பக்கம் எண் :

194பாரதம்துரோண பருவம்

185. - அருச்சுனன் வஞ்சினமுரைத்ததுகேட்ட தருமன் கிருஷ்ணனோடு
பேசலுறுதல்.

இன்னணமி ருந்தவர்கள் யாவருந டுங்க
மன்னவையி லன்றுபல வஞ்சினமு ரைக்கச்
சொன்னவுரை யானகனல் சுட்டசெவி யோடும்
பின்னையறன் மைந்தனெடு மாலினொடு பேசும்.

     (இ-ள்.) இன்னணம் - இவ்வாறு, மன் அவையில்-இராசசபையிலே,
இருந்தவர்கள் யாவர்உம் நடுங்க - (அங்கு) உள்ளவர்கள் எல்லோரும் (கேட்டு)
மிகஅஞ்சும்படி-(அருச்சுனன்), அன்று - அப்பொழுது, பல வஞ்சினம் உரைக்க -
அநேக சபதங்களைக்கூற,-சொன்ன-(அவ்வருச்சுனன்) கூறின, உரை ஆன-
சபதவார்த்தைகளாகிய, கனல்-அக்கனி, சுட்ட-(சென்று) வருத்தின, செவியோடு உம்-
காதுகளுடனே (அச்சபதங்களைக் கேட்டமாத்திரத்தில் மிக வருத்தியவனாய்)
பின்னை - பின்பு, அறன் மைந்தன்- தருமபுத்திரன், நெடு மாலினொடு -
பெருமைக்குணமுள்ள கண்ணனுடனே, பேசும் - (சிலவார்த்தை) கூறுவான். (எ -
று.)-அவற்றை மேல் காண்க. நெடுமால் - முன்பு திரிவிக்கிரமனாய் நீண்ட
மூர்த்தியுமாம்; விசுவரூபமெடுத்தருளியவனுமாம்.                         (323)

வேறு.

186.- இதுவும், அடுத்த - கவியும் தருமன் கண்ணனை நோக்கிக்
கூறுவன.

வடிசுடர் வாளியான் மொழிந்த வஞ்சினப்
படிசயத் திரதனைப் படுத்தல் கூடுமோ
பொடியன லிவன்புகிற் புகுந்து நால்வரு
மிடிபொரு மரவென விறத்த றிண்ணமே.

மூன்றுகவிகள் - ஒருதொடர்.

     (இ - ள்.) வடி சுடர் வாளியான்-கூரிய ஒளியையுடைய அம்புகளையுடைய
அருச்சுனன், மொழிந்த வஞ்சினம் படி-சொன்ன சபதவார்த்தையின்படி,
சயத்திரதனை படுத்தல் கூடும்ஓ - சயத்திரதனைக் கொல்லுதல் முடியுமோ?
(ஒருகால்அங்ஙனம் முடியாமல்), இவன் - இவ்வருச்சுனன், பொடி அனல் புகின் -
சாம்பல்செய்யும்படியான அக்கினியிற் பிரவேசித்தால், நால்வர்உம் -
(மற்றைநாங்கள்)நாலுபேரும், புகுந்து - (அவனுடனே தீக்) குதித்து, இடிபொரும்
அரவு என இறத்தல்-இடியினால் அழியும் பாம்புபோல மரிப்பது, திண்ணம்-:ஏ -
தேற்றம். பி-ம்: சுடர்வேலினான்.

     இதனால், பாண்டவர் ஐவரும் உடல்வேறு உயிரொன்று என்னும்படி
அந்நியோந்நியமாயிருப்பவரென்பது விளங்கும். நால்வரும்-  தன்மையிற் படர்க்கை
வந்த இடவழுவமைதி; 'நால்வேமும்' என்றிருப்பின், வழாநிலையாம்.

     இதுமுதல் முப்பத்து மூன்று கவிகள்-பெரும்பாலும் மூன்றாஞ்சீரொன்று
மாச்சீரும், மற்றை மூன்றும், விளச்சீர்களுமாகிய கலிவிருத்தங்கள்.        (324)