பக்கம் எண் :

132பாரதம்துரோண பருவம்

     (இ-ள்.) (இவ்வாறு), அபிமன்-, வாள் அமரில்-ஆயுதங்களைக் கொண்டு
செய்யும்போரில். வென்று-(அவர்களைச்) சயித்து, நின்ற-, நிலை-உறுதிநிலையை,
கண்டுஏ- பார்த்தமாத்திரத்தாலே, மர இரதர்-மகாரதவீரர் (பலர்), ஒன்றுபட-
ஒருசேர,உடைந்து சென்றனர்-அழிந்துபோயினர்; (எ - று.)

     வாளமர் கொடியபோர் எனவுமாம். மோனைக்கும் இடத்திற்கும் ஏற்ப,
'வில்லமரில்'எனப் பாடங்கொள்ளுதல், சிறக்கும்.                   (215)

78. கவிக்கூற்று: அபிமனாலடிபட்டவர் மிகப்பலரெனல்.

கெட்டவர்க ளின்னரென, முட்டவுரைக் கொண்ணா
பட்டவரநேகரிவன், விட்டகணையாலே.

     (இ-ள்.) இவன் விட்ட கணையால்ஏ - அபிமன் எய்த அம்புகளாலே, பட்டவர்-
இறந்தவர், அநேகர்-பலர்; கெட்டவர்கள்- தோற்று ஒழிந்தவர்கள், இன்னர் என -
இவ்வளவின ரென்று முட்ட உரைக்க ஒண்ணா-முழுவதும் சொல்லமுடியாது; (எ-று.)

     உரைக்க என்னும் வினையெச்சமே தொழிற்பெயர்ப்பொருளதாய், ஒண்ணா(து)
என்னும் ஒருமைமுற்றுக்கு எழுவாயாம்: இனி, 'உரைக்கொண்ணார்'
எனப்பாடமிருப்பின்நலம். கெட்டார்-காணாது போனவரொனினுமாம்.        (216)

வேறு.

79. - இரண்டுகவிகள் - சக்கரவியூகத்தைப்பிளந்துநடுநிற்கும்
அபிமனைக் குறித்த வருணனை.

முற்சக்ரயூகம் பிளப்புண்டபின் முன்பி னோடும்
பொற்சக்ரமென்ன வெறித்தாமம்பொலிந்து சூழ
விற்சக் ரமாக மணித்தேரினின் மீது நிற்பான்
கற்சக் ரமாக நடுவூர்செங் கதிரொ டொத்தான்.

     (இ-ள்.) சக்ரயூகம் - (துரியோதனனது) சக்ரவியூகம். முன் பிளப்புண்டபின்-(தன்
அம்புகளால்) முன்னிடம் பிளக்கப்பட்ட பின்பு, முன்பினோடுஉம்- வலிமையுடனே,
வெறி தாமம்-வாசனையையுடைய வெற்றிமாலை, பொன் சக்கரம் என்ன-
பொன்வட்டம் போல, பொலிந்து சூழ-(தன்கழுத்தைச்) சுற்றிலும் விளங்க, வில்சக்ரம்
ஆக-(கையிற்பிடித்த) வில் வட்டமாக வளைந்திருக்க, மணி தேரின்மீது-
மணிகள்கட்டிய தேரின்மேல், நிற்பான்-(சக்கரவியூகத்தின் மத்தியில் தனியே)
நின்றுவிளங்குபவனான அபிமன், கல் சக்ரம் ஆக சக்கரவாளமலை சூழ்ந்துநிற்க,
நடுஊர்- (அதன்) நடுவிடத்தில் [ஆகாயத்திற்] செல்லுகிற, செம் கதிரொடு -
சிவந்தகிரணங்களையுடைய சூரியனை, ஒத்தான்- எ - று.)

     பொற்சக்ரம் - வட்டமாகிய பொன்னாரம். 'வெறித்தாமம் பொலிந்து சூழ'
என்பதற்கு- பரிமளமுடைய (சிவனது) கொன்றைப்பூமாலை (தன்னைச்) சுற்றிலும்
விளங்கஎன்றும் உரைக்கலாம். கதிரொடுஒத்தான்-மூன்றாமுருபு
இரண்டாம்வேற்றுமைக்குஉரிய ஒப்புப்பொருளில் வந்தது; உருபுமயக்கம். பி-ம்:
மொய்ம்பினோடும். எறிதாமம்.கற்சக்ரநாகம்.