பக்கம் எண் :

பதின்மூன்றாம் போர்ச்சருக்கம்175

150.என்றலும்விசயனெய்தியெந்தைநீயெரியில்வாளா
பொன்றலுய்ந்திருந்தாலின்னம்புதல்வரைப்பெறலுமாகு
நன்றலதவத்தின்மிக்கோய்நல்லுயிர்செகுத்தலென்னாக்
குன்றினும்வலியதோளான்முனிவனைத்தழுவிக்கொண்டான்.

     (இ-ள்.) என்றலும்-என்று(கண்ணன்) கூறியவளவிலே, விசயன்-அருச்சுனன்,
எய்தி-(அம்முனிவனருகிற்)சென்று, 'எந்தை-சுவாமி! நீ-,வாளா - வீணாய் எரியில்
பொன்றல்-நெருப்பில் (வீழ்ந்து) இறக்காதே: உய்ந்திருந்தால்-பிழைத்திருந்தால்,
இன்னம் புதல்வரை பெறல்உம் ஆகும்- இன்னமும் புத்திரைப் பெறுதலும் கூடும்;
தவத்தில் மிக்கோய் - தவத்திற் சிறந்தவனே! நல் உயிர் செகுத்தல் - சிறந்த
(உன்)உயிரை (நீயே) போக்கிக்கொள்ளுதல், நன்று அல-நல்லதன்று' என்னா-
என்று (உபசாரமொழி) கூறி, குன்றின்உம் வலிய தோளால்-மலையிலும்
வலிமையையுடைய (தன்) கைகளால், முனிவனை தழுவிக்கொண்டான்-
அம்மமுனிவனை அணைத்துக்கொண்டான்: (எ - று.)

     உயிரைவைத்துக்கொண்டிருந்தால் பலபுத்திரரை இன்னும் பெறுதலாகும்:
மறுமையில் மோட்சமடைவதற்கும் உபாயஞ்செய்யலாகுமென்று தடுத்தனனென்க.
அயலானை 'எந்தை' என்றது, உயர்வுபற்றிவந்த மரபுவழுவமைதி, அதிக சமாதான
முண்டாதற்கு, 'புதல்வர்' எனப் பன்மையாற் கூறினான். வீடுபெறுமுயிரென்பான்,
'நல்லுயிர்' என்றான்.

151.வீதலும்பிழைத்தறானும்விதிவழியன்றிநம்மா
லாதலுமழிவுமுண்டோநின்னில்வேறறிஞருண்டோ
பூதலந்தன்னில்யாவர்புதல்வரோடிறந்தாரையா
சாதலிங்கியற்கையன்றென்றருளுடன்றடுத்தகாலை.

இதுவும், மேற்கவியும் - குளகம்.

     (இ-ள்.) 'வீதம்உம்-(ஒருபிராணி) இறந்தாலும், பிழைத்தல்தான்உம்-
பிழைத்திருத்தலும், வீதி வழி அன்றி-ஊழ்வினையின்படி நடப்பனவே யல்லாமல்,
நம்மால்-,ஆதல்உம் அழிவுஉம் உண்டுஓ-உண்டாதலும் அழிதலும் உண்டோ?
நின்னில் அறிஞர் வேறு உண்டுஓ-உன்னினும் அறிவுடையோர் வேறு உளரோ?
பூதலந்தன்னில்-உலகத்தில், யாவர் புதல்வரோடு இறந்தார்-எவர்தாம் புத்திரரோடு
இறந்தவர்? ஐயா-! இங்கு-இப்பொழுது, சாதல்-(நீ)  இறந்தல், இயற்கை அன்று-
உலகவியல்புக்கு ஒத்ததன்று,' என்று-என்றுஞ்சொல்லி, அருளுடன் -
கருணையுடனே, தடுத்த காலை - (அம்முனிவனைத்)தடுத்தபொழுது,-(எ-று.)-
"நின்மகனிறந்தாலென்சொன் மறாதொழி நீயுமென்றான்" என அடுத்த கவியோடு
முடியும்.

152. - அந்தமுனிவன் வெகுண்டு 'உன்மகனிறந்தால் நீ என்சொல்லை
மறாதொழி' என்று அருச்சுனனிடம் கூறுதல்.

தன்மகனுடன்றீமூழ்கத்தவிர்ந்தநற்றவனுமீள
வின்மகனாகிநின்றவிசயனைவெகுண்டுநோக்கி
யென்மகனிறக்கவென்னையிருத்தினையாயினம்ம
நின்மகனிறந்தாலென்சொன்மறாதொழிநீயுமென்றான்.