பக்கம் எண் :

190பாரதம்துரோண பருவம்

விழிப்புனலின்மூழ்கிமனம்வெந்துதளர்வுறுவோன்
பழிப்படுசுரத்தின்முளிபாதவமதானான்.

     (இ-ள்.) வழி பட ஒழுங்காக, வழக்கின் வழி-நீதிவழியிலே, வருக-(நீ)
பொருந்துவாயாக, என - என்று (அருச்சுனனைநோக்கி முனிவனாகி வந்த இந்திரன்)
சொல்ல, முனிவன் மொழி படி-(அந்த) இருடியின் வார்த்தையின்படி, பொறுத்து-
(துயரத்தைப்) பொறுத்துக்கொண்டு, அழலில் மூழ்கு தொழில் மாறி -அக்கினியிலே
பிரவேசிக்குந் தொழி லொழிந்து, விழி புனலில் மூழ்கி-கண்ணரில் முழுகி, மனம்
வெந்து-மனந்தவித்து, தளர்வு உறுவோன்-தளர்ச்சி மிகுபவனான அருச்சுனன்,-பழி
படு-(யாவராலும்) இகழப்படுகிற, சுரத்தில்-பாலைவனத்திலே, முளி-உலர்ந்துகிடக்கிற,
பாதவம்அது ஆனான்-மரத்தின்தன்மையுடையவனானான்;(எ- று.)

     பட்டுப்போன மரம்போல நிலைகெட்டுநின்றனன் அருச்சுனனென்பதாம்.
'வழிப்பட வழக்கின்வழி வருக' என்றது, கீழ் "என்மகனிறக்க வென்னை
யிருத்தினையாயினம்ம, நின்மக னிறந்தாலென்சொல் மறாதொழி நீயும்" என்று யான்
கேட்ட வரத்துக்கு நீ உடன்பட்டபடிஉறுதியாய் நிற்கவேண்டு மென்றபடி, 'அழலின்
மூழ்குதொழில்மாறிப் புனலில் மூழ்கி' எனச் சமத்காரந்தோன்றக் கூறினார்,
'விழிப்புனலின் மூழ்கி' -கண்ணீர் வெள்ளத்தை மிகச் சொரிந்து என்றபடி. 'அழலின்
மூழ்கு தொழில் மாறிப் புனலின் மூழ்கி மனம்வெந்து' என்றதனால், நீருட்குளிப்பினும்
மனவெப்பம் தணியா தென்பதும், தீயிற்குளித்து இறந்தாலே மனவெப்பம் தணிந்திடு
மென்பதும் விளக்கப்பட்டன. புனன் மூழ்கி.....வெந்து என்றதில் மாறுபட்டதொழில்
தோன்றியதாகக் கூறியது-விஷமாலங்காரமாகும். பி-ம்;பொறித்தழலின்       (315)

178.- அபிமனைப் போரிற்செல்லவினதன்பொருட்டுத்
தருமன்முதலியோரை அருச்சுனன் வெகுளல்.

காமர்பிறையன்னசிறுகாளைதனைவாளா
வேமமுறுவெஞ்சமரிலேவினர்களென்னா
மாமுரசணிந்தகொடிமன்னனையும்வண்டார்
வீமனையுநின்றவிளையோரையும் வெகுண்டான்.

     (இ-ள்.) 'காமர்-அழகிய, பிறை-இளஞ்சந்திரனை, அன்ன- ஓத்த, சிறு
காளைதனை-இளங்குமரனான அபிமனை, வாளா-வீணாய், ஏமம் உறுவெம் சமரில் -
உற்சாக மிக்க கொடிய போரில், ஏவினர்கள்-செலுத்தினார்கள்,' என்னா-என்று, மா
முரசு அணிந்த கொடி மன்னனைஉம்-சிறந்தபேரிகைவடிவத்தைத் தரித்த
துவசத்தையுடைய தருமராசனையும், வண்தார் வீமனைஉம்-அழகியமாலையையுடைய
வீமசேனனையும், நின்ற இளையோரைஉம்-(மற்றும்) நின்ற தம்பிமாரான
நகுலசகதேவரையுங்குறித்து, வெகுண்டான்-(அருச்சுனன்) கோபித்தான்: (எ - று.)

     காமமருவு என்பது, காமர்என மரூஉவாயிற்று. வாளா-துணையின்றித் தனியே
என்றுமாம்.                                                   (316)