(இ-ள்.) தன் மகனுடன் -(இறந்த) தன்புத்திரனுடனே, தீ மூழ்க - நெருப்பில் பாய்தலை, தவிர்ந்த - ஒழிந்த, நல் தவன்உம்- சிறந்தவத்தையுடைய அம்முனிவனும், மீன - பின்பு, வில் மகன் ஆகி நின்ற விசயனை வெகுண்டு நோக்கி - வில்வீரனாய்நின்ற அருச்சுனனைக் கோபித்துப்பார்த்து, 'அம்ம-(யான்சொல்வதைக்) கேட்பாயாக; என் மகன் இறந்த என்னை இருத்தினை ஆயின் - எனக்குப் புத்திரன் மரிக்க என்னை (அவனுடன் இறவாதபடி) இருக்கச் செய்தாயாயின், நின் மகன் இறந்தால் நீஉம் என் சொல் மறாது ஒழி- உனக்குப்புத்திரன் இறந்தால் (அப்பொழுது)நீயும் எனது வார்த்தையை மறுக்காமலிருப்பாய்', என்றான்-என்று கூறினான்; (எ -று.) பி-ம்: தன்மகவுடன். தனது கருத்தை நிறைவேறவொட்டாதபடி தடுத்ததனால், வெகுளி கொண்டான். ஆயின் - ஆதலாலென்க. 'அம்ம'-முன்னிலையிடைச்சொல். (290) 153.- அருச்சுனன்உடன்பட்டு முனிவனைமீட்டுத்தேரேறிச்செல்லுகையில் பேரோசை செவிப்படல். ஐயெனத்தொழுதுவீரனந்தணனுயிரைமீட்டு மையெனக்கரியமேனிவலவனுந்தானுந்திண்டே ரொய்யெனச்செலுத்துகாலைவேலையினோதைதானும் பொய்யெனப்பரந்தோரோதைசெவிகளைப்புதைத்தன்றே. |
(இ-ள்.) வீரன் - அருச்சுனன், ஐஎன - (அதற்கு) இசைந்து, தொழுது - வணங்கி, அந்தணன் உயிரை மீட்டு- அம்முனிவனது உயிரை இறவாதுகாத்து, மை என கரிய மேனி வலவன்உம் தான் உம்-மேகம்போலக் கறுத்த திருமேனியையுடைய சாரதியான கண்ணனும் தானுமாக, திண் தேர்-வலிய தேரை, ஒய்யென செலுத்து காலை-விரைவாகச் செலுத்திவருகிற பொழுதில்,- வேலையின் ஓதை தான்உம் பொய் என-கடலோசையும் (தனக்குமுன்) இல்லையென்னும்படி, ஓர்ஒதை-ஒருபேரொலி, பரந்து-பரவி, செவிகளை புதைத்தது-(அவர்கள்) காதுகளை நிறைத்தது; (எ - று.)- கேட்கப்பட்டது என்பதாம். அன்றே - ஈற்றசை. ஐயென-உடன்பாட்டுக் குறிப்பு. ஒய்யென-விரைவுக்குறிப்பு. ஓர் ஓதை- அபிமனதுமரணத்துக்குத் தருமன்முதலியோர் புலம்பும் ஆரவாரம். (291) 154. - பாசறை சேருமுன் ஸ்ரீக்ருஷ்ணன் அருச்சுனனைக் கையில்ஆயுதமொன்றும் இல்லாதபடி செய்தல். பாசறையணுகுமுன்னம்பாசடைப்பதுமம்போல மாசறவிளங்குமேனிவண்டுழாயலங்கன்மூர்த்தி யாசறுவரிவிற்காளையங்கையுமருகுநீங்காத் தேசுறுபடைகள்யாவுமொழித்தனன்றீமைதீர்ப்பான். |
(இ-ள்.) பாசு அடை பதுமம் போல - பசிய இலைகளையுடைய செந்தாமரை போல, மாக அற விளங்கும்- குற்றமில்லாமல் |