லி,-(சயத்திரதன்),-பரமனை - (எல்லாரினுஞ்) சிறந்த சிவபிரானை, மனன் உற உணர்ந்து - மனத்திலே பொருந்தத் தியானித்து, கனக தரு-பொன் மயமான கற்பகவிருட்சத்து மலர்களினாலாகிய, மன்றல் - பரிமளமுள்ள, மாலைஎன - மாலைபோல, ஒளிர் - விளங்குகிற, கடி - வாசனையையுடைய, அம் - அழகிய, தண் - (தேனினாற்) குளிர்ந்த, இதழி மாலை - கொன்றைப்பூமாலையை, நாவில் நிகழ்தரு மறையொடு - நாக்கில் உச்சரிக்கப்படுகிற மந்திரத்துடனே, வளைந்து விழ எறிய- (அபிமன்தேரைச்) சூழ்ந்துவிழும்படிவிசிப் போகட,-(எ-று.)- "எறிதொடையல்வளைந்து சூழவருதலும்" என அடுத்தகவியோடு தொடரும். |