என்று-என்று (பலவாறு) எண்ணி, ஈர் இரண்டு பெயர் ஒழிய மற்று உள்ளார்- நாலுபேர்தவிர மற்றுள்ளவர் எல்லோரும், அழுது இரங்கி-புலம்பிச் சோகித்து, என் பட்டார் - என்னபாடு பட்டார்கள்? [மிகத் துன்பமுற்றார்கள் என்றபடி] எ - று.)- ஏ-இரக்கம். ஈரிரண்டுபேர் - துரியோதனன், சயத்திரதன், சகுனி, கர்ணன் என இவர்; கர்ணனைநீக்கித் துச்சாதனனைச் சேர்த்தலும் ஒன்று. தனதுதேர் கர்ணனம்பால் அழிந்தகாலத்தில் மறுபடி ஏறிக்கொள்ளுதற்கு உதவியாக மற்றொருதேர் கிடைத்திருந்தால் அபிமனைக் கொல்ல எவராலும் ஆகாதென்பது, மூன்றாம் அடியால் விளங்கும். 137.- அபிமனிறந்தமையைத் தருமன் கேட்டல். தாள் விசயம்பெறமுனைந்துசக்கரயூகம்பிளந்துதானேநின்று, வாள்விசயன்றிருமதலைவானோரும்வியந்துரைக்கமாய்ந் தானென்று, வேள்வியினா லுண்மையினாற் றிண்மையினாற் றண்ணளியால் விறலாற்பன்னூற், கேள்வியினான்மிகுந்தெவர்க்குங்கேளானவுதிட்டிரனுங் கேட்டானன்றே. |
(இ-ள்.) வேள்வியினால்-யாகங்களினாலும், உண்மையினால்- சத்தியத்தினாலும், திண்மையினால் -வலிமையினாலும், தண் அளியால் - குளிர்ந்த கருணையினாலும், விறலால் - வெற்றியினாலும், பல்நூல் கேள்வியினால் - பல சாஸ்திரார்த்தங்களைக் கேட்டலாலும், மிகுந்து-, எவர்க்குஉம் கேள் ஆன - எல்லோர்க்கும் சினேகிதனான, உதிட்டிரன்உம் - தருமபுத்திரனும்,-'வாள் விசயன் திருமதலை-ஆயுதம்வல்ல அருச்சுனனுக்குச் சிறந்த குமாரனான அபிமன், தாள்-(தனது) முயற்சியால், விசயம் பெற - வெற்றியை யடையும்படி, முனைந்து - போர்செய்து, சக்கரயூகம் பிளந்து - சக்கரவியூகத்தைப் பேதித்து, தான் ஏ நின்று-தான்மாத்திரமே தனியாகநின்று, வானோர்உம் வியந்து உரைக்க - தேவர்களும் அதிசயித்துப் புகழ, மாய்ந்தான்- இறந்தான்,' என்று கேட்டான் - என்று கேள்விப்பட்டான்; (எ - று.)-அன்றே- ஈற்றசை. தருமன் சக்கரவியூகத்துக்கு வெளியேநின்றவனாதலால், 'கேட்டான்' என்றார். எவர்க்குங் கேளான உதிட்டிரன் - அஜாதசத்ருவென்று தருமனுக்கு ஒருபெயர்; அதற்குப் பகையில்லாதவனென்று பொருள் (275) 138.- நான்குகவிகள் - அபிமனிறந்ததற்குத் தருமன் புலம்பலைக் கூறும். பிறந்ததினமுதலாகப்பெற்றெடுத்தவிடலையினும்பீடுந்தேசுஞ், சிறந்தனையென்றுனைக்கொண் டேதெவ்வரை வென்றுல காளச்சிந்தித்தேனே, மறந்தனையோவெங்களையு மாலையினால்வளைப்புண்டு மருவார்போரி, லிறந்தனையோவென்கண்ணேயென்றுயிரேயபிமா வின்றென்செய்தாயே. |
(இ-ள்.) என் கண்ணே - எனது கண்போன்றவனே! என் உயிரே-எனது உயிர்போன்றவனே! அபிமா-அபிமந்யுவே! பிறந்த தினம் முதல் ஆக-(நீ) பிறந்தநாள்முதற்கொண்டு, பெற்று எடுத்த விடலையின்உம்-(உன்னைப்) பெற்றெடுத்த வீரனானஅருச்சுனனைக் |