(இ-ள்.) (அப்பொழுது), கொற்றவன் வாயிலில் நின்றவர்- வெற்றியையுடைய துரியோதனராசனது மனைவாசலில் (காவல் செய்து) நின்றவர்கள், எதிர் எதிர் - எதிரிலே எதிரிலே, யார்என - (நீ) யார்? என்று வினாவிக்கொண்டு, எய்துதலும் - வந்தவளவிலே-,விக்ரமன் - பராக்கிரமசாலியான கடோற்கசன்,-'அதிர் முரசம் கொடியோன்- முழங்குகிற பேரிகையையெழுதிய கொடியையுடைய தருமன், அரவம் கொடி அரசனிடை - பாம்புக்கொடியையுடைய துரியோதனனிடத்து, பகர்வான் - சொல்லும்படி, முதிர உரைத்தது - நன்றாகக் கூறினதான, ஒர் மொழி - ஒருவார்த்தை, உளது - இருக்கிறது; அ மொழி - அவ்வார்த்தையை, மொழிதர - (அத்துரியோதனனுடன்) சொல்லுதற்கு, வந்தனன் - வந்தேன்: யான்-, எதிர் அறு வெற்றிஅரி கொடியோன் மகன் - ஒப்பில்லாத சயத்தையுடைய சிங்கக்கொடியுடையனான வீமனது புத்திரன்,' என்றனன் - என்றுசொன்னான்: மொழி - கருவியாகுபெயராய், பலசொற்களாலாகிய வாக்கியத்தை யுணர்த்திற்று. பி - ம் :அச்சொன்மொழிந்திட. (367) 230.-கடோற்கசன் உத்தரவுபெற்று பாசறையுட்சென்று, சொன்னமை தெரிவிக்கத் துரியோதனனிடம் உடன்பாடுபெறுதல். அம்மொழிதீயுருமேறெனநீடவையரசர்செவிப்படவோர், செம்மொழியற்றவன்மொழிவழிசென்றொருசிறிதுமதித்தருளா, னும்மொழிவிட்டொரு மெய்ம்மொழிகேளென நோதகுநெஞ்சினனும், வெம்மொழிவித்தகவெம்மொழிநுந்தைதன் மெய்ம்மொழியென்றனனே. |
(இ-ள்.) அ மொழி - அந்தக்கடோற்கசன்வார்த்தை, தீ உரும் ஏறு என-கொடிய பேரிடிபோல, நீடு அவை அரசர் செவி பட - (பாசறையினுள்) பெரிய சபையிலுள்ள அரசர்களது காதுகளிற் பட, (உடனே), ஓர் செம்மொழி அற்றவன்மொழிவழி-நல்ல வார்த்தையொன்று மில்லாதவனாகிய துரியோதனன் கட்டளையிட்ட சொல்லின்படி, சென்று - (கடோற்கசன் உள்ளே) போய், ஒரு சிறிது உம் மதித்தருளான் - (அங்குள்ளவர்கள் எவரையும்) மிகச்சிறிதும் இலட்சியஞ் செய்யாதவனாய், 'நும் மொழி விட்டு- உங்கள் வார்த்தையைநிறுத்திவிட்டு, ஒரு மெய்மொழிகேள்-(நான் சொல்லும்) ஒரு சத்தியமான வார்த்தையைக் கேட்பாயாக,' என-என்று சொல்ல,- நோதகு நெஞ்சினன்உம்- (புத்திரசோகத்தால்) வருந்திய மனத்தையுடைய அத்துரியோதனன்,'வெம் மொழி - வித்தக - கடுமையான சொல்லையுடைய தூதனே!நுந்தை தன் மெய் மொழி- உன் பெரிய தந்தையின் உண்மை வார்த்தை, எ மொழி -எந்தவார்த்தை?' என்றனன்-என்று வினாவினான்; (எ - று.) செம்மொழி - நீதியும் இனிமையு முடைய வார்த்தை, தான் கூறும் தருமன் வார்த்தையை 'ஒரு மெய்ம்மொழி' என்றதனால், நும்மொழி பொய்ம்மொழி என்பது பெறப்படும்; இது - அருத்தாபத்தி. வித்தகன் - தூதன் : "வித்தகர் வினையுரைப்போர் விதியுளி |