பாகனை - சாரதியையும், சிலையை- வில்லையும், பொன் தேர் பதாகையை - அழகிய தேரின் கொடியையும், பரியை - (நான்கு) குதிரைகளையும், வீழ்த்தி - அழித்துத்தள்ளி, ஆகம் உற்று உருவ - (அச்சல்லியன்) மார்பில் பொருந்தி ஊடுருவிச்செல்லும்படி, எய்தான் - பிரயோகித்தான்; (அதனால்), மாறா போகம் மத்திரத்தார் கோஉம்- நீங்காத செல்வ அனுபவத்தையுடைய மத்திரதேசத்தார்க்கு அரசனான சல்லியனும், புறம்தந்து போகல் உற்றான்- முதுகுகொடுத்துச் செல்லத்தொடங்கினான்; ( எ -று.) ஒரம்புஏவிப் பாகனையும், இரண்டு அம்புஏவிச் சிலையையும், மூன்று அம்புஏவித் தேர்ப்பதாகையையும், நாலம்புஏவித் தேர்ப்பரியையும் வீழ்த்தி, ஐந்து அம்பு ஆகம்உற்று உருவுமாறு எய்தானென முறைநிரனிறைப்பொருள் கோளாக உரைத்தார். மோகரித்து- கோபத்தோடு ஆரவாரித்து என்றுமாம். ஆகம் முற்று உருவ எனப்பிரிந்து - உடம்புமுழுவதுந் துளைக்க எனினுமாம் வில் வித்தையிலும் பராக்கிரமத்திலும் நகுலனுக்கு உள்ள சிறப்பு விளங்க, 'அருச்சுனனிளவல்' என்றார். போகம் - மத்திரத்தார்க்காவது கோவுக்காவது அடைமொழியாக்கொள்ளின் இன்பமனுபவித்தலும், மத்திரத்துக்கு அடைமொழியாக்கொள்ளின் பயிர்விளைவுமாம். போகம், மத்ரம் - வடசொற்கள். (15) 16.- கர்ணனும் விராடனும் பொருதல். சையமோரிரண்டுதம்மிற்பொருதெனத்தடந்தேருந்தி வெய்யவன்மகனும்வீரவிராடனுமெதிர்ந்தவேலை வையகங்கம்பமுற்றுமாசுணநடுங்கமேன்மே லெய்யும்வெங்கணையால்வானத்தெல்லையுமறைந்ததன்றே. |
(இ-ள்.) ஓர் இரண்டு சையம் - ஒப்பற்ற இரண்டுமலைகள், தம்மில் பொருது என -தமக்குள் எதிர்த்துப் போர்செய்தாற்போல, தட தேர் உந்தி - பெரிய (தம்தம்)தேரைச் செலுத்தி, வெய்யவன் மகன்உம்- சூரியபுத்திரனான கர்ணனும், வீர வீராடன்உம் - வீரத் தன்மையுடைய விராடராசனும், எதிர்ந்த வேலை- (தம்மில்) எதிரிட்ட பொழுதில்,- வையகம் கம்பம் உற்று - (அவ்வதிர்ச்சியால்) பூமி நடுக்கமடைந்து, மாசுணம் நடுங்க - (அப்பூமியைத் தாங்கும் ஆதிசேஷனாகிய) பெரும்பாம்பும் அசைய, மேல் மேல் எய்யும் வெம் கணையால் - மேன்மேல் இடைவிடாது தொடுக்கிற கொடிய அம்புகளால், வானத்து எல்லைஉம் மறைந்தது - ஆகாயத்தினிடமும் மறைபட்டது; (எ-று.) - அன்றே - ஈற்றசை; தேற்றமுமாம்: அப்பொழுதே என்றுமாம். சையம்- ஸஹ்யமென்பதன்விகாரம் : குடகுமலைக்குப் பேராகிய ஸஹ்யமென்ற சிறப்புப்பெயர் மலையென்ற பொதுப்பொருளைத் தந்ததென்க; இனி, சைல மென்னும் வடசொல்லின் விகாரமென்றலும் ஒன்று. மலைகள் - தேருக்காயினும், வீரர்க்காயினும் உவமம். பொருதென- பொருதாலென என எச்சத்திரிபாகவாவது, பொருததென எனத் தொழிற்பெயர் விகாரமாகவாவது கொள்ளத்தக்கது. மேல்மேல் - அடுக்கு, இடைவிடாமை பற்றியது. (16) |