பக்கம் எண் :

பதின்மூன்றாம் போர்ச்சருக்கம்177

விளங்குகிற, மேனி - திருமேனியையும், வண் துழாய் அலங்கல்- அழகிய
திருத்துழாய் மாலையையு முடைய, மூர்த்தி - கடவுளாகிய  கண்ணன்,-பாசறை
அணுகும் முன்னம்-படைவீட்டைச் சமீபித்தற்கு முன்னமே, ஆசு அறு வரி வில்
காளை - குற்றமில்லாத கட்டமைந்த வில்லையுடைய வீரனான அருச்சுனனது, அம்
கைஉம்- அழகிய கைகளையும், அருகு நீங்கா-சமீபத்தை விட்டுநீங்காத, தேசு உறு
படைகள் யாஉம் - ஒளி மிக்க ஆயுதங்களெல்லாவற்றையும், தீமை தீர்ப்பான்-
(அவற்றாலாகுந்) தீமையை ஒழிக்கும்பொருட்டு, ஒழித்தனன் - தனியே
பிரித்துவிட்டான்: (எ - று.)

     அருச்சுனன் பாசறையையணுகி அங்கு அபிமன்மரணத்தை அறியும் பொழுது
கையில் ஏதேனும் ஆயுதமுடையனாயிருந்தால், புத்திரசோகத்தைப்
பொறுக்கமாட்டாமல் அவ்வாயுதத்தைக் கொண்டு தன்னைக் கொலைசெய்து
கொள்ளக் கூடுமென்று மூன் சாக்கிரதையாகக் கண்ணன் அவன் கைகளில் எந்த-
ஆயுதமுமில்லாதபடி ஒழித்தருளினனென்பதாம். எம்பெருமானது கரிய திருமேனி
பசியதாமரையிலைகள் போலவும், அத்திருமேனியிலுள்ள கண் கை கால் வாய்
உந்திஎன்னும் அவயவங்கள் இடையிடையிற்பூத்த செந்தாமரை மலர்கள்போலவும்
இருத்தலால், 'பாசடைப்பதுமம்போல மாசற விளங்குமேனி' என்றார்.
பசுமை+அடை=பாசடை; பண்புப்பெயர் ஈறு போய் ஆதிநீண்டது. தீமைதீர்ப்பான்-
தன்னைச் சரணமடைந்தவர்களது துன்பங்களையெல்லாம் தானே
வலியத்தீர்த்தருளுபவனெனக் கண்ணனுக்கு அடைமொழியாகவுமாம்.       (292)

155.-'இந்தப்பேரொலி என்?' என்று அருச்சுனன் வினவ,
ஸ்ரீக்ருஷ்ணன் கண்ணீர்வடித்தல்.

அங்கையார்த்தனைத்துளோருமரற்றுபேரரவங்கேட்டுக்
கங்கையம்பழனநாடன்கண்ணனைவணங்கிநோக்கி
யிங்கயலெழுந்தகோடம்யாதெனயாதுஞ்சொல்லான்
பங்கயநெடுங்கண்சேப்பநித்திலம்பரப்பினானே.

     (இ-ள்.) அனைத்து உளோர்உம்-(பாசறையிலுள்ளவர்) எல்லோரும், அம் கை
ஆர்த்து - அழகிய கைகளால் அடித்துக் கொண்டு, அரற்று-கதறுகிற, பேர் அரவம்-
பெரிய ஆரவாரத்தை, கேட்டு-, கங்கை அம் பழனம் நாடன் - கங்காநதிபாய்கிற
அழகிய கழனிகளைக்கொண்ட குருநாட்டையுடைய அருச்சுனன், கண்ணனை
வணங்கி நோக்கி-, இங்கு அயல் எழுந்த கோடம் யாது என- 'இப்பொழுது
சமீபத்திலுண்டான ஆரவாரம் என்ன? என்று கேட்க, (அதற்குக் கண்ணன்),
யாதுஉம் சொல்லான்-யாதொருமறு மொழியுங் கூறாமல், பங்கயம் நெடு கண்
சேப்ப- தாமரைமலர்  போன்ற நீண்ட (தன்) கண்கள் செந்நிறமடைய, நித்திலம்
பரப்பினான் - முத்துப்போன்ற கண்ணீர்த்துளிகளை மிகுதியாகச் சொரிந்தான்;
(எ -று.)

     சேப்ப - செயவெனெச்சம்: செம்மையென்பதன் விகாரமாகிய 'சே'
என்பதனடியாப்பிறந்தது. நித்திலம் - உவமவாகு பெயர்; வடிவுவமை.
கோடம்=கோஷம்; வடமொழி.                                     (293)