கட்டளையிட்டபடியே, அவ்வுடம்பை யொழித்துத் தன்னை மகளாகப்பெறும்பொருட்டுப் பலநாளாகத்தவம்புரிந்துவருகிற மலையரசனாகிய இமவானினது எண்ணம் ஈடேறும்படி தான் ஒரு அழகிய சிறு பெண்குழந்தைவடிவமாய் அவனெதிரில் அம்மலையில் ஒரு தடாகத்தில் தாமரைமலரொன்றின்மேல் தங்கியிருக்க, அப்பர்வதராசன் அக்குழந்தையைக்கண்டு மகிழ்ந்து எடுத்துச்சென்று மனைவியாகிய மேனையினிடம் கொடுத்து வளர்த்துவர, அப்பார்வதியைப் பரமசிவன் திருமணஞ்செய்துகொண்டன னென்பது கதை. * (10) வேண்டுவதென்னெனவிண்டுதாழ்ந்தெழீஇப் பூண்டருள்கருணையம்புனிதவிங்கிவ னாண்டருள்படைகளாலவுணர்க்காய்ந்தன னீண்டுநல்குதிவிறலெய்தும் வண்ணமே. (இ - ள்.) '(நீங்கள்) விரும்புவது யாது?' என்றுவினாவ, விஷ்ணுவாகிய கண்ணன், நமஸ்கரித்து எழுந்து, ஆபரணமாகக் கொண்டருளிய திருவருளையுடைய அழகிய பரிசுத்தமூர்த்தியே! இங்குள்ள இவ்வருச்சுனன் (நீ) அப்பொழுது கொடுத்தருளிய (பாசுபதம் முதலிய) ஆயுதங்களால் (நிவாதகவசர் முதலிய) அசுரர்களை அழித்திட்டான்; இப்பொழுது, (சயத்திரதனைக் கொன்று) வெற்றியடையும்படி (இவனுக்குப் படைக்கலம்) கொடுத்தருள்வாய்; (எ-று.)- இப்பாட்டில் 'விண்டு தாழ்ந்தெழீஇ' என்றது, அடுத்தபாட்டில், 'என்று சொற்றனன்'என்பதனோடு முடியும். * (11) தானவர்ப் பொருபடை கொண்டு தாரணி மானவர்ப் பொருவது வழக்கன் றாதலாற் கூனல்விற் கணையொடு குறைவு றாததோர் தூநிறத் தடமருள் கென்று சொற்றனன். (இ-ள்.) அசுரர்களைப்போர்செய்து அழித்த அவ்வாயுதங்களால் பூமியிலுள்ளமனிதர்களைப் போர்செய்து அழிப்பது, முறைமையன்று: ஆதலால், (மனிதரை அழித்தற்கு வேறு) வளைந்த சிறந்த வில்லும் அம்பும் குறைவுபடாததான ஒரு பரிசுத்தமான தன்மையையுடைய தடாகத்தை அளித்தருள்வாய்' என்று கூறினார்;(எ - று.)-முன்பு ஒருகாலத்தில் பரமசிவன் தேவர்க்குப் பகைவரானார் யாவரையும்பொருது அழித்து அவ்வில்லையும் அம்பையும் அமிருதசரசில் வைத்திட்டனனென்பது, வரலாறு.] (351) + 214. | கையுறுசிலையுடன்கானவேடனென் றையுறவந்துடனணுகியென்னுடன் மெய்யுறவமர்புரிவினோதநாடொறு மையுறுகண்டனேமறப்பதில்லையே. |
* இச்செய்யுள்கள் சிறிது பாடபேதத்துடன் ஏட்டுப்பிரதிகளில் 217, 218- ஆம் பாடல்களாக உள்ளன. + குறிப்பு:- இது முதல் 220-வரையிலுள்ள பாடல்கள் முன்பு ஏட்டுப் பிரதிகளிலும் சங்கப்பதிப்பிலும் மாத்திரமே கண்டவை; அச்சிட்டுள்ள பிரதிகளில்இல்லை. |