மன்றலந்துழாய்மாயன்மேன்மன மொன்றியேசிவாகமவுரையிற்சாத்தினான் |
(இ-ள்.) என்ற -, அரி- கண்ணபிரான், இயம்பலும் - கூறிய வளவிலே,- நிகர்இல் கேள்வியான் - ஒப்பிலாத நூற்கேள்வியையுடைய அருச்சுனன்,- இரு மருங்கின்உம் நின்ற - இரண்டுபக்கங்களிலும் பொருந்தின, நல்மலர்கொடு-சிறந்த பூக்களைக் கொண்டு, மன்றல் அம் துழாய் முடி மாயன் மேல் மனம் ஒன்றிஏ - பரிமளத்தையுடைய அழகிய திருத்துழாய்மாலையைச் சூடிய திருமுடியையுடைய அக்கண்ணபிரான்மேல் (தன்) மனம் பதியவைத்துக்கொண்டு, சிவ ஆகம உரையின்- சைவாகமங்களிற் கூறப்பட்ட சொற்களின் படியே, சாத்தினான் - இட்டு அருச்சித்தான்; (எ-று.) வேதம் ஆகமம் என்ற இரண்டனுள், வேதம் பல தேவர்களுக்குப் பொதுவும் ஆகமம் சிவபிரானுக்குச் சிறப்பும் ஆதலாலும், ஆகமம் சிவபிரானால் அருளிச்செய்யப்பட்டதாகிச் சிவனைத் தியானித்தல் பூசித்தல் முதலியவற்றின் முறைமைகளை வெளியிடுவதாதலாலும், 'சிவாகமம்' எனப்பட்டது. இவ்வாகமம், இருபத்தெட்டாம். நன்மலர் - வாடாதமலர், கொன்றைமுதலிய சிவனுக்குரிய மலர். முன்னர்ப் பாசுபதம்பெறத் தவஞ்செய்யும்பொருட்டுச் செல்லுமுன் ஸ்ரீவேதவியாசரிடம் சிவபிரானுக்குரிய மந்திரத்தை அருச்சுனன் உபதேசம் பெற்றமை தோன்ற, 'நிகரில் கேள்வியான்' என்றார். மாயன்மேல் மனம்ஒன்றியே - கண்ணனைப் பரமசிவனாகப் பாவித்தே யென்றவாறு. பி - ம் : மலர்கொய்து. ஒன்றுபட்டாகமவுரையின். (334) 197-.பூசைசெய்தபின் அருச்சுனன் கனியுண்டு தேறுதல். சாத்தினன்றொழுதுபின்றலைவன்றாண்மலர்த் தீர்த்தமுங்கனிகளுந்தெவிட்டவுண்டுதன் காத்திரந்தேறினன்கருத்துந்தேறினன் பார்த்தன்முற்றவப்பயன்பலித்தவாறரோ. |
(இ-ள்.) (அருச்சுனன்) , சாத்தினன் - (கண்ணன்மேல் மலர்களை அணிந்து, தொழுது - நமஸ்கரித்து, பின் - பின்பு, தலைவன் - (எல்லாவுயிர்களுக்கும்) நாயகனான அக்கண்ணனது, தாள் மலர்- திருவடித்தாமலைமலர்களை விளக்கின, தீர்த்தம்உம் - தீர்த்தத்தையும், கனிகள்உம் - பழங்களையும் ,தெவிட்ட - அதிக திருப்தியுண்டாம்படி, உண்டு உட்கொண்டு, தன் காத்திரம் தேறினன் - தனது உடம்புதெளிந்து, கருத்துஉம் தேறினன் - மனமுந்தெளிந்தான்; பார்த்தன்- அருச்சுனனது,முன் தவம் பயன்- முன்புசெய்த தவத்தின் பலன், பலித்த ஆறு- சித்தித்த விதம்,(இதுவாம்); (எ - று.)- அரோ, ஈற்றசை ; வியப்புவிளக்கும் இடைச்சொல்லாகக்கொள்ளுதலும் பொருந்தும். அரியையேனும் அரனையேனும் ஒருகடவுளைத் தனியேபூசித்தல் உலகத்தில் உளதாயினும், இப்படிப்பட்ட அபோதமான பாவனையோடு பூசனைசெய்தல் அரிதாதலின், இதனை வியந்து கூறினார். தாள்மலர்தீர்த்தம் - ஸ்ரீபாததீர்த்தம். (335) |